மராட்டிய மாநிலத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீருக்கு தனி சிறப்பு அந்தஸ்து என்பது இனி எந்தக் காலத்திலும் கிடையாது என்று பேசியிருக்கிறார். பிரதமருக்கு ஒரு வழக்கம் உண்டு. அவர் எந்த மாநிலத்தில் பரப்புரை செய்கிறாரோ அந்த மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க அரசால் என்ன பயன்கள் கிடைத்தன என்று சொல்வதைவிட, வேறொரு மாநிலத்தில் உள்ள கட்சிகளை நோக்கிப் பாய்வது அவரது வழக்கமாகவே இருக்கிறது.
மத்தியபிரதேசத்தில், உத்திரபிரதேசத்தில், அந்தமான்-நிகோபர் தீவுகளில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் அதற்கும் முன்பும் பரப்புரை செய்தபோது, தி.மு.க.வைப் பற்றி விமர்சனம் செய்தார். அந்த மாநிலங்களில் தி.மு.க தேர்தல் களத்தில் போட்டியிடுகின்ற கட்சி அல்ல என்பது பிரதமருக்கும் தெரியும். அதுபோல, சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட்டுகள் பற்றி மோடியும் அமித்ஷாவும் மற்ற மாநிலங்களில் பேசிக்கொண்டிருப்பார்கள். அதுபோலத்தான் மராட்டிய மாநிலத்தில் தேர்தல் பரப்புரை செய்கையில் ஜம்மு-காஷ்மீர் பற்றி பிரதமர் பேசினார்.
ஜம்மு-காஷ்மீர் தனது மாநில அந்தஸ்தையும் சிறப்புத் தகுதியையும் இழந்தது மத்திய பா.ஜ.க. அரசினால்தான். அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு அந்த மாநிலத்திற்கு வழங்கிய தனித் தகுதியை உள்துறை அமைச்சர் அமித்ஷா ரத்து செய்து, நாடாளுமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன், ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் தனது மாநில அந்தஸ்தை இழந்து யூனியன் பிரதேசமான பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரசும் இணைந்த கூட்டணி வெற்றி பெற்று, உமர் அப்துல்லா முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இழந்த மாநில அந்தஸ்தைப் பெற வேண்டும் என்றும், பறிக்கப்பட்ட சிறப்புத் தகுதி கிடைக்கவேண்டும் என்றும் குரல்கள் ஒலித்துவரும் நிலையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பலத்த விவாதங்களை எழுப்பியது. முதல்வர் உமர் அப்துல்லா கொண்டு வந்த தீர்மானம் ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை வலியுறுத்துவதாக இருந்தாலும், 370வது பிரிவின்படியான சிறப்புத் தகுதியை வலியுறுத்தக்கூடியதாகவும் அது இருந்தது. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தற்போதைய நிலையில், மாநில அந்தஸ்தையே முதன்மைப்படுத்துகிறது. உமர் அப்துல்லாவும் அவரது தேசிய மாநாட்டுக் கட்சியும் மாநில அந்தஸ்துடன் சிறப்புத் தகுதியையும் வலியுறுத்துகிறது. மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளும் காஷ்மீரை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகிற நிலையில்தான், மராட்டிய மாநிலத்தில் பரப்புரை செய்த பிரதமர் மோடி, இந்தியா முழுமைக்கும் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம்தான் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தீர்மானத்திற்கு எதிரான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்திய மத்திய-மாநில அரசுகளின் சட்ட உரிமைகள், அம்பேத்கர் வகுத்துதந்த மாநில அரசுக்கான அதிகாரங்கள், கூட்டாட்சி முறையை நோக்கிய அரசியலமைப்பின் பயணம் இவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் மத்திய பா.ஜ.க அரசு, டாக்டர் அம்பேத்கர் பிறந்த மராட்டிய மாநிலத்தில் தேர்தல் நேரத்தில் அவரது பெயரைப் பயன்படுத்தி, காஷ்மீர் மீதான தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவுடன் இணைக்கப்பட்ட விதமும், அதற்கான காரணங்களும் பின்தள்ளப்பட்டு, அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டம் என்ற பெயரில் பிரதமரும் அவரது கட்சியினரும் தங்கள் வசதிக்கேற்ப செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
முதல்வர் உமர் அப்துல்லா கொண்டு வந்த தீர்மானத்தை ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் இருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கடுமையாக எதிர்த்து, அமளி செய்தனர். ஆளுங்கட்சிக்கும் எதிர்த்தரப்புக்கும் கைக்கலப்பு ஏற்படக்கூடிய அளவில் அமளி நடந்தது. காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதற்காகத்தான் அதற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக்கப்படுகிறது என்று 5 ஆண்டுகளுக்கு முன் சொன்னது மத்திய பா.ஜ.க அரசு. அந்த மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு, ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் இருந்த ஜம்மு-காஷ்மீரில் அமைதி ஏற்படவில்லை. மக்களுக்கு அச்சம்தான் ஏற்பட்டது.
சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முறைப்படியான ஆட்சி அமைக்கப்பட்டாலும் இன்னமும் ராணுவத்தின் கண்காணிப்பில்தான் காஷ்மீர் உள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதல் அவ்வப்போது நடப்பதும் அதில் ராணுவத்தினரும், ஊர்த்தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் பலியாவது தொடர்கிறது. பிணங்களை ஒளித்துவைத்துவிட்டு அமைதி பற்றிப் பேசுவது என்பது மயான அமைதித்கு சமமானது.