விவசாயத் தொழிலாளர்கள் திரண்டிருக்கும் மாநாட்டில் சோவியத் யூனியனின் பண்ணை விவசாயத்தில் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதை பெருமையுடன் முழங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள்தான். காவிரி டெல்டா மாவட்டத்திற்குள் கதிர் அடிக்கும் இயந்திரம் வந்தபோது விவசாய தொழிலாளர்களின் கூலி வேலை பாதிக்கப்படும் என்று சிவப்புக் கொடி பிடித்து எதிர்ப்புத் தெரிவித்தவர்களும் கம்யூனிஸ்டுகள் தான்.
ஸ்புட்னிக் விண்கலத்தை ரஷ்யா ஏவியபோது அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்பட்டு, அறிவியல் வளர்ச்சியால் இனி மனிதன் ஆகாயத்திலேயே வீடுகட்டி வாழலாம் என்றவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்தியாவில் கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்தபோது, மனிதர்களுக்கு வேலை பறிபோய்விடும் என்று எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்களும் அவர்கள்தான்.
காவிரி டெல்டாவில் இப்போது அறுவடைக்கு இயந்திரம் வந்துவிட்டது. காலம்காலமாக விவசாயக் கூலிகளாக இருந்த குடும்பத்தின் அடுத்த தலைமுறையினர் உயர்கல்வி கற்று பல வேலைகளுக்கும் சென்றுவிட்டனர். பண்ணையாளர்களின் அதுப்பும் அடங்கி விட்டது.
இந்தியா முழுக்க கம்ப்யூட்டர் வந்தபிறகு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் சம்பளமும் அதிகமானது. இந்தியா கம்ப்யூட்டர் மயம் ஆவதற்கு முன்பே தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கப்பட்டு, டைடல் பூங்காக்கள் உருவாகி இங்குள்ள இளைஞர்கள் சிலிகான் வேலி வரை சென்றுவிட்டார்கள். கம்ப்யூட்டரால் வேலை போகும் என புரட்சி நடத்திய கம்யூனிஸ்டுகளும் இப்போது கணினி தொழில்நுட்பத்தில் பிஸியாக இருக்கிறார்கள்.
கோவை பஞ்சாலைகளில் கம்யூனிஸ்டுகளின் சங்கமே முதன்மையானது . அந்த சங்கங்கள் வலுவடைந்த பின்னர் பஞ்சாலைகள் பஞ்சு பஞ்சாகி அதன் தொழிலாளர்கள் சோற்றுக்கு அலைய வேண்டிய அவலம் ஏற்பட்டது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் இன்று பெயர் பெற்ற கோயம்புத்தூர் தற்போது பாஜகவின் கோட்டை என்ற பெயரை பெற்றிருக்கிறது. கம்யூனிஸ்ட்கள் என்ன செய்வார்கள்? அவர்களால் எப்படி அதை தடுக்க முடியும்? பர்னிச்சரை உடைத்ததில்
பயிர்த் தொழில் தொடங்கி ஃபாக்ஸ்கான் நிறுவனம் வரை கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்கம் ஏற்படுத்திய தாக்கத்தை இப்போதும் நாம் கண்கூடாக காணலாம்.
கம்யூனிஸ்டுகள் உதாரணம் காட்டிய சோவியத் யூனியன் சல்லி சல்லியாகிவிட்டது. அவர்கள் பெருமைப் போற்றிய சீனா தாராளவாதப் பொருளாதாரத்தின் மிகப் பெரிய சந்தையாகிவிட்டது. 35 ஆண்டுகாலம் கம்யூனிஸ்ட்டுகள் கோட்டைக் கட்டி ஆண்ட மேற்கு வங்காளம் மம்தாவிடம் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. அங்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்திற்கு ஓட்டுப்போட்டவர்கள் தாமரையை மலர வைப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளின் பங்கு தனித்துவமானது. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று போற்றப்படும் சிங்காரவேலர் ஒரு தமிழர். நூறு ஆண்டுகளுக்கு முன்பு மே தினத்தை அவர்தான் கொண்டாடினார். தொழிலாளர்களின் தோழரான ப.ஜீவானந்தம் கம்பராமாயணத்தில் மானுடத்தை தேடிய ஆராய்ச்சியாளர்.
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளின் புரட்சி தனி ரகம். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் எனப் புரட்சியாளர்களைப் பற்றி நமக்கு பாடம் சொல்லிக் கொடுததுவிட்டு அவர்கள், ‘புரட்சித்தலைவர்’ எம்.ஜி.ஆரை முதலமைச்சர் ஆக்க முன்வரிசையில் நின்றார்கள். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடும் தகுதியிழந்த ‘புரட்சித்தலைவி’ ஜெயலலிதாவை வலிந்து ஆதரித்து கூட்டணி அமைத்தவர்களும் அவர்கள்தான். ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததும் நடுராத்திரியில் அவர் வீடு தேடிப் போய் முதல் ஆதரவு தெரிவித்ததும், முதலமைச்சர் வேட்பாளராக்கி கூட்டணி அமைத்ததும் கம்யூனிஸ்டுகள்தான்.
செய்த தவறுகளைப் பற்றி பொலிட்பீரோ கூட்டி அலசி ஆராய்ந்து, மீண்டும் மீண்டும் புதுப்புதுத் தவறுகள் செய்வது கம்யூனிஸ்டுகளின் பண்பு. மாற்றம் ஒன்றே மாறாதது என்றார் மார்க்ஸ். மாற்ற முடியாதவர்கள் இங்குள்ள அப்பாவி கம்யூனிஸ்ட்கள்.