ஒரு வருடத்தில் 40 ரயில் விபத்துகள் நடந்துள்ளதால் மத்திய அரசுக்கு கண்டனங்கள் வலுக்கின்றன.
ரயில் விபத்துகள் அன்றாட நிகழ்வாகிப்போனதால் என்னதான் நடக்கிறது ரயில்வே துறையில்? என்ற கேள்விகளை மக்கள் ஆவேசத்துடன் கேட்டு வருகின்றனர்.
கடந்த 2023ஆம் ஆண்டில் நிகழ்ந்த பாலசோர் ரயில் விபத்தில் 293 பேர் உயிரிழந்த சோகம் அரங்கேறியதில் இருந்தே ரயில் விபத்துகளை கட்டுப்படுத்தக்கோரி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு சென்னை அருகே கவரைப்பேட்டையிலும் நிகழ்ந்து விட்டது ரயில் விபத்து. சரக்கு ரயிலும் பயணிகள் ரயிலும் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 1650 பயணிகள் இருந்த போதிலும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையில் தண்டவாளத்தில் போல்டுகள் கழற்றப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து முன்னாள் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ’’2023-24 ஆண்டில் மொத்தம் 40 ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதன் மூலம் 313 பயணிகளும், 4 ரயில்வே பணியாளர்களும் மரணமடைந்துள்ளனர்’’ என்கிறார்.
அவர் மேலும், ’’பிரதமர் மோடி அவர்களே ரயில் விபத்துகள் அன்றாட நிகழ்வாகி் விட்டது என்ற மக்களின் குரல் எட்டுகின்றதா உங்கள் காதுகளில்? ’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.