பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட திருமணங்களைத் தலைமையேற்று நடத்திய தமிழ்நாடு முதலமைச்சர், அந்த பதினாறு செல்வங்கள் என்னவென்று முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுநாதம் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி, ‘அளவோடு பெற்று வளமோடு வாழ்க’ என்றுதான் நாம் வாழ்த்துகிறோம். எனினும், கூடுதலாகப் பெற்றுக் கொள்ள வேண்டுமா என்ற வினா இப்போது எழுகின்றது என்பதையும் குறிப்பிட்டார். அவருடைய இந்தப் பேச்சு, தமிழ்நாடு முதலமைச்சர் தனது மாநில மக்களை, அதிகக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளச் சொல்கிறார் என்பதாக ஊடகங்களில், குறிப்பாக வடமாநிலத் தொலைக்காட்சிகளிலும், அங்குள்ளவர்களின் சமூக வலைத்தளப் பக்கங்களிலும் வெளிப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சரின் பேச்சு இப்படி வெளிப்பட்டதற்கு காரணம், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுதான். ஒரு சில நாட்களுக்கு முன்பு அவர் பேசும்போது, ஆந்திர மாநிலத்து மக்கள் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்ற வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அதையேதான் தமிழ்நாடு முதலமைச்சரும் சொல்கிறார் என்று தென்னிந்தியாவின் இரண்டு முதலமைச்சர்கள் பேசியதைப் பெரிதாக்கின வட இந்திய ஊடகங்கள். ஆந்திர முதலமைச்சர் அப்படிப் பேசுவதற்கு காரணம் என்ன?
ஆந்திராவிலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது, தலைநகரம் ஹைதராபாத்தும் தெலங்கானா வசமானது. அதனால், ஆந்திராவுக்குப் புதிய தலைநகரம் உள்பட பல வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானது. அதனை மத்திய அரசு சரியான முறையில் நிறைவேற்றவில்லை என்பது ஆந்திர மாநிலத்தவரின் எண்ணம். தற்போது மத்திய பா.ஜ.க. அரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால், அதனைத் தாங்கிப்பிடிக்கும் இரண்டு தூண்களில் ஒன்றாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இருக்கிறது. அவர் தனது மாநிலத்திற்கான வசதிகளைப் பெருக்க மத்திய அரசிடம் நிதி கேட்கிறார். அதே நேரத்தில், குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கையால், ஆந்திராவின் மக்கள் தொகைக் குறைந்துள்ளதால் மத்திய அரசின் நிதிப் பங்கீடும் குறைந்து, ஆந்திராவுக்குரிய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறையக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடும் இதே பிரச்சினையை எதிர்கொள்கிறது.
நாட்டில் அதிகத் தொழிற்சாலைகள் உள்ள மாநிலம், அதிகளவில் பெண் பணியாளர்கள் உள்ள மாநிலம், மாநிலங்களுக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது நிலையில் உள்ள மாநிலம், மத்திய அரசுக்கு அதிக வரிசெலுத்தும் மாநிலங்களில் முன்வரிசையில் உள்ள மாநிலம் எனத் தமிழ்நாடு பொருளாதார முன்னேற்றம் கண்ட மாநிலமாக இருக்கும் அதே நேரத்தில், மத்திய அரசின் திட்டமான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தி, நாம் இருவர்-நமக்கு இருவர் என்றும் நாம் இருவர்-நமக்கு ஒருவர் என்றும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியிருக்கிற மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.
மத்திய அரசின் திட்டத்தை சரியானபடி செயல்படுத்திய தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு நிதிப் பங்கீடும் குறைவு, மக்கள்தொகை எண்ணிக்கையில் நாடாளுமன்றத் தொகுதிகளும் குறைக்கப்படவிருக்கின்றன. மத்திய அரசின் திட்டத்தை சரியாக செயல்படுத்தாத பெரும்பாலான வடமாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பங்கீட்டுடன், கட்டுப்படுத்தப்படாத மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து அங்கு கூடுதலான தொகுதிகள் உருவாக்கப்படவிருக்கின்றன. புதிதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதனடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் தென்னிந்தியாவில் ஏறத்தாழ 100 தொகுதிகள் குறையும் வாய்ப்புள்ளது. வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. அரசு இதை தனக்கு சாதகமாகப் பார்க்கிறது. அந்த பா.ஜ.க அரசை தன் ஆதரவால் நிலைநிறுத்தியிருக்கும் ஆந்திரா முதலமைச்சர் தனது மாநிலத்தின் நிலையை எடுத்துச் சொல்லியிருக்கிறார். பதினாறும் பெற்றும் பெரு வாழ்வு வாழச் சொன்ன தமிழ்நாடு முதலமைச்சரின் பேச்சும் இந்தக் கோணத்தில் பார்க்கப்பட்டதற்கு அதுதான் காரணம்.
பண்பாட்டுப் பெருமையும் அறிவியல் பார்வையும் கொண்ட முன்னேறிய மாநிலமானத் தமிழ்நாட்டில் அதிகக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சூழல் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கிறதா என்பது கேள்விக்குரியது. அளவோடும் வளமோடும் வாழ நினைக்கும் இயல்பைப் பெற்றுள்ள தமிழ்நாட்டில், இருக்கின்ற மக்கள்தொகையை மனிதவளமாக மாற்றுவதில் கண்ட வெற்றிதான், இன்றைக்கு பல துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது என்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மூலமாக அறிய முடிகிறது. அந்த முன்னேற்றத்திற்கேற்ற நியாயம்தான் நிதி ஒதுக்கீடு கோரிக்கையும், தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்பதும்தான். பெற்றால்தான் தொகுதி என்பது அநியாயமானதாகவே இருக்கும்.