நாம் தமிழர் கட்சிக்கு இது இலையுதிர் காலம் மட்டுமல்ல; கிளையுதிர் காலமுமாக இருக்கிறது.
சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாம் தமிழர் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வெளியேறி மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். கட்சி தொடங்கியதில் இருந்தே பயணித்து வரும் மூத்த நிர்வாகிகள் பலரும் வெளியேறி இருக்கும் நிலையில் மேலும் பலர் வெளியேற உள்ளார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது ராஜீவ்காந்தியுடன் திருமணத்திற்கு சென்ற விவகாரம்.
கோவை, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பலரும் கூண்டோடு வெளியேறிவிட்டனர். நாமக்கல் மாவட்டத்திலும் 50க்கும் மேற்பட்டோர் கூண்டோடு வெளியேறி இருக்கிறார்கள்.
தங்களின் குறைகள் எதையும் கேட்பதில்லை. தங்களை பேசவும் விடுவதில்லை. சீமான் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டியே அனைவரும் வெளியேறி வருகிறார்கள்.
அவர்களை எல்லாம் நாதக ஸ்லீப்பர் செல்கள் என்று முதலில் சொன்னார் சீமான். பின்னர், ‘’என் முதுகில் பூச்சி ஊர்ந்து கொண்டிருப்பது எனக்குத்தெரியவில்லை. அது தெரிந்தால் எடுத்து தூரப்போட்டுவிடுவேன். அதை மற்றவர்கள் கண்ணுக்கு பட்டதும் எடுத்துக்கொள்கிறார்கள்’’ என்றார். அதாவது தனக்கு தொல்லை தரும் பூச்சிகள் என்றே வெளியேறும் கட்சியினரை விமர்சிக்கிறார் சீமான்.
இந்த நிலையில், நாதக சார்பில் நடந்த மாவீரர் நாள் கூட்டத்தில் பங்கேற்காமல், கட்சியில் இருந்து வெளியேறி திமுக இணைந்து அங்கே முக்கிய பொறுப்பில் திமுக மாணவரணி தலைவர் பொறுப்பில் இருக்கும் ராஜீவ்காந்தி பங்கேற்ற திருமணம் விழாவில் சென்று பங்கெடுத்திருக்கிறார் நாதக மூத்த நிர்வாகி.
நாதகவின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் நெல்லைசிவகுமார், மாவீரர் நாள் விழாவில் பங்கேற்காமல் ராஜீவ்காந்தியுடன் திருமணம் விழாவில் பங்கேற்றதால் கட்சிக்குள் சலசலப்பு எழுந்திருக்கிறது.
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே பயணித்துவருகிறார் நெல்லை சிவகுமார். அவருக்கே சீமான் மீது அதிருப்தி ஏற்பட்டதன் விளையே அவர் ராஜீவ்காந்தியுடன் சென்றிருக்கிறார். அவர் விரைவில் நாதகவில் இருந்து வெளியேற உள்ளார் என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது நெல்லை மாவட்ட நாதக வட்டாரத்தில்.