சபாநாயகர் அப்பாவு பேச்சால் அதிமுகவின் நற்பெயருக்கு எப்படி களங்கம் ஏற்பட்டது? என்று கேள்வி எழுப்பியதோடு அல்லாமல், அவதூறு வழக்கை தாக்கல் செய்ய என்ன அடிப்படை உரிமை உள்ளது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
கடந்த 2023ஆம் ஆண்டில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ’’முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நேரத்தில் 40 அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்தார்கள். ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்’’ என்று தெரிவித்திருந்தார்.
சபாநாயகர் அப்பாவு பேசிய இந்த பேச்சு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது என்று அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இன்று 17.10.2024ல் நடந்த விசாரணையின்போது, ‘’அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ள பாபு முருகவேலுக்கு எதிராக மனுதாரர் கருத்துக்கள் தெரிவிக்கவில்லை’’ என்று அப்பாவு தரப்பு வழக்கறிஞர் வில்சன் வாதிட, ‘’கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியிருந்ததால் கட்சி சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளோம். கட்சியும் இதற்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது ’’ என்று பாபு முருகவேல் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
அரசியல் கட்சியின் சார்பாக வழக்கு தாக்கல் செய்வதாக இருந்தால் கட்சியின் தலைவரோ, பொதுச்செயலாளரோ தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டபோது குறுக்கிட்ட நீதிபதி, ‘’அப்பாடு தனது பேச்சில் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. உங்கள் கட்சிக்கு அவதூறு ஏற்படும் வகையிலும் பேசவில்லை. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கற்பனையாக சொல்லக்கூடாது’’ என்றார்.
நீதிபதி மேலும் , ‘’40 எம்.எல்.ஏக்களில் எவரும் வழக்கு தாக்கல் செய்யவும் இல்லை. அவதூறு வழக்கை தாக்கல் செய்ய என்ன அடிப்படை உரிமை இருக்கிறது?’’ என்ற கேள்வியை எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி, ‘’அதிமுக 5 ஆண்டுகள் பதவி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்தது. அந்த சமயத்தில் எவரும் கட்சி தாவவில்லை. அப்படி இருக்கும் போது சபாநாயகரின் பேச்சினால் எப்படி அதிமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது? ‘’ என்ற கேள்வியை எழுப்பினார்.
இதன் பின்னர், சபாநாயகர் அப்பாவு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெறூவதற்கு கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விலக்கு பெற்றுக்கொள்ள முடியும் என்ற நீதிபதி, தான் எழுப்பிய கேள்விகளுக்கு வரும் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி பாபு முருகவேலுக்கு உத்தரவிட்டார்.