இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024-25 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர்) 5.4 சதவீதமாகக் கடுமையாக குறைந்து பதிவாகியுள்ளது, இது கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையிலான மிகக் குறைந்த வளர்ச்சி விகிதமாகும்.
2-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான பல முக்கியமான துறைகள் கடும் சரிவை பதிவு செய்துள்ளன. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெருநிறுவன வருவாய் சரிவு, உள்ளிட்டவை இந்திய பொருளாதாரத்தின் மோசமான போக்கை வெளிக்காட்டுவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நேற்று (டிசம்பர் 2) டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 84.70 என்ற அளவில் சரிந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பொருளாதார வளர்ச்சி குறைவதால் ரூபாய் மதிப்பு சரிவதாக, Business Standard தெரிவித்துள்ளது.
2024-ம் ஆண்டில் மட்டும் தற்போது வரை இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 1.8 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், டாலருக்கு போட்டியாக புதிய நாணையத்தை உருவாக்க முயற்சிக்கும் BRICS நாடுகள் மீது சுமார் 100% வரி விதிக்கப்படும் என அச்சுறுத்தல் விடுத்துள்ளதும் ரூபாய் மதிப்பு மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு, 85 ரூபாயை தாண்டி சரியலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
2024-25 நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3-வது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாக பதிவாகலாம் என்பதால், வட்டி விகிதங்களைக் குறைக்க ரிசர்வ் வங்கிக்கு அதிக அழுத்தம் இருக்கும் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாகக் குறைந்திருப்பது, கடந்த 7 காலாண்டுகளில் இல்லாத மிகக் குறைவான விகிதம் ஆகும்.
பெருநிறுவனங்களின் வருவாயில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டால், இந்திய அரசாங்கத்தின் நேரடி வரி வருவாய் மற்றும் நிதி நிலையை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிதியாண்டின் 2-வது காலாண்டில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வரி செலுத்தும் தொகை கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் 7 சதவீதம் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான விகிதம் ஆகும்.
ஒரு நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் பொருளாதார ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் பர்சேசிங் மேனேஜர்ஸ் இன்டெக்ஸ் (PMI) குறியீடு, கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு நவம்பர் மாதம் 56.5-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் பல துறைகளில் குறைவான செயல்திறனாலும், உற்பத்தி மற்றும் நிதிச் சேவைகள் போன்ற முக்கிய துறைகளில் மந்தநிலையினாலும் பல சாவால்களை எதிர்கொள்கிறது. நிதியாண்டின் இரண்டாம் பாதியில் லேசான மீட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 6% அல்லது அதற்கும் குறைவாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.