கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாததால், அதிக மருத்துவ இடங்களுடன் கர்நாடகா முதலிடமும் உத்தரபிரதேசம் இரண்டாம் இடமும் பிடித்துள்ளன.
தற்போது 12,050 எம்பிபிஎஸ் இடங்களைக் கொண்டு தமிழ்நாடு இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளது; கர்நாடகா (12,545 இடங்கள்) மற்றும் உத்தரப் பிரதேசம் (12,425 இடங்கள்) ஆகியவை முதல் இரு இடங்களை பிடித்துள்ளன.
தமிழ்நாட்டில் 77 மருத்துவக் கல்லூரிகள் உள்ள நிலையில், உத்தரப் பிரதேசம் (86 கல்லூரிகள்) மற்றும் மகாராஷ்டிரா (80 கல்லூரிகள்) ஆகிய மாநிலங்கள் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதிப் பெற்று கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.
கடந்த 2021-ல் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டதற்குப் பிறகு, கடந்த 3 ஆண்டுகளாக புதிய கல்லூரிகள் தொடங்கவோ அல்லது எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்கவோ மத்திய அரசு இதுவரை அனுமதிக்கவில்லை.
2021-ல் நிறுவப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொன்றிலும் 50 இடங்கள் வரை அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்திடம் (NMC) தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியை நிறுவுவதை தமிழ்நாடு அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருப்பினும், 6 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் அமைப்பதற்கான தமிழ்நாடு அரசின் முன்மொழிவுகளை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி உள்கட்டமைப்பை விரிவுபடுத்த தேவையான நிதி மற்றும் அனுமதியை கோரி மத்திய சுகாதார அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.