எஸ்.பி.வேலுமணி தலைமையில் நெல்லையில் நடந்த அதிமுக கள ஆய்வுக்கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர். திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி முன்னியிலையில் கும்பகோணத்தில் நடந்த அதிமுக கள ஆய்வுக்கூட்டத்திலும் நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதில் அதிருப்தி அடைந்த தங்கமணி, ’’அதிமுக நிர்வாகிகளிடம் ஒற்றுமை இல்லை’’என்று புலம்பித்தள்ளி இருக்கிறார். எஸ்.பி.வேலுமணியோ, ‘’அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இந்த பிரச்சனை நெல்லை, கும்பகோணத்தில் மட்டும் இல்லை. எல்லா இடங்களிலும் நடப்பதால்தான் திருச்சியில் நடந்த கள ஆய்வுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ‘’மேடையில் ஒரு கூட்டம் நடத்தினால் மேடைக்கு கீழே ஒரு கூட்டம் தனியாக நடத்துறீங்க’’ என்று ஆவேசப்பட்டிருந்தார்.
அதே கூட்டத்தில் பேசிய தங்கமணி, ’’நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்த காரணத்தினால் கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இ ழந்தோம். இப்போதும் கருத்து வேறுபாடுடன் தொடர்ந்தால் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டியதுதான்’’என்று நொந்துகொண்டார்.
அரியலூரில் நடந்த கள ஆய்வுக்கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, ‘’2026 சட்டமன்ற தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா?சாவா? தேர்தல். இதில் தோல்வி அடைந்துவிட்டல் அரசியல் களம் மாறி சிறிய கட்சிகள் மேலே வந்துவிடும்’’ என்று கவலைப்பட்டிருந்தார். தவெக விஜய்யை மனதில் வைத்து அவர் அப்படிச்சொல்கிறார் என்ற பேச்சு எழுந்தது.
கள ஆய்வு நடக்கும் இடமெல்லாம் இப்படி ரகளை நடப்பதால், விழிபிதுங்கி நிற்கிறார் எடப்பாடி.