தமிழக அரசியல் களத்தை சூடாக்கியிருக்கும் லாட்டரி மார்ட்டின் மற்றும் அவரது மருமகன் ஆதவ் அர்ஜுன் இடங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூன். இவர் விசிகவின் துணைபொதுச்செயலாளர். போயஸ் கார்டனில் உள்ள இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் 4 மணி நேரத்திற்கும் மேலாக 4 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆதவ் அர்ஜுனின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் அடிப்படையில் இன்று காலை 6.30 மனி முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்கியதில் சட்டவிரோத பணப்பறிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் வீடு மற்றும் அவரது தொடர்புடைய கோவை, மேற்கு வங்கம், சிக்கிம், சென்னை இடங்களில் சோதனை நடத்தி இருந்தனர். இரண்டு முறை சோதனை நடத்திய அதிகாரிகள் இன்று மீண்டும் மார்ட்டின் வீடு மற்றும் அவரது தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் போயஸ் கார்டன், தி.நகர் உள்ளிட்ட 5 இடங்களில் இந்த சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடத்திய சோதனையில் மார்ட்டின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருந்தது. முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், கடந்த 2012ல் மார்ட்டின் தொழில் கூட்டாளி நாகராஜின் சென்னை நங்கநல்லூர் வீட்டில் 7 கோடி 20 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயினை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மார்ட்டினுடன் சேர்ந்து கேரளா, மகாராஷ்டிராவில் லாட்டரி விற்பனை செய்ததன் மூலமாக திரட்டப்பட்ட தொகைதான் அது என்று நாகராஜன் வாக்குமூலம் அளித்திருந்தார். இதையடுத்து மார்ட்டின் அவரது மனைவி லீமா ரோஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதன் பின்னர் அமலாக்கத்துறைம் வழக்கு பதிவு செய்திருந்தது.
பின்னர் இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2022ல் நவம்பர் மாதம் ஆலந்தூர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதை ஏறுக்கொண்ட நீதிமன்றம் மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கை முடித்துவைக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், அமலாக்கத்துறையினர் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் அமலாக்கத்துறையினருடம் மீண்டும் மார்ட்டின் வீடு மற்றும் அவரது இடங்களில் ரெய்டு நடத்தி விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படியே அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
அந்த வகையில்தான் ஆதவ் அர்ஜூனாவின் வீடு மற்றும் அவரது தொடர்புடைய இடங்களில் இரண்டு முறை சோதனை நடத்திய அமலாக்கத்துறை இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனைகளின் முடிவில்தான் சட்டவிரோத பணப்பறிமாற்றம் எவ்வளவு நடந்திருக்கிறது என்பது தெரியவரும்.