பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை என்று பழனிசாமி சொல்லி வந்தாலும், பாஜக – அதிமுக ‘கள்ளக்கூட்டணி’ தொடர்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை உண்மையாக்குகின்றன பழனிசாமியின் அண்மைக்கால நடவடிக்கைகள்.
பாஜக கொண்டு வந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல் ‘ மசோதாவுக்கு நாடெங்கிலும் எதிர்ப்பலைகள் எழுந்திருக்கும் நிலையில் அது பற்றி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார் பழனிசாமி.
இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய விவகாரத்திலும் பழனிசாமி அமைதியாகவே இருந்தார். இப்போது, அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவை கண்டிக்காமல் உள்ளார் பழனிசாமி.
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், தவெக கட்சிகள் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கூட்டணியில் இருந்தாலும் கூட பாமகவும் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், கூட்டணியில் இல்லை என்று சொல்லிக்கொள்ளும் அதிமுகவோ இதுவரையிலும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனாலும் கட்சியின் தலைமையிடம் இருந்து, பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் இருந்து எந்த கண்டனமும் இதுவரையிலும் இல்லை.
கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது என்று அண்ணாமலை சொன்னதற்கு, அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொல்லும் அதிமுக நிர்வாகிகள், பாஜகவுடன் இணையாவிட்டால் அதிமுக அழிந்துவிடும் என்று டிடிவி தினகரன் சொன்னபோது, ரெய்டில் இருந்து தப்பிக்க டிடிவி இப்படி பேசுகிறார் என்று சொல்லும் அதிமுக நிர்வாகிகள், பழனிசாமி ஏன் பதிலேதும் சொல்லாமல் உள்ளார் என்பது குறித்தும் எதுவும் சொல்வதில்லை.
”எங்கே பழனிசாமி?’’ கண்டால் வரசொல்லுங்க என்றே எதிர்க்கட்சிகள் கேட்டு வருகின்றன. ’’யார் கண்ணிலும் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கிறார் பழனிசாமி’’ அமைச்சர் ரகுபதியும் விமர்சித்துள்ளார். ஆனாலும் அசராமல் உள்ளார் பழனிசாமி.
பழனிசாமியின் இந்த மவுனம், பாஜகவுடன் கூட்டணிக்கு சம்மதம் என்று சொல்லாமல் சொல்கிறது என்கிற பேச்சு எழுந்துள்ளது.