வக்ஃப் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தில் காரசாரமாக உரையாற்றிய திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி கல்யாண் பானர்ஜி, தண்ணீர் பாட்டிலை உடைத்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வக்ஃப் (திருத்த) மசோதா 2024 தொடர்பான கூட்டுக் குழுவின் தலைவரும் பாஜக எம்பியுமான ஜகதாம்பிகா பால் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது, பாஜகவின் அபிஜித் கங்கோபாத்யாய உடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி கல்யாண் பானர்ஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கோபத்தில், ஒரு கண்ணாடி தண்ணீர் பாட்டிலை உடைத்து, ஜெகதாம்பிகா பாலை நோக்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது. இதில், கல்யாண் பானர்ஜியின் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், கூட்ட அறையில் இருந்து ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி மற்றும் ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் வெளியே அழைத்து வந்தனர்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, கல்யாண் பானர்ஜி வக்ஃப் கூட்டுக் குழுவில் இருந்து ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதாம்பிகா பால், “என்னுடைய 40 ஆண்டுகால நாடாளுமன்ற வாழ்க்கையில், நான் பல குழுக்களின் தலைவராக இருந்திருக்கிறேன். பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும், இன்று நடந்தது போன்ற ஒரு சம்பவத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இந்தச் சம்பவம் குறித்து சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கூறியுள்ளேன்.
இது ஒரு பெரிய சம்பவம். மூத்த வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் அதன் உறுப்பினரும் அவர்களது நடத்தை பற்றி சிந்திக்க வேண்டும். தங்கள் குற்றங்களை தெரிவிக்க நான் எல்லோருக்கும் வாய்ப்பு தருகிறேன். எனது தலைமை வேண்டாம் என்றால் நான் இந்தக் குழுவில் இருந்து நான் ராஜினாமா செய்ய தயார்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழலில், வக்ஃப் (திருத்தம்) மசோதா 2024-க்கான கூட்டுச் செயற்குழுவின் தலைவர் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை வெளிப்படுத்தியது துரதிருஷ்டவசமானது என்று திமுக எம்.பி அ.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கூட்டுக் குழுவின் நடவடிக்கைகள் இரகசியமானவை என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும். கூட்டத்தில் விரும்பத்தகாத சம்பவம் நடந்தாலும், தலைவர் அவசரமாக கூட்டங்களை நடத்தும் அணுகுமுறை, உறுப்பினர்களுக்கும், குடிமக்களுக்கும் நீதி கிடைக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தடைகளை மீறி நமது ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களை நிலைநிறுத்த போராடுவோம், எனவும் திமுக எம்.பி அ.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.