தமிழ்நாடு விவசாயிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை வழங்கிட வேண்டும் என்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, நீர்வளத்துறை, பட்டு வளர்ச்சி துறை ஆகிய துறைகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் சிறுதானியங்கள் பரப்பு உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறு தானிய இயக்கம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், மக்காச்சோளம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தரிசு நில மேம்பாடு திட்டம் மற்றும் திரவ உயிர் உரங்கள் விநியோகம் ஆகிய திட்டங்கள் ரூ. 6.55 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு 11.12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு 57, 808 விவசாயிகள் பயனடைந்து இருக்கின்றனர் என்று அரசு தெரிவித்துள்ளது.
அதே போன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விவசாயிகளின் நலன் பாதிக்காத வகையில் தர்மபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
காவிரி ஆற்றில் கிடைக்கப்பெறுகின்ற உபரி நீரை தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்புவதற்காக தர்மபுரி- காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகளிடம் இருந்து பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கைகள் அரசுக்கு சென்றன.
விவசாயிகளின் இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து பெண்ணாகரம் வட்டத்தில் இருக்கும் நெருப்பூர் அருகே காவிரி உபரிநீரை எடுத்து பயன்படுத்துவதற்கான சாத்திய கூறு பற்றி நீர்வளத்துறை ஆராய்ந்து வருகின்றது.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் காவிரி நதியின் உபரிநீரை பயன்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் பற்றி பல்வேறு நிலைகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படாத வகையில் இக்கோரிக்கையை செயல்படுத்துவது குறித்து சட்ட பூர்வமாக ஆராய்ந்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்கும் என்று தெரிவித்திருக்கிறது.