இந்தியாவில் திடீர் தொழிலதிபர்கள் பலர் உருவாகியிருக்கிறார்கள். அரசியல் தொடர்பு-ஆட்சியாளர்களிடம் செல்வாக்கு இவற்றையெல்லாம் மூலதனமாக்கிக் கொண்டு உலகப் பணக்காரர்களாகும் தொழிலதிபர்களை அண்மைக்கால இந்தியா பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. டாடா நிறுவனம் இதில்தான் மாறுபட்ட வளர்ச்சியைக் கண்டது.
அரசியல் என்பது தொழில் மீது அதிக தாக்கத்தை உண்டாக்கும் என்பது டாடா நிறுவனமும் அறியும். அந்த அரசியல் தாக்கத்தை தங்கள் நிறுவனத்தின் மீது படியாமல் பார்த்துக்கொண்டு, அரசியல் தளத்தில் தங்கள் நிறுவனத்தினுடைய தாக்கத்தை ஏற்படுத்தியது டாடாவின் வெற்றியாக அமைந்தது. அதனால்தான் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, டாடாவை இந்தியாவின் ஒரு நபர் திட்டக்குழு என்று பாராட்டினார்.
பார்சி இனத்தைச் சார்ந்த ஜாம்ஷெட்ஜி டாடா என்பவர்தான் டாடா நிறுவனத்தைத் தொடங்கியவர். தன் தந்தையிடம் கற்ற வணிக அனுபவத்தால் ஒரு பழைய எண்ணெய் ஆலையை வாங்கி, துணி ஆலையாக மாற்றினார். பிரிட்டிஷ் ஆட்சியில் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சுதேசி இயக்கம் வளர்ந்தபோது, உள்நாட்டு உற்பத்தி என்பதை டாடா நிறுவனம் முன்னெடுத்தது. தேசத்தந்தை காந்தி சத்தியாகிரகம் நடத்தி உப்பு எடுத்தார். சுதேதி இயக்கத்தை வலியுறுத்தினார். டாடா நிறுவனம் சுதேதி துணி ஆலையைத் தொடங்கியது. இன்று உப்பு முதல் விமானம் வரை பல தொழில்களிலும் வெற்றிகரமாகவும் மக்களின் நம்பிக்கைக்குரியதாகவும் உள்ளது. டாடா குடும்பத்தின் வழி வந்த ரத்தன் டாடாவும் தொழில்துறையில் இந்தியாவின் முகமாக நிறுவனத்தை வளர்த்தெடுத்தார்.
வெளிநாட்டு நிறுவனத் தயாரிப்புகளுக்கு எந்தளவுக்கு இந்தியாவில் வரவேற்பு இருக்கிறதோ, அதே போன்ற தயாரிப்புகளை இந்தியாவிலேயே உருவாக்கி விலை குறைவாகவும், தரம் கெடாமலும் தந்தால் அதற்கு தனி மார்க்கெட் உண்டு. ஜாம்ஷெட்ஜி டாடா, ஜே.ஆர்.டி.டாடா ஆகியோரைப் போல ரத்தன் டாடாவும் அதே பாணியில் தங்கள் நிறுவனத்தை வளர்த்தார்.
30 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு இந்திய குடும்பத்தின் கனவும் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதே. அப்போது கார் என்பது பணக்காரர்களுக்குரியதாகக் கருதப்பட்டது. புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்தபிறகு, நடுத்தரக் குடும்பத்து இந்தியர்களின் கனவாக கார் மாறியது. அந்தக் கனவை நனவாக்க டாடா தயாரிப்பு கார்கள் உதவின. உள்ளூர் கவுன்சிலர் முதல் பலரும் டாடா தயாரிப்பான சுமோ காரில் பயணிக்கத் தொடங்கினர். அதற்கேற்ப மாதத் தவணை போன்ற வசதிகளும் அமைந்தன. இருப்பினும், மாத சம்பளக்காரர்களும் கார் வாங்கக்கூடிய வகையில் நானோ காரை அறிமுகப்படுத்தினார் ரத்தன் டாடா.
ஒரு இலட்ச ரூபாய்க்கு ஒரு கார் என்பது 15 ஆண்டுகளுக்கு முன் ஆச்சரியம்தான். சிலருக்கு அது 4 மாத சம்பளம். சிலருக்கு 10 மாத சம்பளம். கணவனும் மனைவியும் சம்பாதிக்கக் கூடியவராக இருந்தால் 4 மாத சம்பளம் என்பது 2 மாத சம்பளத் தொகையாக ஆகிவிடும். கார் வாங்குவதும் எளிதாகிவிடும் என்பதுதான் டாடாவின் கணக்கு. இந்திய மனநிலை என்பது 5 ரூபாய்க்கு வாங்கியதை 500 ரூபாய் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வதாகும். அதனால் நானோ வாங்கினால் ஒரு லட்ச ரூபாய் கார்தான் என்று அக்கம்பக்கத்தினருக்குத் தெரிந்துவிடும் என்பதால் நானோவைத் தவிர்த்த இந்தியக் குடும்பங்களும் உண்டு.
அதிக விலைக்கு கார் வாங்கி பெருமைப்படும் காலம்வரை வாடகை கார்களில் அவர்கள் பயணித்தது பெரும்பாலும் டாடா இண்டிகாவில்தான். குட்டி யானை எனப் பெயர் பெற்ற டாடா ஏஸ் வாகனம் பல எளிய குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஷேர் ஆட்டோ பயணிகளுக்கும் டாடாவின் வாகனங்களே உதவுகின்றன.
தொழிலின் வளர்ச்சி என்பது நுகர்வோருக்கு நீடித்த பயனளிப்பதாக இருக்க வேண்டும் என்பதுடன், தனது நிறுவன ஊழியர்களுக்கான பாதுகாப்பையும் வசதிகளையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதிலும் டாடா நிறுவனம் கவனம் செலுத்தி வந்தது. அதுமட்டுமின்றி, சமுதாயத்தின் வளர்ச்சிக்காக தனது இலாபத்தின் பெரும் பகுதியை கல்வி, மருத்துவம், ஊரக வளர்ச்சி இவற்றிற்காக அள்ளிக் கொடுத்தார் ரத்தன் டாடா. தொழில்கட்டமைப்பை சமுதாய வளர்ச்சிக்கான இலக்காக மாற்றி, அரசியல்வாதிகளை இயல்பாக எதிர்கொண்ட இந்திய தொழிலதிபர் என்பதுதான் ரத்தன் டாடாவின் பெருமைகளில் சிறப்பானது.