புயல் வருகிறது என்றால் எதிரி நாட்டின் படை போர் தொடுக்க வருவது போல ஒரு பதற்றம் தொற்றிக் கொள்வது இயல்பாக இருக்கிறது. புயல் என்பது போரும் அல்ல, இயற்கை என்பது மனிதகுலத்திற்கு எதிரியுமல்ல. இயற்கைக்கும் மனித வாழ்க்கைக்கும் சில முரண்பாடுகள் உண்டு. அதற்காக இயற்கையை மனிதர்கள் பகையாகப் பார்க்க வேண்டியதில்லை. புயல் வரும்போது எதிரியின் படையை எதிர்கொள்ளக்கூடிய அளவுக்கு அரசு-ஊடகம்-மக்கள் பயப்படவோ பதற்றப்படவோ வேண்டியதில்லை.
ஆண்டுதோறும் தென்மேற்கு பருவம், வடகிழக்கு பருவம் என இரு பருவங்களில் தமிழ்நாட்டில் மழை பெய்வது வழக்கம். இதில் தென்மேற்கு பருவம் என்பது மேற்கு தொடர்ச்சி மலையைச் சார்ந்துள்ள மாவட்டங்களில் அதிக மழையைத் தரும். குற்றால அருவிகளின் சீசன் என்று சொல்வது இந்தப் பருவத்தைத்தான். தமிழ்நாட்டைவிட தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்வது கேரளாவிலும், கர்நாடகாவிலும் என்பதால் மேட்டூர் அணை நிரம்பி, ஜூலை 12ல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா என்று எதிர்பார்ப்பதும் இந்த தென்மேற்கு பருவ மழை காலத்தில்தான்.
மற்றொரு பருவம் என்பது, வடகிழக்கு பருவம். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தொடங்கி கடலோர மாவட்டங்களிலும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களிலும் அதிக மழைப் பொழிவு ஏற்படுவது இந்தப் பருவத்தில்தான். அதிலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயலாக உருமாறி கரையேறி, பலத்த காற்றுடன் மழையைத் தருவது பெரும்பாலும் இந்த வடகிழக்கு பருவத்தில்தான். தானே, கஜா, வர்தா, மிக்ஜாம், ஃபெஞ்சல் என்ற பெயர்களிலான புயலும் அதன் தாக்கமும் வடகிழக்கு பருவத்தில் உருவானவைதான். எனவே நவம்பர்-டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்ட மக்களும், அதன் அருகிலுள்ள மாவட்டங்களின் மக்களும் முன்னெச்சரிக்கையாக இருந்திட வேண்டியது அவசியமாகிறது.
எண்ணூர் தொடங்கி கன்னியாகுமரி வரை தமிழ்நாட்டின் கடலோரத்தின் நீளம் ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகம். இதில் கடலூர், நாகை போன்ற மாவட்டங்களும் புதுச்சேரியும் அதற்குட்பட்ட காரைக்கால் கடற்கரைப் பகுதிகளும் புயலை எதிர்கொள்ளும் பகுதிகளாகும். ராமேஸ்வரம், கன்னியாகுமரி மாவட்ட கடலோரங்களில் கடல்சீற்றம் அதிகமாக இருப்பது வழக்கம். எனவே, புயல் சின்னங்கள் உருவாகும்போது கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. வானொலி மட்டுமே இத்தகைய பருவ நிலை குறித்த செய்திகளை அறிவிக்கக்கூடிய காலமாக இருந்தபோதே மீனவர்களும், கடலோர மாவட்ட மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் அக்கறை செலுத்தினர்.
தற்போது தகவல் தொழில்நுட்பம் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ள நிலையில், 24மணி தொலைக்காட்சி செய்திகள், கைப்பேசியில் பயன்படுத்தக்கூடிய செயலிகள், சமூக வலைத்தளங்கள் என உடனுக்குடன் புயல் நிலவரத்தைத் தெரிந்து கொள்ள மிக அதிகளவிலான வாய்ப்புகள் உள்ள நிலையில், முன்னெச்சரிக்கைக்குப் பதில் பதற்றமே மக்களிடம் தொற்றிக்கொள்கிறது.
நீண்ட நேரம் அசைவற்று, கடல் பகுதியிலேயே இருந்த ஃபெஞ்சால் புயல் மிக மெதுவாக நகர்ந்து புதுச்சேரியில் கரையைக் கடந்து, அதன்பிறகும் மெல்ல நகர்ந்த காரணத்தால் கடும் மழையால் புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. தமிழ்நாட்டின் விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி போன்ற வட உள் மாவட்டங்கள் புயலின் தாக்கத்தால் அதிக மழையையும் வெள்ளத்தையும் எதிர்கொண்டன. இதனால் அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்ககை முடங்கிப் போயின.
எந்தவொரு இயற்கை சீற்றத்தின்போதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்குவது இயல்பு. பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் இதுபோன்ற நேரங்களில் மேற்கொள்கின்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைக்கூட ஆறறிவு பெற்ற மனிதர்களால் மேற்கொள்ள முடியாமல் போவதும், பருவமழைக் காலத்தில் உருவாகக்கூடிய இயற்கையின் சீற்றத்தை போர்க்களம் போல சித்தரிக்கும் போக்கும் இயற்கையிடமிருந்து இன்னும் நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே உணர்த்துகிறது.
வயல்வெளிகளும், நீர்நிலைகளும் குடியிருப்புப் பகுதிகளாக மாறியுள்ளன. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட வளரும் நாடுகளில் இது தவிர்க்க முடியாததாகும். குடியிருப்புப் பகுதிகளை உருவாக்கும்போது தண்ணீர் வடிவதற்கான வசதிகளுக்கு முன்னுரிமை தருவதில் அரசும் குடியிருப்போரும் அக்கறை செலுத்தாவிட்டால் இயற்கை சீற்றத்தின் போது, தரைத்தளத்தைத் தாண்டி தண்ணீர் வெள்ளமாக சூழ்வதும், அதில் கார், பைக் போன்ற வாகனங்கள் மூழ்குவதும் தவிர்க்க முடியாததாகிவிடும். பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதோ கொண்டு வருவதோ சாத்தியமில்லாத சூழலாகிவிடும்.
புவி வெப்பமயம், காலநிலை மாற்றம் இவற்றால் மழை அளவு சீராக இல்லாமல் கடும் வறட்சியாகவோ, மேகவெடிப்பால் கனமழையாகவோ மாறுவதையும் காண்கிறோம். இந்த மாற்றங்களுக்கேற்ற முன்னேற்பாடுகள் இல்லாவிட்டால் ஒவ்வொரு பருவமழையும் போர் போலத்தான் தோன்றும். மரப்பொந்துகளிலும் குகைகளிலும் வாழ்ந்த ஆதிமனிதன், வீடு கட்டி வாழ்ந்ததே இயற்கையுடனான முரண்தான். வேட்டைத் தொழிலில் இருந்து வேளாண்மை நோக்கி வந்ததும் அத்தகைய முரண்தான். இயற்கையோடு இயற்கையாக மனிதன் வாழமுடியாது. இயற்கைக்கு முற்றிலும் முரணாகவும் வாழ முடியாது. இயற்கையைப் புரிந்து கொண்டு வாழ முடியும். அப்படி வாழ்ந்தால், இயற்கையின் சீற்றங்களை எதிர்கொண்டு வாழ முடியும். இதுதான் ஒவ்வொரு பருவ காலத்திலும் இயற்கை உணர்த்துகிற பாடம்.