OpenAI நிறுவனம் ‘Sora’ என்கிற AI தொழில்நுட்பத்தில் இயங்கும் டெக்ஸ்ட்-டூ-வீடியோ ஜெனரேட்டர் பயன்பாட்டை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாம் எழுத்து வடிவில் கொடுக்கும் உரைகளை வீடியோக்களாக உருவாக்கி கொடுக்கும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் Sora பயன்பாடு குறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்த OpenAI நிறுவனம், இப்போது ChatGPT Plus மற்றும் Pro பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
மேலும், அசல் மாடலை விட பல்வேறு தனித்த அம்சங்களைக் கொண்ட ‘Sora Turbo’ என்கிற மேம்படுத்தப்பட்ட பதிப்பையும் OpenAI நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
1080p வீடியோ ரெசல்யூசனுடன், 20-வினாடி வரையிலான வீடியோக்களை உருவாக்க Sora அனுமதிக்கிறது. தேவைகளைப் பொறுத்து அகலத்திரை (Widescreen), செங்குத்து(Vertical) அல்லது சதுரம்(Square) ஆகிய வடிவங்களை பயனர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.
Our holiday gift to you: Sora is here. https://t.co/UhdmYuGHtT pic.twitter.com/ljoruQsfO0
— OpenAI (@OpenAI) December 9, 2024
நீங்கள் ChatGPT Plus சந்தாதாரராக இருந்தால், Sora-வை பயன்படுத்தி அதிகபட்சம் 720p வீடியோ ரெசல்யூசனுடன் மாதத்திற்கு 50 வீடியோக்கள் வரை உருவாக்கலாம். அதிக தெளிவுத்திறன், நீண்ட வீடியோக்கள் மற்றும் பல அம்சங்களை விரும்புவோருக்கு, ChatGPT Pro திட்டம் மூலம் பயன்படுத்தலாம்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் Sora இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை; ChatGPT பயன்பாட்டில் உள்ள இந்தியா உட்பட பிற அனைத்து நாடுகளிலும் ‘Sora’ பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.
குழந்தை பாலியல் துஷ்பிரயோக சித்தரிப்புகள் மற்றும் பாலியல் டீப்-ஃபேக் வீடியோக்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் வீடியோக்களை உருவாக்குவதை Sora அனுமதிக்காது என்றும் OpenAI தெரிவித்துள்ளது.