வைகைப்புயல் என்று கொண்டாடப்பட்டு வந்தார் வடிவேலு. அவரின் நகைச்சுவைக்கு பின்னால் பலரின் உழைப்பு இருக்கிறது என்பது அவரின் ஒவ்வொரு நகைச்சுவை காட்சியிலும் தெரியும்.
தன்னுடன் நடித்து வந்த சிங்கமுத்துவிடன் ஏற்பட்ட நிலத்தகராறில் அவருக்கும் இவருக்கும் பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விட்டது. இதன் பின்னர், வடிவேலுவுடன் என்ன பிரச்சனை? அவருக்கு எப்படி எல்லாம் உதவி செய்தேன் என்று சிங்கமுத்து பேட்டிகள் அளித்துவர, என்னை எப்படி எல்லாம் நம்பவைத்து மோசடி செய்தார் என்று வடிவேலுவும் பேட்டிகள் அளித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் அந்த பிரச்சனை ஓய்ந்தது. அதன்பின்னர் வடிவேலுவும் விஜயகாந்துடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.
இந்த காலகட்டத்தில் வடிவேலுவுடன் பணிபுரிந்த நடிகர்கள் ஒவ்வொருவராக வடிவேலு தங்களுக்கு எப்படி எல்லாம் கொடுமை செய்தார் என்று யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்தனர். சிங்கமுத்துவும் பல யூடியூப் சேனல்களுக்கு வடிவேலு பற்றி பேட்டி அளித்து வந்தார்.
இந்த நிலையில், தன்னைப்பற்றி பொய்யான தகவலை சொல்லி பொதுமக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக தனக்கு 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று சிங்கமுத்துவிற்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் வடிவேலு.
இந்த வழக்கின் விசாரணையில் சிங்கமுத்து பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம்.
இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்தார் சிங்கமுத்து தரப்பு வழக்கறிஞர் அறிவழகன். அதை ஏற்று, 2 வாரங்களில் சிங்கமுத்து பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று உயர்நீதிமன்றத்தில், ’’ வடிவேலு பற்றி பேட்டி அளிக்கக்கூடாது என்று தடை கோர அவருக்கு எந்த அருகதையும் இல்லை. வடிவேலுவின் வெற்றிக்கு பின்னால் நான் இருந்தேன். அதே சமயம் அவருக்கு மன உளைச்சல் தரும் உள்நோக்கத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளிக்கவில்லை. அவர்தான் என்னைத் துன்புறுத்தும் நோக்கில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்’’என ஐகோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து பதிலளித்தார்.
இதற்கு வடிவேலு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் மறு விசாரனையை அக்டோபர் 24க்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.