எண்பதுகளில் பரபரப்பாக அறியப்பட்டவர் கலியபெருமாள். ‘மக்கள் படை’ இயக்கத்தின் தலைவர் என்று ‘விடுதலை’ படத்தில் காட்டப்படும் வாத்தியார் பெருமாள், ‘புலவர் கு.கலியபெருமாள்’ என்று சொல்லப்படுகிறது.
வாத்தியார்
கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் அடுத்த சவுந்திர சோழபுரம் கிராமத்தில் பிறந்தவர் கலியபெருமாள். அஞ்சலை – குஞ்சான் தம்பதிக்கு இரண்டாவது மகனாக 1924இல் மார்ச் 4ஆம் தேதி பிறந்தவர்.
சவுந்திரசோழபுரத்தில் தொடக்க கல்விப்படிப்பையும், பெண்ணாடத்தில் பள்ளிப்படிப்பையும் முடித்த கலியபெருமாள், விழுப்புரம் கல்லூரியில் தமிழ் கற்றார்.
போராளி
கல்லூரி காலகட்டத்தில் தந்தை பெரியாரின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு பெரியாரின் சுயமரியாதை நூல்களையும், துண்டறிக்கைகளையும் மாணவர்களுக்கு வழங்கி வந்தார் கலியபெருமாள். திருவையாறு அரசர் கல்லூரியில் பார்ப்பன மாணவர்களின் விடுதியில் பிற மாணவர்கள் நுழையக்கூடாது என்று இருந்த கட்டுப்பாட்டை நீக்க போராடினார். ‘திராவிடர் மாணவர் கலகம்’ எனும் அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களை திரட்டி போராடி அந்த தடையை ஒழித்தார்.
புலவர்
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் 1960களில் தமிழாசிரியராக பணியாற்றியவர் கலியமூர்த்தி. அப்போது மாணவர்கள் அவரை புலவர் என்று அழைத்தனர். இதனால் அவர் புலவர் கலியபெருமாள என்று அழைக்கப்பட்டு வந்தார்.
அறுவடை இயக்கம்
சாதி கொடுமைகளுக்கு எதிராக முழங்கிய கலியபெருமாள் பெரியார் இயக்கத்தில் தீவிரமாக இருந்து வந்தார். பின்னர் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். கருத்து வேறுபாட்டினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறி சாரு மஹூம்தார் தொடங்கிய ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’ யில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
எளியோர்களிடம் அதிக வட்டி வசூலிப்பவர்கள், பொதுச்சொத்துகளை அபகரிப்பவர்களை அழித்தொழிப்பு செய்ய வேண்டும் என்ற சாரு மஜூம்தார் முழக்கத்தை செயல்படுத்த தொடங்கினார் பெருமாள். இதற்காக அவர் தமிழாசிரியர் பொறுப்பினை துறந்தார்.
இரவுகளில் விவசாயிகளை திரட்டிச் சென்று பண்ணையார் நிலங்களில் அறுவடை செய்து எளியோர்க்கு கொடுத்தார் பெருமாள். ‘அறுவடை இயக்கம்’ என்று அப்போது மக்களால் இது பேசப்பட்டது.
ஆயுத போராட்டம்
கூலி உயர்வு, இந்தி எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, போராட்டங்களை முன்னெடுத்து வந்த பெருமாள், நக்சல்பாரி அமைப்பில் இணைந்த பின்னர் ஆயுதப்போராட்டத்தையும் முன்னெடுத்தார்.
கூலிப்படை
பெண்ணாடம் தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்காக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தார் பெருமாள். தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆலை நிர்வாகம் கொதித்தது. பெருமாளை கொலை செய்ய கூலிப்படை அமைத்தது. ஆனாலும் மக்கள் சக்தியால் பெருமாளை ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதனால் 20 இலட்சம் ரூபாயை கொண்டு சென்று பெருமாளின் மனைவியிடம் கொடுத்த ஆலை நிர்வாகம், தங்களுக்கு சாதகமாக பெருமாள் நடந்து கொள்ளும்படி கேட்டது. 1970இல் 20 இலட்சம் என்பது மிகப்பெருந்தொகை. ஆனாலும் போராளி பெருமாளின் அந்த பணத்தை தூக்கி எறிந்துவிட்டார்.
வெடிகுண்டு – தலைமறைவு
தனது தோட்டத்தில் 1970இல் பிப்ரவரி மாதத்தில் தற்காப்புக்காக நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தார் பெருமாள். அப்போது எதிர்பாராத விதமாக குண்டுகள் வெடித்ததில் பெருமாள் படு காயமடைந்தார். அவருடன் இருந்த காணியப்பன், கணேசன், சர்ச்சில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனால் அந்த மூன்று பேரையும் தோட்டத்திலேயே புதைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
கடலூர் , அரியலூர் மாவட்ட முந்திரிக்காடுகளில் தலைமறைவாக இருந்து வந்த பெருமாள், இரவு நேரங்களில் சைக்கிளில் வந்து ஆதரவாளர்களின் வீடுகளில் துண்டு சீட்டு வைத்துவிட்டு சென்றுவிடுவார். இப்படித்தான் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வந்தார் பெருமாள்.
விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் போராடி வந்த பெருமாள், ரவுடிகள், கட்ட பஞ்சாயத்துகளில் இருந்தும் மக்களை காத்தார். டீக்கடையில் தனிக்குவளைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
கைது – சிறை
நாட்டு வெடிகுண்டு தயாரித்த விவகாரத்தையும், அந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்ததையும் போலீசாருக்கு சிலர் சொல்லிவிட்டதால், கலியபெருமாளையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ்.
பெருமாள் மற்றும் அவரது மூத்த மகன் வள்ளுவன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் வள்ளுவனுக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
தப்ப முயற்சி
கலியபெருமாளும் அவரது குடும்பத்தினரும் 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் மாற்றி மாற்றி அடைக்கப்பட்டார் பெருமாள். மகன்களை பார்க்க முடியாதபடி தனித்தனி சிறைகளை அடைத்தனர்.
அந்த காலகட்டத்தில் கைதான பொன்பரப்பி தமிழரசன் பெருமாளுடன் ஒரே அறையில் இருந்தார். முனிராஜ், ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து இவர்கள் சிறையில் இருந்து தப்ப முயன்றனர்.
சிறை மதில்சுவரை தாண்ட முயற்சித்த பெருமாளுக்கு கடுமையான அடி. அவரை காப்பாற்ற திரும்ப வந்த தமிழரசனையும் பிடித்துவிட்டது போலீஸ். இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டதில் இரண்டு தினங்கள் நினைவிழந்து கிடந்தார் தமிழரசன்.
விடுதலை
12 ஆண்டுகளுக்கு மேலாக பெருமாளும் அவரது குடும்பத்தினரும் சிறையில் இருப்பதை அறிந்த டெல்லி பத்திரிகையாளர் கன்சியாம் பர்தேசி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் 1983இல் பெருமாளும் அவரது குடும்பத்தினரும் நீண்ட நாள் பரோலில் விடுவிக்கப்பட்டனர். சில ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டனர்.
தனித்தமிழ்நாடு
சிறையில் இருந்து வெளியே வந்த பெருமாள், தமிழரசனுடன் இணைந்து தனித்தமிழ்நாடு கோரிக்கையினை முன் வைத்தார்.
பிரபாகரன் சந்திப்பு
2007ஆம் ஆண்டில் முதுமையின் காரணமாக மறைந்தார் பெருமாள். வெடிகுண்டு தயாரித்தபோது உயிரிழந்த மூன்று பேரின் உடலுக்கு அருகே பெருமாள் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திற்கு ‘தென்னஞ்சோலை செங்களம்’ என்று பெயரிட்டுள்ளனர்.
2006ம் ஆண்டில் ‘மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன்’ என்று தன் வரலாற்று நூலினை எழுதி உள்ளார் பெருமாள். அந்த நூலில் பிரபாகரனுடனான சந்திப்பை எழுதி இருக்கிறார்.
சென்னை பாண்டிபஜாரில் முகுந்தனுடன் ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்ட பிரபாகரன் சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதுகுறித்து அந்த நூலில், ‘’எங்கள் அறைக்கு அருகிலேயே பிரபாகரனை அடைத்தார்கள். அடிக்கடி என்னுடன் பேசுவார். அதன் பின்னர் விடுதலையாகி சென்றுவிட்டார். மருத்துவமனைக்கு அழைத்து போகும் சமயங்களில் இரண்டு முறை சிறைக்கு வெளியேயும் என்னை நலம் விசாரித்தார்’’ என்று குறிப்பிட்டுள்ளார் பெருமாள்.
அப்பா
விடுதலை படத்தில் தன் அப்பாவை அப்படியே காட்டி இருக்கிறார்கள் என்கிறார் பெருமாளின் இரண்டாவது மகன் சோழ நம்பியார்.