சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா எல்லாத்தையும் நாம் எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தேன் வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். இதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை என்று பேசியிருந்தார் அப்போது அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின்.
தற்போது ஆந்திராவில் துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அன்றைய பேச்சை அண்மையில் கடுமையாக சாடினார்.
‘’சனாதனம் என்பது ஒரு வைரஸ். அதை ஒழிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் சொல்லி இருக்கிறார். இதை யார் சொன்னதோ அவருக்கு சொல்கிறேன். சனாதன தர்மத்தை உங்களால் அழிக்க முடியாது. உங்களைப்போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். சனாதனம் அப்படியேதான் இருக்கிறது’’ என்று பேசி இருந்தார் பவன் கல்யாண்.
இதுகுறித்த கேள்விக்கு, ’’okay, lets wait and see’ என்று சொன்னார் துணை முதல்வர் உதயநிதி.
அன்றைக்கு சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்னபோது உதயநிதியின் உருவப்படத்தை நாடெங்கிலும் உள்ள பாஜக மற்றும் ஆர்.எஸ். எஸ். பிரமுகர்கள் போட்டு மிதித்தனர். தற்போதும் ஆந்திராவில் உள்ள பலர் , துணை முதல்வர் உதயநியின் போட்டோவை மிதித்து அவமதிக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின், ‘’என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது’’ என்கிறார்.
தன் புகைப்படத்தை அவமதிப்பதை, ‘’ கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்’’ என்கிறார்.
தனக்கு மட்டும் இந்த எதிர்ப்பு அல்ல. சனாதனத்திற்கு எதிரான நிலையில் திராவிட இயக்கம் சந்தித்து வரும் பிரச்சனைதான் இது என்பதை, ’’தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீது ஏச்சுக்களையும் , பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை’’ என்று சொல்லும் துணை முதல்வர், ’’அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் – மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி’’ என்கிறார்.
அதுமட்டுமல்லாது, தன்னை அவமதிப்பதைக் கண்டு தனது தொண்டர்கள் கோபமுற வேண்டாம் என்று சொல்லும் துணை முதல்வர், ’’என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்’’ என்று தன்னை அவமதித்தோருக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.