கல்வி சிறந்த தமிழ்நாடு என்று பாரதியார் பாடியது போல இந்திய அளவில் கல்வியில் சிறப்பாக செயல்படும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வியில் சேர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த இலக்கை மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு அந்த இலக்கைவிட கூடுதலாக உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கையைக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த 100 உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் 30க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. பல்கலைக்கழக வரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறது.
முனைவர் பட்ட ஆய்வில் அதிகளவில் தமிழ்நாட்டவர்கள் ஈடுபடுவதுடன், பெண் முனைவர்கள் அதிகமாக உள்ள மாநிலமும் தமிழ்நாடுதான். கல்லூரி மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சியின் அடிப்படையில் நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களாக செயல்பட்டு, வேலைவாய்ப்பில் நல்ல பலனை அளித்து வருகின்றன. உயர்கல்வியை மனிதவளமாக மாற்றுவதில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டில், உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் நிர்வாகக் கட்டமைப்பு என்பது பாராட்டும்விதமாக இல்லை என்பதே கசப்பான உண்மை.
பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருப்பவர் மாநில ஆளுநர். இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கிறார். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மத்திய பா.ஜ.க அரசு தனது கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து இணை அரசு நடத்தும் ஜனநாயக விரோத செயலை மேற்கொண்டிருக்கிற நிலையில், தமிழ்நாடு-கேரளா போன்ற மாநிலங்கள் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக மாநிலத்தின் முதலமைச்சரே செயல்பட வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளன. அதற்கான ஒப்புதலை வழங்கவேண்டியவரும் ஆளுநராகவே இருப்பதால் இந்தத் தீர்மானங்கள் சட்டவடிவம் பெறுவது அத்தனை எளிதான நிலையில் இல்லை.
துணை வேந்தர்களை நியமிப்பதில் தொடங்கி எல்லா நிலைகளிலும் நிர்வாகச் சிக்கல்கள் உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற சிறப்பானக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் பல மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் டீன்கள் நியமிக்கப்படவில்லை. இது மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை கவனிக்க வேண்டிய நிர்வாகச் சிக்கலாகும்.
அம்பேத்கர் பெயரில் சட்டப்பல்கலைக்கழகம் அமைத்த வரலாறு தமிழ்நாட்டிற்க உண்டு. அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் நிறைய சட்டக்கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் நிரந்தர இணைப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாமல் காலிப் பணியிடங்கள் அதிகரித்திருப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகையப் போக்கு சட்டம் படித்து வழக்கறிஞர்களாக விரும்பும் எதிர்காலத் தலைமுறையை அழித்துவிடும் என்றும், நிரந்தர இணைப் பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால் அவற்றை மூடிவிடலாம் என்றும் நீதிமன்றம் கண்டித்துள்ளது. இதனை அரசின் சட்டத்துறை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகிறது.
தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் வரும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் நிர்வாகச் சிக்கல்கள் அதிகரித்தபடியே இருக்கின்றன. அண்மையில் நடைபெற்ற நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தில், விதிமீறல்கள் பற்றி எடுத்துக்காட்டிய முனைவர் வீ.அரசு மிரட்டப்பட்டிருக்கிறார். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கிறது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்.
உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகளின் நிர்வாகக் கட்டமைப்பும் சீராக இல்லை என்பதே உண்மை. விரிவுரையாளர் பணி நியமனம் எனப்து கடைசியாக 2006-2011 ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது. ஏறத்தாழ 15 ஆண்டுகளாக நியமனங்கள் இல்லை. 4000 விரிவுரையாளர் பணிக்கானத் தேர்வு அறிவிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்படுகிறது. இதற்கானக் கல்வித் தகுதியுடன் காத்திருப்பவர்களுக்கு ஓய்வு பெறும் வயதே வந்துவிடும் என்கிற அளவிற்கு விரிவுரையாளர் பணி நியமனத்தில் மெத்தனமானப் போக்குத் தொடர்ந்து நிலவுகிறது. இது கடும் அதிருப்தியை உருவாக்கியிருப்பதை உயர்கல்வித்துறையின் புதிய அமைச்சர் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டிய கட்டாயம் உள்ளது.
அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் 4 ஆண்டுகளாக உரிய பணி மேம்பாட்டு ஊதியம் இல்லாமல், சம்பள நிலுவைத் தொகை கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பேரணி-போராட்டம்-பெருந்திரள் முறையீடு என அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைக்கூட அரசுத் தரப்பில் கண்டுகொள்ளவில்லை.
இது போல இன்னும் நிறைய சிக்கல்கள் உண்டு. புறத்தோற்றத்தில் உயர்கல்வி சிறப்பாக இருக்கிறது. அதன் உள்புறத்தில்..?