இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடியிருக்கிறது தேசிய மக்கள் சக்தி கூட்டணி. படு தோல்வியை சந்தித்திருக்கிறார் ராஜபக்சே.
முந்தைய தேர்தலில் மூன்று சதவிகித வாக்குகளை மட்டும் பெற்று மூன்றாம் இடத்தில் இருந்த அநுரகுமார திசாயக்க, அடுத்து 2024 செப்டம்பர் மாதம் வந்த தேர்தலில் 43 சதவிகித வாக்குகள் பெற்று இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் ஆனார்.
இவரின் வெற்றியை உலகமே போற்றியது. ஆனாலும், இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு 3 இடங்கள் மட்டுமே இருந்தது. இதனால் புதிய சட்டங்களை இயற்றுவதில் அநுரகுமார திசாநாயகவிற்கு சிக்கல் எழுந்தது. இதற்காக பதவியேற்ற மறுதினமே நாடாளுமன்றத்தினை கலைப்பதாக அறிவித்துவிட்டார்.
இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடந்தது. மொத்தம் 8,352 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அதிபர் அநுரகுமார திசாயக்கவின் தேசிய மக்கள் கட்சி, ராஜபக்சேவின் பொதுஜன முன்னணி , இலங்கை தமிழரசுக் கட்சி, சனநாயக முன்னணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. காலையில் 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிந்தது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகித்து வந்தது. வாக்கு எண்ணிக்கையின் இறுதி நிலவரப்படி தேசிய மக்கள் சக்தி கூட்டணி 61.67% வாக்குகள் பெற்று 141 இடங்களில் வென்றுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 113 இடங்களும் சிறப்பு பெரும்பான்மைக்கு 150 இடங்களும் தேவை என்கிற நிலையில் தேசிய மக்கள் சக்திக்கு 141 இடங்கள் கிடைத்துள்ளன. வாக்கு சதவிகிதத்தின் படி 18 இடங்கள் கிடைத்துள்ளன. ஆக மொத்தம் தேசிய மக்கள் சக்திக்கு 159 இடங்கள் கிடைத்துள்ளன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 3 இடங்களில் வென்ற தேசிய மக்கள் சக்தி இந்த தேர்தலில் 159 இடங்களை வென்றுள்ளது. இதில் 141 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது தேசிய மக்கள் கட்சி. கடந்த 2020 நாடாளுமன்ற தேர்தலில் 145 இடங்களை வென்றிருந்த பொதுஜன பெரமுனா கட்சி இந்த தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே பிடித்திருக்கிறது.
தேசிய மக்கள் கட்சியிலும் பொதுஜன பெரமுனா கட்சியிலும் நடந்துள்ள இந்த தலைகீழ் மாற்றங்கள் இலங்கை அரசியலில் பேசுபொருள் ஆகி இருக்கிறது.
மக்கள் அளித்த இந்த அமோக வரவேற்பை அடுத்து, ’’மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி’’ என்று தெரிவித்துள்ளார் அநுர குமரா திசநாயக.