பல நடிகைகளின் வாழ்க்கையில் விளையாடிய முன்னாள் தெலுங்கானா முதல்வரின் மகன் கே.டி.ராமாராவ்தான் நடிகை சமந்தா வாழ்க்கையிலும் விளையாடிவிட்டார் என்று கொளுத்திப்போட்டது பற்றி எரிகிறது. எதிர்ப்புகள் வலுத்தால் சமந்தா பெயரைச்சொன்னதில் இருந்து மட்டும் பின் வாங்கி இருக்கிறார்.
சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த சமந்தா நடிகையாகி தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வந்தார். நடிகர் ராகார்ஜூனா மகன் நாகசைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர்.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, ‘’தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகனும், பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ், 10 ஆண்டுகால ஆட்சியில் பல நடிகைகளின் வாழ்கையில் விளையாடி இருக்கிறார். பல நடிகைகளை சினிமாவை விட்டு வெளியேற்றி இருக்கிறார். நடிகை சமந்தா விவாகரத்து செய்ததற்கும் ராமாராவ்தான் காரணம் என்று சொன்னது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
அமைச்சர் கொண்டா சுரேகாவின் பேச்சுக்கு நடிகர் நாகார்ஜூனா, நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். ’’உங்களின் எதிரிகளை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள்’’ என்றார் நாகார்ஜுன். ‘’பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை தங்களின் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வது வேட்கக்கேடானது’’ என்று கண்டித்திருந்தார் நாக சைதன்யா. ‘’ என் விவாகரத்தில் எந்த அரசியலும் இல்லை. உங்கள் அரசியல் சண்டையில் என் பெயரை இழுக்காதீர்கள்’’ என்று கடுமையாக கூறி இருந்தார் சமந்தா.
சமூக வலைத்தளங்களிலும் அமைச்சருக்கு எதிராக கண்டனம் வலுத்தது. கே.டி.ராமாராவும், தன்னை இழிவுபடுத்துகிறார் என்று சுரேகாவுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
இதையடுத்து, சமந்தா குறித்து பேசியது வருத்தமாக இருக்கிறது. அதனால் சமந்தா பற்றி சொன்னதில் இருந்து பின் வாங்கிக்கொள்கிறேன். ஆனால், கே.டி.ராமாராவ் பற்றி சொன்னதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று உறுதி அளித்திருக்கிறார்.