மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணிக்குள் பல மோதல்கள் வெடித்த போதிலும் கூட அந்த கூட்டணி 230க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. அதனால்தான் இந்த வெற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
இந்த அபார வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணங்களை அலசி ஆராய்ந்து பட்டியலிட்டுள்ளனர் அரசியல் நிபுணர்கள்.
அந்த பட்டியலில் அவர்கள் முதலாவதாக குறிப்பிடும் காரணம் ’’லட்கி பகின்’’ எனும் ‘’அன்பு சகோதரி திட்டம்’’. தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசின் முன்னோடித்திட்டமான ‘’மகளிர் உரிமைத்தொகை’’திட்டத்தை பின்பற்றி அன்பு சகோதரி திட்டம் என்று கொண்டு வந்தது மகாயுதி அரசு.
இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 உதவித்தொகை வழங்கி வந்தது மகாயுதி அரசு. இதன் மூலம் 2.36 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த திட்டம்தான் மராட்டிய சட்டமன்ற தேர்தலில் கேம் சேஞ்சராக அமைந்ததாக கருதுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.
லட்சி பகின் திட்டத்தை கொண்டு வருகிறோம் என்று வெறும் வாக்குறுதியோடு நிறுத்திக்கொள்ளாமல் உடனடியாக அந்த திட்டத்தியது மகாயுதி அரசு. இதனால் மகாயுதி அரசின் மீது மக்களிடையே நம்பிக்கை அதிகரிக்க காரணமானது.
மத்தியபிரதேசத்தில் ‘லட்லி பக்னா’ எனும் உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்தி வெற்றி பெற்ற பாஜக மகாராஷ்டிராவிலும் இதே திட்டத்தை செயல்படுத்தி வெற்றியை தன்வசப்படுத்தி இருக்கிறது என்கிறனர் அரசியல் நிபுணர்கள்.
தினந்தந்தி நாளிதழும் கூட, மராட்டியம், ஜார்கண்டில் கிடைத்த வெற்றி மகளிர் உரிமைத்தொகை கொடுத்த வெற்றி! என்று தலையங்கம் தீட்டி இருக்கிறது.
’’மராட்டியத்தில் பாஜக அணி வெற்றி பெற்றதற்கு தமிழ்நாடு வழிகாட்டிய மகளிர் உரிமைத்தொகை என்ற ‘அன்பு சகோதரி திட்டம்’ முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகைதான் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது’’ என்று தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது தினத்தந்தி.