கொண்டாட்டங்கள் மனித உணர்வுடன் கலந்தது. அவரவர் பிறந்தநாள், அவரவர் குடும்ப நிகழ்வுகளை மற்றவர்களுடன் கொண்டாடி மகிழும் மக்கள், மதம் சார்ந்த-மொழி சார்ந்த பண்டிகைகளை எல்லாரையும் போலத் தாங்களும் கொண்டாடி மகிழ வேண்டும் என நினைக்கிறார்கள். பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினர் மற்றும் சொந்தபந்தங்களுடன் பண்டிகையைக் கொண்டாடுவது என்பது ஒரு பண்பாடாகக் கருதப்படுகிறது. வேலைக்காக நகரங்களை நோக்கி வந்தவர்கள், வாழ்வின் மகிழ்வான தருணங்களுக்காக பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்குப் பயணிப்பது வழக்கமாகிவிட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, திருப்பூர், கோவை போன்ற நகரங்களை நோக்கி மற்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வேலைக்காக வருவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதில் தலைநகரமான சென்னை என்பது அரசுத் துறை மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகள், தனிப்பட்ட தொழில் வாய்ப்புகள், சினிமா உள்ளிட்ட கலைத்துறை வாய்ப்புகள், ஊடகத்துறை வாய்ப்புகள், மருத்துவம்-சட்டம் உள்ளிட்ட பல வாய்ப்புகளும் உள்ள மாநகரமாக இருப்பதால் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சென்னையில் தங்கி வேலை செய்பவர்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். எந்த ஊரிலும், எந்தவொரு குடும்பத்திலும் அவர்களின் பிள்ளைகளோ உறவினர்களோ ஒருவராவது சென்னையில் இருப்பார்கள் என்கிற அளவிற்கு தமிழ்நாட்டின் தலைநகரம் அனைவரும வாழ்வதற்கான வாய்ப்பினை வழங்கி வருகிறது. அதனால்தான், பண்டிகைக் காலங்களில் மற்ற ஊர்களைவிட சென்னையிலிருந்து சொந்த ஊருக்குப் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாக உள்ளது.
தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போதும், அந்தப் பண்டிகைகள் வார இறுதி நாட்களுக்கு முன்பும் பின்புமாக வரும்போதும் வழக்கத்தைவிட அதிகமான பேர் சொந்த ஊருக்குப் பயணிக்கிறார்கள். தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை என்றால் உடனடியாக சொந்த ஊருக்குப் புறப்படுவது சென்னையில் வேலைபார்க்கும் வெளியூர்க்காரர்களின் மனநிலையாக உள்ளது. அவர்களின் மனநிலைக்கேற்றபடி போக்குவரத்து வசதி அமையவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதில் தீபாவளிக்கு ஒரு நாள் விடுமுறை என்றாலும் ஊரில் கொண்டாடித் திரும்பவேண்டும் என்பது அவர்களின் விருப்பம். பொங்கலுக்கு அரசாங்கமே குறைந்தபட்சம் மூன்று நாட்கள் விடுமுறை அளித்துவிடுவதால் அந்த நாட்களை சொந்த ஊரில் கழிக்க வேண்டும் என்று பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
வழக்கமான நாட்களைவிட பண்டிகை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகும்போது அதற்கேற்ப போக்குவரத்து வசதிகள் அமைந்திட வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரயில் சேவைகள் போதுமான அளவு இருக்கிறதா என்பது எப்போதும் கேள்விக்குறிதான். வடமாநிலங்களைப் போலவோ, கர்நாடகா-கேரளா போன்ற மாநிலங்களுக்கு இருப்பது போலவோ தமிழ்நாட்டில் அந்தளவு ரயில் சேவைகள் கிடையாது. தற்போது மேற்கு மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் கூடுதல் ரயில்கள் விடப்பட்டிருந்தாலும் அவை அதிகக் கட்டணம் கொண்ட அதிவேக விரைவு ரயில்களாகவும் முன்கூட்டியே பதிவு செய்தால் மட்டுமே பயணிக்க முடியும் என்ற அளவிலுமே உள்ளன. அதேநேரத்தில், தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து என்பது சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான ஏறத்தாழ 700 கி.மீ. தொலைவுக்கும் கூட வலுவானக் கட்டமைப்பைக் கொண்டதாக உள்ளது.
1967ல் தொடங்கி 2024 வரையிலும் ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் பேருந்து சேவைகளுக்கேற்ப போக்குவரத்துக் கழகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. எந்தெந்த பகுதி மக்களுக்கு, எந்தெந்த நேரங்களில் பேருந்து சேவை தேவைப்படும் என்பதை கவனத்தில் கொண்டு நகரப் பேருந்துகள், அருகில் உள்ள ஊர்களுக்கானப் பேருந்துகள், தொலைதூர விரைவுப் பேருந்துகள், சொகுசுப் பேருந்துகள், கிராமங்களுக்கான மினி பேருந்துகள் என பல வகையான பேருந்து வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, தனியார் நடத்தும் ஆம்னி பேருந்துகளும் தொலைதூரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
பண்டிகை காலங்களில் சென்னையில் உள்ள ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. விமானக் கட்டணங்களும் மும்மடங்கு உயர்ந்துவிடுகிறது. தென்னக ரயில்வே தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குகிறது. எனினும், மக்கள் எளிதாக அணுகக்கூடியதாக பேருந்து போக்குவரத்தே முதன்மையாக இருப்பதால் அதை நோக்கியே பண்டிகைக் காலங்களில் அதிகம் படையெடுக்கிறார்கள். அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பெருகி வரும் கூட்டத்திற்கு போதுமானதாக இல்லை. ஆம்னி பேருந்துகள் முறைப்படியான வழித்தட உரிமம் பெற்ற பேருந்துகளைப் போல இல்லாமல், ஒப்பந்த ஊர்திகள் போல இயங்குவதால், அவற்றின் தாறுமாறான கட்டண உயர்வு பயணிகளை கடும் அவதிக்குள்ளாக்கி, அரசின் மீதான கோபமாக மாறுகிறது. எந்த ஆட்சியாக இருந்தாலும் பண்டிகைக் காலத்தை ‘சமாளிக்க’த்தான் வேண்டியிருக்கிறது.
சொந்த பந்தங்களைப் பார்க்கச் செல்கின்றவர்களிடம் ‘பந்தம் கிந்தம் கொளுத்திக்கக்கூடாதா?’ என்று கேட்க முடியாது. ஏனெனில், எல்லாருக்குமே பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் தேவைப்படுகிறது. அதனால், ‘மேன்டில்’ உடையாமல் பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துகிறது அரசாங்கம்