எடப்பாடி பழனிச்சாமியை நண்பர் இளங்கோவன் வீட்டில் ரெய்டு நடப்பது அதிமுகவை கூட்டணிக்கு சம்மதிக்க வைப்பதற்காக பாஜக நடத்தும் மிரட்டல் நாடகம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால், ஓபிஎஸ் அணியில் இருக்கும் வைத்திலிங்கம் வீட்டிலும் ரெய்டு நடக்குதே? ஓபிஎஸ் பாஜக ஆதரவாளராக இருந்தும் அவரின் ஆதரவாளர் வீட்டில் எப்படி ரெய்டு நடக்குது? இது எதுக்காக நடக்குது? யார் சொல்லி இது நடக்குது? என்ற குழப்பங்கள் எழுந்தன.
வைத்திலிங்கம் வீட்டில் நடந்த ரெய்டும் எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டுவதற்காத்தான் நடந்தது என்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரம்.
எடப்பாடியை மிரட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் வீட்டில் ஏன் ரெய்டு நடத்த வேண்டும்?
சசிகலாவின் ஆதரவாளரான வைத்திலிங்கம், அவரின் ஆசியால் அதிமுகவில் அடிமட்ட தொண்டராக இருந்து அமைச்சர் ஆனார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு முதலமைச்சர் ஆகிறார் என்று பேசப்படும் அளவிற்கும் அதிமுகவில் அவரின் செல்வாக்கு உயர்ந்திருந்தது.
ஓபிஎஸ் அணிக்கு சென்ற அவர் அங்கே அந்த அணியின் முக்கிய நபராக இருந்து வருகிறார். அவரை தன் பக்கம் கொண்டு வந்துவிட்டால் , அவர் மூலமாக ஓபிஎஸ் அணியில் இருக்கும் பலரையும் கட்சிக்குள் கொண்டு வந்துவிட்டால் அதிமுகக்கு வலு சேர்ந்துவிடும். வைத்திலிங்கம் சார்ந்த சமூக வாக்குகள் அதிமுகவுக்கு வந்துவிடும் என்று கணக்கு போட்டிருக்கிறார் எடப்பாடி.
இதனால், தனது ஆதரவாளர்கள் மூலம் வைத்திலிங்கத்திடம் பேச்சு நடத்தி இருக்கிறார் எடப்பாடி. வரும் 2026 தேர்தலில் அதிமுகதான் வெல்லும். அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும். ஓபிஎஸ்சை நம்பி இனியும் காலத்தை கடத்தினால் மோசம் போய்விடுவீர்கள் என்று எடப்பாடி தரப்பு பேசியதில் வைத்திலிங்கம் கரைந்திருக்கிறார். தான் மட்டுமல்லாது தனது ஆதரவாளர்களையும் அதிமுகவுக்கு கூட்டிக்கொண்டு போவது என்ற முடிவு மட்டுமல்லாது, ஓபிஎஸ் அணியில் இருக்கும் பலரையும் அதிமுகவுக்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என்று அவர்களிடம் பேசி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்திருக்கிறார் வைத்திலிங்கம்.
ஓபிஎஸ்க்கு இது பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். இருக்குற எல்லோரும் போய்விடால் அப்புறம் யாரை வைத்து அவர் இணைப்பு பற்றி பேசுவது என்ற கவலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் பாஜக தலைவர்களிடம் சொல்லி புலம்பி இருக்கிறார். அண்மையில் டெல்லி சென்றிருந்தபோது கூட இது சம்பந்தமாக பாஜக மேலிட தலைவர்களிடம் பேச அனுமதி கேட்க, அந்த நேரத்தில் அவர்களால் ஓபிஎஸ்சை சந்திக்க முடியாமல் போயிருக்கிறது.
எல்லோரையும் ஒன்று சேர்த்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக கணக்கு போட்டிருக்கையில், பாஜகவின் தயவு இல்லாமல் ஓபிஎஸ், சசிகலா ஆதரவாளர்களை தன் பக்கம் இழுக்க நடக்கும் எடப்பாடியின் முயற்சிகள் கடும் கோபத்தை கொடுத்திருக்கிறது.
எடப்பாடியை வழிக்கு கொண்டு வர முயற்சிகள் செய்துகொண்டிருக்கும் நேரத்தில் வைத்திலிங்கம் அவர் போனால் தங்களுக்கு ரொம்ப சிக்கல் ஆகிவிடும் என்பதை உணர்ந்த பாஜக, எடப்பாடி பக்கம் வைத்திலிங்கம் போகாமல் இருக்க என்ன நெருக்கடி கொடுக்கலாம் என்று யோசித்தபோதுதான், கடந்த 2011 -16 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, அக்கால கட்டத்தில் சென்னை அடுத்த பெருங்களத்தூரில் 1453 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐடி நிறுவனம் கட்டியது ஸ்ரீராம் பிராப்பர்டீஸ். இதற்காக வீட்டு வசதித்துறையிடன் அனுமதி கேட்டது. இதற்கு அனுமதி கொடுப்பதற்காக 27.90 கோடி ரூபாய் வைத்திலிங்கம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு அறப்போர் இயக்கம் புகார் அளித்தது தெரியவந்துள்ளது.
இதன் பின்னரே அறப்போர் இயக்கத்தின் புகாரினை தூசுதட்டி வைத்திலிங்கம் வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களில் ரெய்டு நடந்தது என்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரம்.