’’நீதி கிடைக்க வேண்டும்’’ என்று தன் அறையில் எழுதி வைக்கும் அளவிற்கு மாமியார் மற்றும் மனைவி கொடுமை இருந்திருக்கிறது.
மனைவி மற்றும் மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு மருமகன் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பதிவு செய்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவேற்றி, அதை எலான் மஸ்க், டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கும் பகிர்ந்துள்ளார். இந்திய ஜனாதிபதிக்கும் அந்த வாலிபர் கடிதம் மூலம் தனது நிலையை தெரியப்படுத்தி இருக்கிறார்.
அந்த வாலிபரின் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அதுல் சுபாஷ். 34 வயதான அந்த வாலிபர் பெங்களூருவில் வசித்து வந்தார். கடந்த 2019ஆம் ஆண்டில் திருமண இணையதளம் மூலமாக பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டார். 2020ல் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பின்னர் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்திருக்கிறார் மனைவி. மாமியாரும் பணம் கேட்டு அடிக்கடி தொடந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் அதுல் சுபாஷ் பணம் கொடுக்க மறுத்ததால் குழந்தையுடன் தாய் வீட்டிற்கே சென்றுவிட்டார் மனைவி.
10 லட்சம் ரூபாய் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மாமனார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக அதுல் சுபாஷ் மீது மாமியார் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கு விசாரணையில் மாமனாருக்கு 10 ஆண்டுகளாக இதய நோய் இருந்ததை ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறார்.
ஆனாலும் குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த போது, பொய் வழக்குகளால் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று அதுல் சொன்னதற்கு, நீ ஏன் இன்னும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கேட்டிருக்கிறார் மனைவி. இதைக்கேட்டு நீதிபதி சிரித்திருக்கிறார்.
நீதிபதியே இப்படி தன்னோட நிலைமையை புரிந்துகொள்ளாமல் சிரிக்கிறாரே என்று வேதனையில் இருந்திக்கிறார் அதுல். இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றால் ஐந்து லட்சம் ரூபாய் பணம் கொடு என்று கேட்டிருக்கிறார் நீதிபதி.
மாமியாரும் , நீ ஏன் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று கேட்டிருக்கிறார். நான் தற்கொலை செய்துகொண்டால் உங்களுக்கு யார் பணம் தருவார்? என்று கேட்டதற்கு, நீ போனா என்ன, உன் அப்பா இருக்குறாரே, அவர் பணம் தருவார் என்று சொல்லி இருக்கிறார் மாமியார். அதோடு, உன் பெற்றோர் இறந்துவிட்டால் சொத்து, பணம் எல்லாம் எங்களுக்கு வந்துவிடும் என்றும் சொல்லி இருக்கிறார்.
தன்னை சித்திரவதை செய்வது மட்டுமல்லாமல் தன் குடும்பத்தினரையும் கொடுமைப்படுத்தும் நோக்கில் இருப்பதை அறிந்ததும் மனவேதனை அடைந்திருக்கிறார்.
Honest and a hardworking man's life lost because of a greedy woman & biased laws!
— मैं हूँ Sanatani 🇮🇳 🚩🚩 (@DesiSanatani) December 10, 2024
Atul Subhash didn't commit su!c!de, the system k!ll*d him! 💔 pic.twitter.com/5HvMFDWkdw
இதனால் தன்னை அழித்துக்கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றுகிறேன் என்று சொல்லி, தனக்கு மனைவியும், மாமியாரும் செய்த கொடுமைகளை சொல்லி அதை வீடியோவாக பதிவு செய்து அதை எக்ஸ் தளத்தில் பதிவேற்றி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் ஆகியோருக்கும் பகிர்ந்திருக்கிறார்.
நீதிபதியே சட்டத்திற்கு எதிராக இருந்ததை இந்திய ஜனாதிபக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவை வெளியிட்ட பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அதுல்.
தன்னை மட்டுமல்லாது தன் குடும்பத்தினர் மீது பல்வேறு வழக்குகள் போட்டு பிரச்சனை செய்து வந்ததை அதுலால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை என்கிறார் அவரின் சகோதரர் பிகாஸ் குமார்.
சுபாஷின் அறையில், ‘’நீதி கிடைக்க வேண்டும்’’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இது அவரின் குடும்பத்தினரை உலுக்கி எடுத்திருக்கிறது.