ஒவ்வொரு பால்வெளியும் (Galaxy) அதன் மையத்தில் ஒரு மீப்பெரும் கருந்துளையை (Supermassive Black Hole) கொண்டுள்ளது. ஒவ்வொரு முட்டையிலும் மஞ்சள் கரு உள்ளது. ஆனால் சில நேரங்களில், கோழிகள் இரண்டு மஞ்சள் கருவுடன் முட்டைகளை இடுவதை நாம் கண்டிருப்போம். அதேபோல், சூப்பர்மாசிவ் கருந்துளைகளைப் பற்றி ஆராயும் சில வானியற்பியல் வல்லுநர்கள் பைனரி அமைப்புகளைக் கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.
Binary System: சில பால்வெளிகளின் இதயங்களில் ஒன்றையொன்று சுற்றும் இரண்டு சூப்பர்மாசிவ் கருந்துளைகளை கொண்ட அமைப்பு
கருங்குழி (Black Hole) அல்லது கருந்துளை என்பது, ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சத்தியைக் கொண்டுள்ள பால்வெளியின் ஒரு பகுதியாகும்.
மின்காந்த அலைகள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருந்துளை என்கின்றனர். கருந்துளைகள் பெரிய நட்சத்திரங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. இதற்குக் கன அளவோ, மேற்பரப்போ கிடையாது.
சூப்பர்மாசிவ் கருந்துளைகள் நமது சூரியனை விட மில்லியன் மடங்கு பெரியதாக இருக்கும். ஈர்ப்பு விசை (Gravity) எவ்வாறு செயல்படுகிறது மற்றும் பால்வெளிகள் (Galaxy) எவ்வாறு உருவாகின்றன என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் இதைப் பற்றி ஆராய்கிறார்கள்.
ஒரு பால்வெளி தனது மையப் பகுதியில் ஒன்று அல்லது இரண்டு கருந்துளைகளை கொண்டுள்ளதா? என்பதைக் கண்டறிவது ஒரு முட்டையை உடைத்து மஞ்சள் கருவை ஆராய்வது போல் எளிதானது அல்ல.
ஆனால் இந்த பைனரி சூப்பர்மாசிவ் கருந்துளைகள் எப்படி உருவாகின்றன என்பதை அளவிடுவது கண்டறியப்பட்டால், பால்வெளிகள் ஒன்றிணையும்போது என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் என கூறப்படுகிறது.
பால்வெளி மோதல்கள், ஈர்ப்பு அலைகள் மற்றும் பைனரி கருந்துளைகள்
பால்வெளி போன்ற விண்மீன் திரள்கள், பிரபஞ்சத்தைப் போலவே பழமையானவை, சில சமயங்களில் மோதி ஒன்றிணைந்து, இரு கருந்துளைகளை கொண்ட பெரிய பால்வெளிகளை உருவாக்குகின்றன. அவற்றின் மையப் பகுதியில் உள்ள மிகப்பெரிய கருந்துளைகள் நெருங்கி வரும்போது, காலப்போக்கில் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்ட ஒரே கருந்துளையாக உருவாகின்றன; இருப்பினும் அந்த இரு கருந்துளைகளும் இணைவதற்கு பல நூறு மில்லியன் ஆண்டுகள் ஆகலாம்.
இணையும்போது மாபெரும் ஈர்ப்பு அலைகளை வெளியிடுகின்றன.
ஈர்ப்பு அலைகளை கண்டறிதல்
ஈர்ப்பு அலைகளை கண்டறிய Pulsar Timing Arrays என்ற முறையை விஞானிகள் பயன்படுத்தி பல்சர்களின் ரேடியோ சிக்னல்களில் உள்ள முரண்பாடுகளை பகுப்பாய்வு செய்து அலைகளைக் கண்டறிய முடியும். பல பில்லியன் வருடங்களில் இருந்து கூட்டு ஈர்ப்பு அலை சமிக்ஞைகளை அவர்களால் கண்டறிய முடியும் என்றாலும், தனிப்பட்ட பைனரி அமைப்புகளை அடையாளம் காணும் அளவுக்கு அவை உணர்திறனை கொண்டிருக்கவில்லை.
இருப்பினும் செயலில் உள்ள விண்மீன் அணுக்கரு (Active galactic nucleus) மூலம் ஒளி சமிக்ஞைகளை பெற்றும் பைனரி கருந்துளைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆக்டிவ் கேலக்டிக் நியூக்ளியஸ் (ஏஜிஎன்) என்பது ஒரு விண்மீன் மண்டலத்தின் ஆற்றல்மிக்க மையமாகும்; அந்த பகுதியில் மைக்ரோவேவ், ரேடியோ, அகச்சிவப்பு, ஆப்டிகல், புற ஊதா, எக்ஸ்ரே மற்றும் காமா கதிர்கள் உள்ளிட்ட அதிகப்படியான ஆற்றல் வெளிப்படும்.
PG 1553+153 என்ற ஒரு பால்வெளியில் உள்ள Active galactic nucleus தோராயமாக ஒவ்வொரு 2.2 வருடங்களுக்கும் ஒளிகளை வெளிப்படுத்துகிறது. இது அதன் மையத்தில் பைனரி சூப்பர்மாசிவ் கருந்துளை அமைப்பு இருப்பதைக் குறிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.