சென்னை புத்தக கண்காட்சி நெருங்கி வரும் போது புத்தக வெளியீட்டு விழாக்களை நடத்துவது பதிப்பகத்தாரின் வழக்கம். அந்த நேரத்தில், சென்னையில் உள்ள அரங்குகளை முன்பதிவு செய்வது சிரமமாக இருக்கும். புத்தகங்களை குறித்த நேரத்தில் வெளிக்கொண்டு வருவதற்குரிய அச்சகங்கள் கிடைப்பது நெருக்கடியாக இருக்கும். புத்தகங்களுக்கு அட்டைப்படம் வரையும் ஓவியர்கள், புத்தங்களை வடிவமைக்கும் கணினி வரைகலையாளர் உள்ளிட்ட எல்லாருமே பரபரப்பாக இருப்பார்கள். அதனால், முன்னணி பதிப்பக நிறுவனங்கள் தங்கள் சொந்த செலவிலும் தனக்கிருக்கும் கட்டமைப்பிலும், தான் எதிர்பார்க்கும் புத்தகங்களை விரைந்து தயாரித்து, அதற்கான விழாக்களையும் நடத்தும்.
டாக்டர் அம்பேத்கர் நினைவுநாளான டிசம்பர் 6 அன்று பத்திரிகை துறையிலும் பதிப்புத் துறையிலும் முன்னணியாகத் திகழும் நிறுவனத்தின் சார்பில், அம்பேத்கர் பற்றிய தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. பொதுவாக, ஒரு புத்தகம் வெளியிடப்படும்போது, அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அந்த மேடையின் நாயகனாக இருப்பார். அல்லது அந்தப் புத்தகம் யாரைப் பற்றி எழுதியிருக்கிறதோ அவர் நாயகனாக இருப்பார். அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் அம்பேத்கர் முதன்மையாக இல்லை. அவரைப் பற்றி வெளியிடப்பட்டது பல கட்டுரைகள்-நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பு நூல் என்பதால் ஆசிரியர் என்ற முறையிலும் யாரும் நாயகனாக இல்லை. புத்தக வெளியீட்டாளர்கள் நோக்கமும் தங்களை நாயகனாக முன்னிறுத்திக் கொள்வதாக இல்லை. பிறகு? புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்த பணக்கார அரசியல்வாதியும், அவரால் மேடைக்கு கொண்டுவரப்பட்ட புதிய கட்சித் தலைவரான நடிகரும்தான் நாயகன் கேரக்டருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பணக்கார அரசியல்வாதி இரண்டாம் ஹீரோவாக, திரையில் செல்வாக்கு பெற்ற கதாநாயக நடிகரான கட்சித்தலைவர் மேடையிலும் ஹீரோவானார்.
புத்தக விழாக்களைப் பொறுத்தவரை, அந்தப் புத்தகத்தில் உள்ள செய்திகளோ, அந்த செய்திகளை சொல்லும் விதத்திலோ விழா முக்கியத்துவம் பெறும். கவனத்தை ஈர்க்கும். ஊடகங்களுக்கு ஒரு சில பரபரப்பு செய்திகளைக் கூடத் தரும். அதற்கேற்ப, புத்தகத்தில் உள்ள செய்திகளை மேடையில் இருப்பவர்கள் எடுத்துச் சொல்வார்கள். டாக்டர் அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில், அந்தப் புத்தகம் எந்த நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது, அதில் கட்டுரைகளை எழுதியவர்கள், நேர்காணல் அளித்தவர்கள் என்னென்ன செய்திகளை சொல்லியிருக்கிறார்கள். அந்த செய்திகள் இன்றைய கால கட்டத்தில் எந்தளவுக்குத் தேவையாக இருக்கிறது, அதனடிப்படையில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பவைதான் முக்கியம் பெறும். இவையெல்லாம், புத்தகத்தை வெளியிடுபவர்களோ, பதிப்பித்தவர்களோ, வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதர்களோ அந்தப் புத்தகத்தைப் படித்திருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.
டாக்டர் அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் புத்தகத்தின் சாரத்தைப் பேச ஆளில்லை. அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட சமத்துவ-சமயச்சார்பற்ற இந்திய அரசமைப்புச் சட்டம் இன்றைய மத்திய ஆட்சியாளர்களால் என்னென்ன பாடுபடுகிறது என்பதை எடுத்துரைக்க மேடையில் ஒருவர் மட்டுமே இருந்தார். அவர் அதை சரியாகவும் செய்தார். ஆனால், அந்த நேரத்தில், நேரலை ஊடகங்கள் தங்களின் விளம்பர இடைவேளைக்குப் போய்விட்டன. அவர்களுக்கும் இயல்பாக பசிக்குமே…
அதனால், புத்தகத்தை வெளியிட்டவர், வெளியிடுவதற்கான செலவுகளை செய்தவர் இவர்களை மட்டுமே நேரலையாக்கி, புத்தக விழா என்ற பெயரில் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பதற்கான வேலைகளைத் தொடங்கி வைத்தனர். குறிப்பாக, தமிழ்நாட்டின் ஆளுங்கட்சித் தலைமையிலான கூட்டணியை உடைப்பதுதான் என்பதுதான் புத்தக விழாவின் இலக்கு என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
புத்தகத்தைப் பதிப்பித்த நிறுவனத்தின் உரிமையாளரின் பேச்சு, புதிய கட்சித் தலைவரான நடிகரின் பி.ஆர்.ஓ. குரல் போலத் தொடங்கியபோதே நிகழ்ச்சியின் போக்கு புரிந்துவிட்டது. அதன்பிறகு, அம்பேத்கரை அம்போவென விட்டுவிட்டு ஆட்சியில் பங்கு, வேங்கைவயல் விவகாரம், மன்னராட்சி என்று அடுத்தடுத்த பிரபலங்கள் பேசி, புத்தக விழா எதற்காக நடைபெற்றதோ அதன் நோக்கத்தை நிறைவேற்றி வைத்தனர். நேரலை செய்த தொலைக்காட்சிகள் அதையே விவாதப் பொருளாக மாற்றின. சமூக வலைத்தளங்களில் லாவணிக் கச்சேரிகள் தொடங்கின.
கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் ஒரு புறமும், கூட்டணியில் பங்கேற்றிருக்கும் கட்சியின் தலைமையும் அதன் ஆதரவாளர்களும் இன்னொரு புறமும் தங்கள் நிலைப்பாட்டை விளக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். புத்தகத்தை வெளியிட்ட தலைவரின் கட்சியினர் குறுக்கும் மறுக்குமாக ஓட, ‘நூல்’ வெளியீட்டை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள் பதிப்பகத்தாரும், அதற்கு செலவு செய்தவரும்.