ஜானகி எடுத்த முடிவை பற்றி இந்த நேரத்தில் ரஜினி சொன்னது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினி மூலம் இபிஎஸ் சொல்ல வரும் சேதி என்ன? என்று அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றோருக்கும் புரிந்துவிட்டது போலிருக்கிறது.
அதிமுக சார்பில் ஜானகி அம்மாள் நூற்றாண்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொள்ளச்சொல்லி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நடிகர் ரஜினிக்கு அழைப்பிதல் கொடுத்திருக்கிறார். ரஜினி நேரில் வரமுடியாததால் அவர் விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து, ஜானகி அம்மாள் குறித்த நினைவுகளை பகிரிந்து அதை வீடியோவாக எடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்.
ஜானகி அம்மாள் நூற்றாண்டு விழாவில் இந்த வீடியோ ஒளிபரப்பானது. இபிஎஸ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ரஜினியின் பேச்சை ரசித்தனர். எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா குறித்து அவர் தனது நினைவுகளில் இருந்து பேசினார்.
எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு ஜானகி அம்மாள் அரசியலுக்கு வந்தது விபத்து. கொஞ்சம் கூட அவருக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்கிற ஈடுபாடு இல்லை. பலரும் வற்புறுத்தியதால் சூழ்நிலைக்கைதியாக அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆனார். தேர்தல் வந்தபோது இரண்டு அணியாக அதிமுக பிரிந்தது. அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதனால் வேறொரு சின்னத்தில் நின்று தோல்வி கண்டார் ஜானகி அம்மாள். அதன்பிறகு யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் அவரே ஒரு முடிவு எடுத்தார்.
ஜெயலலிதாவை அழைத்து, அரசியல் எனக்கு சரிப்பட்டு வராது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியை உங்களால்தான் முன்னுக்கு கொண்டுவர முடியும். அது என்னால் முடியாது என்று சொல்லி, இரட்டை இலை சின்னத்தை மீட்டு ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். இது எவ்வளவு பெரிய குணம் என்று சொல்லி இருந்தார் ரஜினி.
இந்த வீடியோ வெளிவந்த பின்னர், ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுகவை முன்னுக்கு கொண்டு செல்லக்கூடிய திறமை தனக்குத்தான் உண்டு என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் இபிஎஸ். இதை ரஜினி மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் என்று அதிமுகவில் இருந்து வெளியே இருப்போரிடையே சலசலப்பு எழுந்துள்ளது.
சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் மீண்டும் அதிமுகவுக்குள் வரத்துடிக்கும் நேரத்தில், அதுவும் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக துடிக்கும் நேரத்தில், அதே கனவுடன் ஓபிஎஸ் இருக்கும் நிலையில், அதிமுகவை வழிநடத்திச்செல்ல தான் மட்டுமே சரியானவர் என்று ரஜினி பேச்சின் மூலம் உணர்த்தி இருக்கிறார் இபிஎஸ்.
‘’எனக்கு அரசியல் சரிப்பட்டு வராது. உங்களுக்குத்தான் சரிப்பட்டு வரும். நீங்கள்தான் அதிமுகவை வழிநடத்திச்செல்ல சரியான ஆள்’’ என்று ஜெயலலிதாவிடம் ஜானகி சொன்னதாக ரஜினி சொன்னபோது, அருகில் இருந்தவரிடம் , ‘’ஆங்..பார்த்தியா சரியா சொல்லுறார்’’ என்று சொல்லுவது மாதிரி சைகை காட்டி அகமகிழ்ந்தார் இபிஎஸ்.
அதிமுகவை வழிநடத்த நான் தான் சரியான ஆள். நீங்கள் எல்லாம் இதற்கு சரிப்பட்டு வரமாட்டீர்கள். இதை உணர்ந்து வழிவிட்டு அமைதியாக இருங்கள் என்பதுதான் ரஜினி பேச்சின் மூலம் சசிகலா, ஓபிஎஸ்க்கு இபிஎஸ் சொல்ல வரும் சேதி என்று தெரிகிறது.