இந்தியாவின் உலக அடையாளம் என்றால் அது நிச்சயமாக காந்தியின் முகம்தான். தேசத்தந்தை என்றும் மகாத்மா என்றும் உத்தமர் என்றும் போற்றப்படும் காந்தியடிகளின் சிந்தனைகள்- கொள்கைகள்-செயல்பாட்டு வழிமுறைகள் ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சிக்காரர்களுக்கு எதிரானதாக இருந்தவை மட்டுமல்ல, அவை இந்திய மக்களின் மனநிலையை நன்கு அறிந்து அவர்களை ஒருங்கிணைப்பதற்கேற்ற வகையிலும் இருந்தன. அதனால்தான் அவரால் இமயமலை முதல் குமரி முனை வரையிலும் மக்களால் அறியப்பட்ட முதல் தலைவராக உயர்ந்தார். இந்திய விடுதலைக்கு அடித்தளமிட்டார்.
காந்தியுடன் இணைந்திருந்தவர்கள் சிலர் அவரிடமிருந்து விலகிச் சென்றிருக்கிறார்கள். அவருடைய வழிமுறைகளை விமர்சித்திருக்கிறார்கள். வேறு இயக்கங்களைத் தொடங்கி நடத்தியிருக்கிறார்கள். அவருடைய அரசியல் சார்ந்த முடிவுகளைக் கண்டித்திருக்கிறார்கள். எனினும், காந்தியின் ஆளுமைத்திறனை யாரும் மறுத்ததில்லை. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் என காந்தியுடன் முரண்பட்ட பெருமகன்கள் பலரும் அவருடைய ஆளுமையை மறுத்ததில்லை. காந்தியின் நம்பிக்கைக்குரியவரான இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குக்கூட முரண்பாடுகள் வெளிப்பட்டிருக்கின்றன.
காந்தியின் கிராமப் பொருளாதாரக் கொள்கை, கதர்த் துணி விற்பனை, வருணாசிரமத்தைப் பின்பற்றியபடியே மதநல்லிணக்கம், ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமை சார்ந்த தனிக் கொள்கைகள் ஆகியவை அவருடைய காலத்திலேயே விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளன. எதிர்ப்புகள் வெளிப்பட்டுள்ளன. மாற்றுக் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பட்டியலின மக்களுக்கான தனித் தொகுதிகள் குறித்த பூனா ஒப்பந்தத்தில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் இன்றளவும் விவாதிக்கப்படுகின்றன. காந்திக்கும் நேதாஜிக்குமான முரண்பாடுகளின் விளைவுதான் இந்திய தேசியப் படை உருவாகக் காரணமாக அமைந்தது. காந்தியின் வருணாசிரமக் கொள்கையை பெரியார் விமர்சித்ததுடன், அவருடைய வருணாசிரம ஆதரவு நிலைப்பாடுதான் அவரது உயிருக்கு ஆபத்தாக அமையும் என நேருக்கு நேராக எச்சரித்தார். கடைசியில் அதுதான் நடந்தது.
அரசியல் கொள்கை ரீதியாக காந்தியை எதிர்த்தவர்கள் யாரும் அவர் மீது தனிப்பட்ட வன்மம் கொள்ளவில்லை. ஆனால், சனாதன-வருணாசிரமக் கொள்கைக்காகவே இயக்கம் நடத்தியவர்கள்தான் வருணாசிரமத்தின் மீது நம்பிக்கை கொண்டு ‘ராமராஜ்ஜியம்’ பேசிய காந்தியைக் கொன்றார்கள் என்பது கொடூர வரலாறு. காந்தியை கோட்சை கொலைசெய்த நிலையில், அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போடுவதற்கு ஆர்.எஸ்.எஸ்-இந்து மகா சபை அமைப்புகள திசை திருப்பியபோது, காந்தியைக் கொன்றவன் முஸ்லிம் அல்ல, அவனும் ஓர் இந்துதான் என்பதை டெல்லியில் நேருவும் தமிழ்நாட்டில் பெரியாரும்தான் வெளிப்படையாக அறிவித்தவர்கள்.
ஒவ்வொரு தலைவர் மீதும் விமர்சனங்கள் இருக்கும். அவர்கள் காலத்து கொள்கைகள் அடுத்துவரும் காலங்களில் மாற்றம் பெறக்கூடும். புதிய பார்வைகள் முன்வைக்கப்படும். காந்தியும் இதற்கு விதிவிலக்கானவரல்ல.. எனினும், இந்தியாவில் வாழும் அனைத்து மக்களின் உரிமைகளின் நலனிலும் அவர் அக்கறை கொண்டு, அவர்களிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதற்காக அவர் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதுதான் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவுக்கான அடிப்படையாகும். அந்த அடிப்படையைத்தான் காந்தி தன்னுடைய வார்த்தையில், ஆன்மா என்றார். அதனால் அவர் மகாத்மா எனப்பட்டார்.
இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்து-முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தையும் அதனால் ஏற்பட்ட உயிர்ப்பலிகளையும் தடுத்து நிறுத்துவதற்காக நவகாளி பகுதிக்கு அவர் மேற்கொண்ட பயணமும், அவருடைய உண்ணாவிரதப் போராட்டமும் அகிம்சைச் கொள்கையின் அழுத்தமான வரலாறு. பிரிவினையின்போது அமைதியை நிலைநாட்டிய காந்தியின் தேசமான இந்தியாவில்தான், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்த பிறகு, ஒற்றுமையைக் குலைக்கும் வகையிலான ஆட்சியாளர்களின் அரசியல் கொள்கைகளால் அச்சத்துடன் வாழக்கூடிய மக்கள் சமூகத்தின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது.
மதச் சிறுபான்மையினர், மொழிச் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சமுதாயத்து மக்கள், இறைச்சி உணவுகளை சாப்பிடுவோர், மாறுபட்ட பண்பாடுகளைக் கடைப்பிடிப்போர், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், பெண்கள் எனப் பல தரப்பினரையும் அச்சுறுத்தும் ‘ஒற்றையாட்சி’த் தன்மை முன்னெடுக்கப்படுகிறது. இது காந்தியின் ‘ஆன்மா’வை சிதைக்கின்ற அரசியல் கொள்கையாகும். இந்தியாவின் அடித்தளத்தை சிதைத்து, மதவெறி-பாசிசக் கலவையைக் கொண்டு ஆபத்தானக் கட்டமைப்பை உருவாக்குவதற்கானத் திட்டமாகும்.
அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று விரும்பிய தேசத்தந்தை காந்தியின் பிறந்தநாளில், அவருக்கு நேரெதிரான செயல்பாடுகளை எதிர்த்து ஒற்றுமையுடனும் உறுதியுடனும் நிற்பதே ‘காந்தி தேசம்’ என்பதற்கான அடையாளமாகும்.