நியாயமாகப் பார்த்தால் ’உலக நாயகன்’ என்ற பட்டத்தை கமல் துறந்துவிட வேண்டும் என்ற விமர்சனங்கள் தொடர்ந்த நிலையில் அப்பட்டத்தை துறந்துள்ளார் கமல்.
’கலைஞானி’ என்று கலைஞர் கருணாநிதி கமலுக்கு பட்டம் சூட்டினார். ஆஸ்கர் விருதுக்கு அவரது படங்கள் அனுப்பப்பட்டு வந்ததால் ரசிகர்கள் அவரை உலகநாயகன் என அழைத்து வந்தனர். அதன் பின்னர் அவரது திரைப்படங்களிலும் ’உலக நாயகன்’ என்ற அடைமொழி இடம்பெற்று வந்தது.
உலக நாயகன் என்றால் அது கமல்ஹாசன் என்ற நிலை உருவானதும் அதுகுறித்த விமர்சனங்களும் உருவானது. ஒரு ஆஸ்கர் விருது கூட வாங்கவில்லை கமல். அவர் இந்திய மொழிகளில்தான் நடிக்கிறார். அப்படி இருக்கும்போது உலக நாயகன் என்ற பட்டம் எப்படி சரியானது? இதை உணர்ந்து கமலே அப்பட்டத்தை துறக்க வேண்டும் என்று விமர்சனங்கள் தொடர்ந்து இருந்து வந்தது.
இந்நிலையில் அப்பட்டத்தை துறந்துள்ளார் கமல். ரசிகர்களும் மக்கள் நீதி மய்யத்தினும் இனி தன்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என்றும், கமல், கமல்ஹாசன், kh என்றே தன்னை அழையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
இது குறித்த அவரது அறிக்கையில், ‘’ என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன்.
உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது. எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ kh என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்கிறார்.
’’சக மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்’’ என்று அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.
இந்த நிலையில், ‘’தக் லைப்’’ படத்தில் விண்வெளி நாயகா? என்று சொல்கிறார்கள்.