தலித்துகள் என்ன சாப்பிடுகிறார்கள்? எப்படி சமைக்கிறார்கள்?அவர்களின் சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றிய அறியும் ஆர்வத்தில் தலித் வீட்டிற்கு சென்று சமைத்து சாப்பிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார் ராகுல்காந்தி.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் வசிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அஜய் துக்காராம் சனாடே. அவர் விடுத்த அழைப்பின் பேரில் அஜய் துக்காராம் சனாடே வீட்டிற்கு சென்று சமையலைக்கும் சென்று அஜய் தம்பதியினருடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்ட வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி.
அந்த வீடியோவுடன், ’’இன்றைக்கும் கூட தலித் சமயலறை பற்றி வெகு சிலருக்குத்தான் தெரியும். ‘’மராத்வாடாவின் தலித் சமயலறைகள்’’ எனும் நூலினை எழுதி இருக்கும் ஷாஹு படோலே எழுத்தாளர், “தலித்துகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.” என்று எழுதி இருக்கிறார்.
இதன் பின்னர் எனக்கு, தலித்துகள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்படி சமைக்கிறார்கள், அவர்களின் சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றிய ஆர்வத்தில், அஜய் துக்காராம் சனதே ஜி மற்றும் அஞ்சனா துக்காராம் சனடே ஜியுடன் ஒரு மதியம் கழித்தேன்.
மஹாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு என்னை மரியாதையுடன் அழைத்து, சமையலறையில் அவருக்கு உதவ எனக்கு வாய்ப்பளித்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து கீரை, துவரம்பருப்பு, கத்தரிக்காய் கொண்டு மசியல் தயாரித்தோம்.
சாப்பிடும்போது, சாதி, சாதி பாகுபாடு குறித்த தங்களின் அனுபவங்களை சனாடே தம்பதியினர் பகிர்ந்து கொண்டனர். தலித் உணவு பற்றிய விழிப்புணர்வு இல்லாமை குறித்தும், இந்த கலாச்சாரத்தை ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம் பற்றியும் விவாதித்தோம்.
அரசியலமைப்பு பகுஜன்களுக்கு பங்குகளையும் உரிமைகளையும் வழங்குகிறது, அந்த அரசியலமைப்பை நாங்கள் பாதுகாப்போம். ஆனால், ஒவ்வொரு இந்தியனும் தன் இதயத்தில் சகோதரத்துவ உணர்வோடு முயற்சி செய்தால் மட்டுமே சமுதாயத்தில் அனைவரையும் உள்ளடக்கியும் சமத்துவமும் சாத்தியமாகும்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.
ராகுலின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.