போராட்ட காலம் ஒரு மாதத்தை எட்டும் நிலையிலும் சாம்சங் ஆலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு இப்பிரச்சனையை தீர்க்க மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவினை அமைத்தும், அக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையிலும் ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
தொழிலாளர்களின் எல்லா கோரிக்கைகளையும் ஏற்கத்தயார். ஆனால், சிஐடியு தொழிற்சங்கத்தை ஏற்க வேண்டும் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் ஏற்க முடியாது என்கிறது சாம்சங் ஆலை. அந்த ஒரே ஒரு கோரிகைதான் முக்கியமானது என்று பிடிவாதமாக நிற்கின்றனர் தொழிலாளர்கள்.
இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’உணவு, ஊதியம், கழிவறை உள்ளிட்ட சாம்சங் ஆலை தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் சாம்சங் நிறுவனம் ஏற்றுக்கொண்டுவிட்டது. ஒரே ஒரு கோரிக்கைதான் மீதம் இருக்கிறது. அது சிஐடியு யூனியனை அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான்.
சிஐடியு யூனியன் அங்கீகாரம் விசயம் நீதிமன்றத்தில் இருக்கிறது. தீர்ப்பில் அங்கீகாரம் கிடைத்தவுடன் அந்த கோரிக்கையும் ஏற்கப்படும். அவ்வளவுதான். இதற்கு மேல் இதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று தெரியவில்லை? எதற்காக இன்னும் இந்த போராட்டத்தை நீட்டிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
முதலமைச்சரே இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு மூன்று அமைச்சர்கள் குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தச்சொல்லி இருக்கிறார். இந்த குழுவிர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் போராட்டம் நீடிப்பது அவ்வளவு நல்லதாக இருக்காது.
ஏன் என்றால், ஏற்கனவே போராட்டம் நடத்தும் ஒவ்வொரு தொழிலாளர்களும் ஒரு மாத ஊதியத்தை இழந்துள்ளனர். இன்னும் போராட்டத்தை நீடிப்பது ஒவ்வொரு நாளும் அவர்களின் குடும்பத்திற்கு சம்பள இழப்பு ஏற்படும். அதனால் அவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.