தமிழ்நாட்டிற்கு ஆளுநராக வந்தது முதல் தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடி வருகிறார் ஆர்.என்.ரவி என்ற விமர்சனம் உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் விவகாரத்தில் இந்த விமர்சனம் அதிகமாக எழுந்துள்ளது. இதனால் கட்சிக்கு பாதகம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் பாஜக தலைமை எடுத்துள்ள அதிரடி முடிவுகளால் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என்று தகவல்கள் பரவுகின்றன.
தூர்தர்சன் சென்னை அலுவலகத்தில் கடந்த 18ஆம் தேதி அன்று நடந்த விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்’ என்ற வரி தவிர்க்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்ததால் அவர் அனுமதியுடன் தான் இந்த வரி தவிர்க்கப்பட்டுள்ளது என்ற சர்ச்சை எழுந்தது.
பலரும் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், ‘’ ஆளுநரா? ஆரியரா?’’ என்று வெகுண்டெழுந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
’’திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்’’ என்று காட்டமாகவே தனது கண்டனத்தை பதிவு செய்தார் முதலமைச்சர்.
’’கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் , தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?’’ என்ற கேள்வியை எழுப்பிய முதலைச்சர், ‘’தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்’’ என்று வலியுறுத்தி இருந்தார்.
முதலமைச்சரின் கடும் கண்டனத்திற்குப் பின்னர் இந்த விவகாரம் பெரிதானது. தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடிய இந்த சர்ச்சையினால் தமிழ்நாடு பாஜகவின் வளர்ச்சிக்கு பாதகம் வந்துவிடுமோ என்று தமிழ்நாடு பாஜக சீனியர்கள் டென்ஷன் ஆகி, விவகாரத்தை விரிவாக டெல்லி தலைமைக்கு தெரிவித்திருக்கிறார்கள். டெல்லி பாஜக தலைமைக்கு போயிருக்கிறது. உளவுத்துறையும் தனியாக ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது.
இதைப் படித்துப் பார்த்த பிரதமர் மோடி அதிர்ந்து போய், பிரச்சனையின் தீவிரம் கருதி, ஆளுநரை உடனே தொடர்புகொண்டு பேசுமாறு அமித்ஷாவுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். அமித்ஷாவும் உடனே ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தொடர்பு கொண்டு பேசி கோபத்தை கொட்டி இருக்கிறார். அதற்கு ஆளுநர் ரவி, ‘’அது ராஜ்பவன் விழா அல்ல. தூர்தர்சன் விழா. நான் விருந்தினராக சென்றேன். அவ்வளவுதான். மற்றபடி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் அந்த வரி நீக்கம் குறித்து நானும் தூர்தர்ஷனிடம் விளக்கம் கேட்டுள்ளேன். மத்திய அரசு சார்பில் நீங்களும் விளக்கம் கேட்டுப்பெறுங்கள்’’ என்று ஆத்திரத்தை கொட்டி இருக்கிறார்.
உடனே அமித்ஷா, உங்கள் தரப்பு நியாயத்தை விளக்கமாக கடிதம் எழுதி அனுப்புங்கள் என்று சொலி இருக்கிறார். அதோடு நில்லாமல், இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார் அமித்ஷா. இதனால் ஆளுநர் ரவி, தனது பதவியை ராஜினாமா? செய்யப்போகிறார் என்ற தகவல் பரவுகிறது.
ஆர்.என்.ரவிக்கு பதிலாக முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரை தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கும் முடிவில் இருக்கிறது பாஜக தலைமை என்கிறது கமலாலய வட்டாரம்.