பொதுக்குழு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று மா.செக்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி கூட்டியதுமே, கூட்டணி தொடர்பாக அறிவிக்கப்போகிறார் என்ற பேச்சு எழுந்தது. அதுமாதிரியே, ‘’திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. எப்படியும் அங்கிருக்கும் கட்சிகள் நம்ம பக்கம் வந்துவிடும். அதனால் நிச்சயம் வலுவான கூட்டணியை அமைத்துத் தருகிறேன் ’’ என்று மா.செக்களுக்கு உறுதி அளித்திருக்கிறார்.
அதே நேரம் திமுகவைத்தவிர வேறு யாரையும் விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி சொல்லிவிட்டதால், அப்படியானால் பாஜகவுடன் மீண்டும் உறவா? அப்படி மீண்டும் பாஜகவுடன் உறவுகொண்டால் எப்படி திருமா, விஜய்யின் வருகையை எப்படி எதிர்பார்க்க முடியும்?
இன்றைக்கு வரைக்கும் தாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அடித்துச்சொல்லிக் கொண்டே இருக்கிறது விசிகவும் கம்யூனிஸ்டுகளும். இதை நம்பி நாம் இவர்கள் விமர்சிக்காமல் இருப்பது பைத்தியக்காரத்தனம் இல்லையா? ஏன் இப்படி எடப்பாடி கற்பனையில் மிதக்கிறார்? விசிகவும், கம்யூனிஸ்டுகளும் வந்துவிடுவார்கள் என்று எடப்பாடிக்கு எதுவும் கனவு வந்ததா? அப்படியே கனவு வந்தாலும் அது பலிக்குமா? என்ற குழப்பத்தில் உள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
திமுகவை விமர்சிக்க வேண்டும் என்று சொன்னதில் மாற்றுக்கருத்து இல்லை. அதிமுகவுக்கு என்றைக்குமே திமுக எதிரிதான். அதனால் அது பற்றி ஒன்றும் குழப்பம் இல்லை. ஆனால், பாஜகவுடன் நட்பு பாராட்டினால் அதிமுகவின் செல்வாக்கு என்னவாகும்?
இத்தனை நாளும் பாஜக எதிர்ப்பில் இருந்துவிட்டு இப்போது திடீர் என்று ஏன் அந்தர்பல்டி அடிக்கிறார் எடப்பாடி. 2026 தேர்தல் நெருங்கும் சமயத்தில் சசிகலா, ஓபிஎஸ், தினகரன் கலகங்கள் அதிகமாக இருக்கும். வேலுமணி உள்ளிட்ட சீனியர்கள் பலரும் பாஜக பக்கம் நின்று கொடுக்கப்போகும் அழுத்தம் அதிகமாக இருக்கும். சேலம் இளங்கோ மாதிரி இன்னபிறரையும் ரெய்டுக்குள் சிக்கவைக்கச் செய்துவிடும் பாஜக. இப்படிப்பட்ட நெருக்கடிகளில் இருந்து விடுபட பாஜக ஆதரவு நிலைதான் சரி என்று முடிவெடுத்திருக்கிறாரா எடப்பாடி.
ஒருவேளை இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தால், திராணியில்லாத தலைமை என்பது தெரிந்து தொண்டர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என்று அதிமுக சீனியர்கள் பலரும் குழப்பத்தில் உள்ளனர் என்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரத்தில் இருந்து கசியும் தகவல்கள்.