நடிகர்கள் இனி நாடாள முடியாது. விஜயகாந்த் தனக்கு நெருக்கமான நண்பர் என்று பெரிமிதமாக சொல்லிக்கொண்டாலும் கூட, எம்.ஜி.ஆருக்கு பிறகு இனி நடிகர்கள் யாரும் நாடாள முடியாது என்று விஜயகாந்த் இருந்தபோதே வெளிப்படையாகச் சொன்னார் நடிகர் சத்யராஜ்.
ரஜினிகாந்த் கட்சி தொடங்க முயற்சித்தபோதும் கூட பலரும் இதே கருத்தை முன் வைத்தனர்.
அதற்கு தகுந்த மாதிரி சிவாஜி, டி.ராஜேந்தர், பாக்யராஜ் என்று கட்சி தொடங்கி தோல்வி அடைந்தனர்.
சத்யராஜைப் போலவே பலரும் சொல்லி வரும் நிலையில், கார்த்தி சிதம்பரம் எம்.பியும் அதே கருத்தை சொல்லி இருக்கிறார்.
விஜய்யின் தவெக முதல் மாநில மாநாடு குறித்த கேள்விக்கு, ‘’ திரை உலகில் வந்து தனக்கென்று ஒரு கட்சியை உருவாக்கி, ஒரு கொடியை அமைத்து வெற்றி கண்டவர் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவர்தான். வேறு எந்த நடிகரும் கட்சி தொடங்கி வெற்றி கண்டதில்லை. ஜெயலலிதா கூட இருக்கின்ற ஒரு கட்சியில் இணைந்து தான் தலைவர் ஆனார். எம்.ஜி.ஆரை தவிர வேறு யாரும் தனியாக கட்சி தொடங்கி வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை’’ என்று கூறியிருக்கிறார்.