2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவராக்குவோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். தங்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று தி.மு.க. அரசு மீதுள்ள தங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடாக இத்தகைய கருத்தை தங்கள் போராட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அரசு ஊழியர்களுக்கென பல்வேறு நிலைகளில் பல சங்கங்கள் உள்ளன. அதில் ஒரு சங்கத்தின் கருத்தாக இது வெளிப்பட்டிருந்தாலும், பொதுவாகவே தங்களுடைய கோரிக்கைகள் இந்த ஆட்சியிலும் நிறைவேற்றப்படவில்லை என்கிற குமுறலைக் காண முடிகிறது. குறிப்பாக, பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்கிற தி.மு.க.வின் 2021 தேர்தல் வாக்குறுதியை அரசு ஊழியர்கள் நினைவுபடுத்துகிறார்கள். அதுபோலவே பணிநிரந்தரம், ஊதிய முரண்பாடு தொடர்பான சிக்கல்கள், பணிச்சுமை உள்ளிட்ட பிற காரணங்களையும் முன்வைத்து அரசு ஊழியர்கள் கோரிக்கை எழுப்புவதும் அடையாளப் போராட்டங்களை நடத்துபவர்களாகவும் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள்.
சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. இந்தத் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதற்கு அரசு ஊழியர்களின் பங்களிப்பு முக்கியமானது. எனவே அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகளுடன் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து வலியுறுத்துகின்றன. தி.மு.க. அரசோ, அரசாங்கத்தின் நிதிநிலைமைக்கேற்ப ஒவ்வொரு கோரிக்கையாக நிறைவேற்றப்படும் என்கிறது. ஆட்சி அமைந்து மூன்றாண்டுகளுக்கு மேலான நிலையில், தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் அரசின் மீதான அரசு ஊழியர் அமைப்புகளின் விமர்சனங்கள் கடுமையாக வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன.
தி.மு.க. ஆட்சிக்காலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டதுடன் முந்தைய ஆட்சிக்காலங்களில் பறிபோன சலுகைகளையும் சேர்த்து வழங்குவது வழக்கமாக இருந்தது. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் கிடைத்தவை அவருடைய மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் கிடைக்கவில்லை என்கிறார்கள் அரசு ஊழியர்கள் அமைப்பினர்.
மருத்துவத் துறையில் போதுமான அளவில் ஆண் மருத்துவர்களும் பெண் மருத்துவர்களும் இல்லையென்றும், குறிப்பாக 24 மணிநேரமும் விழிப்புடன் இருக்கவேண்டிய மருத்துவப் பிரிவுகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், கூடுதல்நேரப் பணிச்சுமையால் உடலும் உள்ளமும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த மூன்றாண்டுகளில் 18,460 பணியிடங்கள் இத்துறையில் நிரப்பப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் பணிச்சுமையினால் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு வருவதாகவும், இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டுள்ள தமிழ்நாடு தனது பெருமையை இழந்து வருகிறது என்றும் குற்றம்சாட்டப்படும் நிலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் விருது வழங்கப்பட்டு, அங்கீகாரம் பெற்றிருப்பதை அரசு தரப்பில் எடுத்துக்காட்டுகிறார்கள்.
அரசு எனும் சக்கரத்தை சுழலுச் செய்பவர்கள் அரசாங்க ஊழியர்கள். அந்த சக்கரம் சுழல வேண்டியது மக்களுக்காகத்தான். அரசு ஊழியர்களுடனான மக்களின் நேரடி அனுபவம் என்பது பல நேரங்களிலும் கசப்பானதாகவே இருக்கிறது என்பதே உண்மை. அதனால்தான், அரசு ஊழியர்களின் போராட்டங்களுக்குப் பொது மக்களின் ஆதரவு கிடைப்பதில்லை. அரசு ஊழியர்கள் குறித்து எதிர்மறையான கருத்துகளையே மக்கள் வெளிப்படுத்துவது வழக்கம்.
அரசு ஊழியர்களின் கோபத்திற்கு இலக்காகியிருக்கும் இன்றைய முதல்வர் ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்தான். தேர்தல் அரசியல் களத்தில் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் அமையும். அதில் அரசு ஊழியர்களுக்கும் ஒரு பங்கு உண்டு. எனினும், ஜனநாயகத்தின் சாட்டை தங்கள் கையில் உள்ளது போல அரசு ஊழியர்கள் நினைப்பது சரியான கண்ணோட்டமாக இருக்காது. அரசு ஊழியர்களை சர்க்கஸ் ரிங் மாஸ்டர் போல சவுக்கை சுழற்றி வேலை வாங்குவேன் என்று சொன்ன முதலமைச்சரும் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார். அவருடைய நடவடிக்கைக்கு மக்களிடம் ஆதரவும் இருந்தது என்பதை மறந்துவிட முடியாது.
போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களை ஏறத்தாழ 40 நாட்கள் சிறைப்படுத்திய ஒரு முதலமைச்சரும் தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறார். அரசு ஊழியர்களை எஸ்மா, டெஸ்மா போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் கைது செய்ததுடன், அவர்களின் குடும்பத்தினரையும் வீடு புகுந்து நள்ளிரவு நேரத்தில் காவல்துறையினர் மிரட்டிய கொடூரங்களும் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன. தற்போதைய சூழல் அப்படியில்லை. அரசும் அரசு ஊழியர்களும் அந்த நிலைக்கு வரவில்லை.
இன்றைய ஆட்சியாளர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய காலக்கெடுவை நிர்ணயிப்பதில் அரசு ஊழியர்கள் அமைப்பினருடன் இணக்கமான ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டும். அந்த காலக்கெடுவின்படி வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும். இது தொடர்பாக, இருதரப்பிலுமான சுமூகமான முயற்சிகளும் முடிவுகளும் எட்டப்படுவதுதான் பொதுமக்களுக்கு நன்மை தரும்.