கடந்த அக்டோபர் 1 அன்று இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் ஒருசேர கண்டனம் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள், தொடர்ந்து அண்டை நாடுகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு வலுவான ராணுவ பதிலடி கொடுக்க முடிவெடுத்துள்ள இஸ்ரேல், அதற்கு முழு வீச்சில் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
‘இஸ்ரேல் – ஈரான் இடையே நேரடி போர் மூண்டது ஏன்?’
கடந்த 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென தாக்குதல் நடத்தியது. இதில் 1200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. இதைத் தொடர்ந்து, காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியது.
ஹமாஸ் அமைப்பை அழிக்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் சிக்கி, இதுவரை சுமார் 40,000 அப்பாவி பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஓராண்டாக நடந்து வரும் இந்த கொடூரத் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு அவ்வபோது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தது.
ஹிஸ்புல்லா நடத்தி வரும் தாக்குதல்களை சமாளிக்க வடக்கு இஸ்ரேலிலும் தனது ராணுவப் படையை நிறுத்தியது இஸ்ரேல்.
இதனிடையே, கடந்த ஏப்ரல் 1 அன்று சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் துணைத் தூதரகத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஈரான் உயர்மட்ட ஜெனரல் மற்றும் 6 ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பழிவாங்கப் போவதாக அறிவித்த ஈரான், ஏப்ரல் 14-ம் தேதி இஸ்ரேல் மீது வரலாற்றில் முதல்முறையாக நேரடி ராணுவத் தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவிய 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் தாக்கி அழிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 19 அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் நேரடி ராணுவ தாக்குதலை நடத்தியது. ஈரானின் மூன்று இலக்குகளை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல், அதற்கு தற்போது வரை பொறுப்பேற்கவில்லை.
ஹமாஸ் தலைவர் படுகொலை
இந்நிகழ்வுகள் முடிவதற்குள் ஈரானின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற மசூத் பெசெஷ்கியன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேஹ் ஈரானில் படுகொலை செய்தது இஸ்ரேல்.
ரகசிய தாக்குதல் நடத்தி ஹமாஸ் தலைவரை படுகொலை செய்த இஸ்ரேலுக்கு ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க உள்ளதாகவும் ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனி அறிவித்தார்.
இருப்பினும், ஈரானின் புதிய அதிபராக பொறுப்பேற்ற மசூத் பெசெஷ்கியன் காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரப் படும் என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உறுதி தெரிவித்ததால் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் ராணுவ தாக்குதல் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை
ஹிஸ்புல்லா நடத்தி வந்த சிறிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வந்த இஸ்ரேல், கடந்த செப்டம்பர் 17-ம் தேதி லெபனான் முழுவதும் பேஜர்களை வெடிக்க செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்து வயர்லெஸ் தொலைத்தொடர்பு சாதனங்களை வெடித்ததன் விளைவால், ஹிஸ்புல்லா அமைப்பினர் பலர் கொல்லப்பட்டும் படுகாயமும் அடைந்தனர்.
ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளை குறிவைத்து லெபனான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வந்த இஸ்ரேல், தனது தாக்குதல் நடவடிக்கையை வலுப்படுத்தியது.
2006 ஹிஸ்புல்லா-இஸ்ரேல் போருக்கு பிறகு, இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
லெபனான் மீது தொடர் ராணுவத் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலின் செயல்பாடுகள் ஆபத்தான விளைவுகளுக்கு வழவகுக்கும் என ஈரான், துருக்கி ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.
இதனிடையே, கடந்த செப்டம்பர் 27-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
ஹிஸ்புல்லா தலைமையகம் மீது இஸ்ரேல் சுமார் 80,000 கிலோ எடை கொண்ட குண்டுகளை வீசியதில் சிக்கி ஹசன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதனால், ஆத்திரமடைந்த ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க உறுதி பூண்டது. அதன்படி, அக்டோபர் 1 அன்று இஸ்ரேல் மீது இரண்டாவது முறையாக நேரடி தாக்குதலை நடத்தியது ஈரான்.
இருக்கட்டமாக 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவிய ஈரான், “எங்களின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், எங்களின் அடுத்த தாக்குதல்கள் இன்னும் அழிவுகரமானதாக இருக்கும்” எனவும் எச்சரிக்கை விடுத்தது.
இந்த சூழலில், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தலைமையில் நேற்று(அக்டோபர் 2) நடந்த பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் ஈரானுக்கு வலுவான ராணுவ பதிலடி கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் ‘Axis of Resistance’
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், ஈரான் தலைமையிலான ‘Axis of Resistance’ என்ற அமைப்பில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஏமனின் ஹூத்தி அமைப்பு உள்ளிட்டவை ஒன்று சேர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் என அஞ்சப்படுகிறது.
“இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை ஆதரிப்பதாகவும், இஸ்ரேலிய எதிரிக்கு எதிரான எந்தவொரு கூட்டு இராணுவ நடவடிக்கைகளிலும் சேரத் தயாராக இருப்பதாகவும்”, ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹூத்தி அமைப்பு கூறியுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவினால், “ஈராக் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க தளங்களும் சொத்துக்களும் குறிவைக்கப்படும்” என்று ஈராக் எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழு டெலிகிராம் மூலம் எச்சரித்துள்ளது.
ஹிஸ்புல்லா ஏற்கனவே தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுடன் (IDF) தரைவழி மோதலில் ஈடுபட்டுள்ளது. லெபனானில் இஸ்ரேல் தனது இராணுவ படையெடுப்பை தொடங்கியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் எவ்வாறு தாக்குதல் நடத்தலாம்?
எரிவாயு மற்றும் எண்ணெய் சொத்துக்கள், அணுசக்தி தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட ஈரானின் முக்கியமான உள்கட்டமைப்பை இஸ்ரேல் தாக்கக்கூடும் என்று சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. ஈரானின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்வது உள்ளிட்டவையும் இஸ்ரேல் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நகர்வு எவ்வாறு இருக்கும் என்ற அச்சம் சர்வதேச நாடுகளிடையே அதிகரித்துள்ளது. நிலைமை இவ்வாறே சென்றால், மத்திய கிழக்கில் பிராந்திய போர் மூளும் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது.