பெண்களை வகைப்படுத்தி பேசிய எம்.எல்.ஏவின் பேச்சு சர்ச்சையாக கண்டனம் வலுத்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அமராவதி மாவட்டம் வரூத் -மோர்ஷி தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ தேவேந்திர புயார். இவர் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் ஆதரவாளர்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேவேந்திர புயார், ‘’ஒரு பெண் அழகாக இருந்தால் அவள் விவசாயியை திருமணம் செய்துகொள்ள விரும்ப மாட்டாள். நல்ல வேலையில் இருப்போரைத்தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவாள்.
அதே போன்று அழகில் குறைந்த பெண்கள் மளிகைக்கடைக்காரர் போன்றவர்களைத்தான் விரும்புவார்கள். இதில் மூன்றாவது ரக பெண்கள் விவசாயியின் மகனை திருமணம் செய்துகொள்ள விரும்புவாள். ஆனால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நல்ல தோற்றத்தில் இருப்பதில்லை’’ என்று பேசியுள்ளார்.
பெண்களை அழகின் அடிப்படையில் வகைப்படுத்தி பேசியது வைரலாகி பெரும் சரச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுக்கின்றன. ‘’பெண்களை இப்படி வகைப்படுத்துவதை யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இந்த சமூகம் உங்களுக்கு தக்க பாடம் கொடுக்கும்’’ என்று கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் பெண்கள் , குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சருமான யஷோமதி தாகூர்.