ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கேட்பதற்கு இனிப்பாகத் தெரியலாம். செலவு மிச்சப்படும் என நம்ப வைக்கலாம். ஆனால், அது இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கு எதிரானக் கொடுங்கோன்மை என்பதை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காமல் போனதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். பா.ஜ.கவின் நோக்கம் என்னவென்பதை நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அறிந்திருந்த காரணத்தால்தான், இதற்கான முழுமையான ஆதரவு கிடைக்காமல், இது குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இந்தியாவை ஒப்பிடும்போது இலங்கை என்பது மிகச் சிறிய நாடு. அந்த நாட்டில் அதிபர் முறையிலான ஆட்சி நடைபெறுகிறது. அமெரிக்கா வலிமையான நாடு. அங்கும் அதிபர் முறையிலான ஆட்சி நடைபெறுகிறது. அதாவது, தங்கள் ஜனாதிபதியை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுங்கட்சியின் பிரதமருக்கு அதிக அதிகாரங்கள் உள்ளபோதும், முப்படைகளின் தலைவர் என்ற பெருமை குடியரசுத் தலைவருக்குரியது. அமெரிக்காவில் ராணுவம் உள்ளிட்ட படைகள், வெளிநாட்டு உறவு, பிறநாட்டு உள்விவகாரங்கள் உள்பட பலவற்றிலும் தலையிடும் அதிகாரம் கொண்டவராக அந்நாட்டு அதிபர்கள் இருந்து வருகிறார்கள். அவ்வளவு வலிமை கொண்ட அமெரிக்காவிலும், சிறு தீவான இலங்கையிலும் ஜனாதிபதி (அதிபர்) தேர்தல் தனியாகவும், நாடாளுமன்றத்திற்கானத் தேர்தல் தனியாகவும்தான் நடைபெறுகிறது.
தனித்தனியாக நடத்துவதற்கான காரணம், ஒரே தேர்தலாக நடத்தினால் அந்தந்த மாகாண மக்களின் மனநிலை முழுமையாக வெளிப்படாது என்பதால்தான். இந்தியாவில் இதற்கொரு எடுத்துக்காட்டாக, நாடாளுமன்றத் தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வென்றது. ஆனால், அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதனால் ஆட்சி அமைக்க முடியவில்லை. பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. தமிழ்நாட்டிலும் இப்படிப்பட்ட முடிவுகள் 1980, 1989 ஆகிய காலகட்டங்களில் வெளிப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தினால் முடிவுகள் ஒரே பக்கமாக சாயும் என்பதற்கு 1984, 1991, 1996 ஆகிய தேர்தல்கள் தமிழ்நாட்டிற்கான சாட்சியங்களாக இருக்கின்றன.
பா.ஜ.க.வை பொறுத்தவரை சர்வ அதிகாரம் கொண்ட அரசு, எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றம், அதற்கேற்ப ஒரே தேர்தல் என்பது அதன் நோக்கமாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் இனி 2029ல் நடைபெறும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026ல் நடைபெறும். இரண்டையும் ஒன்றாக நடத்தவேண்டுமென்றால் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க வேண்டுமும். ஒரு சில மாநிலங்களின் தேர்தலுக்காக கலைக்க மாட்டார்கள். அப்படியானால் தமிழ்நாடு சட்டமன்றத்தின் காலக்கெடு நீடிக்கப்படுமா என்றால் அதுவும் கிடையாது. 2026ல் தேர்தல் நடத்தி, இரண்டாண்டுகாலம் மட்டுமே ஆட்சி செய்யும் வாய்ப்பை வழங்கி, அதன்பின் 2029ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் சேர்த்து நடைபெறும். இந்த வகையில்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை உள்ளது. இதில் எங்கே ஜனநாயகம் இருக்கிறது? இதில் எங்கே செலவு குறைகிறது?
இந்தியாவின் பிற மாநிலங்களில் அமைந்துள்ள ஆட்சிகளின் கால அளவையும், நாடாளுமன்றத்தின் கால அளவையும் சமன்படுத்தும் வகையில் இதுபோன்ற தண்டச்செலவு இடைத்தேர்தல்களை நடத்தி முடிக்கவே 2034ஆம் ஆண்டுவரை ஆகிவிடும் என்கிற தேர்தல் வல்லுநர்கள் இது கூட்டாட்சி முறைக்கு முற்றிலும் எதிரானது என எச்சரிக்கிறார்கள். நாடாளுமன்ற-சட்டமன்றத் தேர்தல்களுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஆணிவேரில் வெந்நீரை ஊற்றுகின்ற செயலாகும். இப்போதே உள்ளாட்சித் தேர்தல்கள் அந்தந்த மாநில அரசுகளின் விருப்பத்திற்கேற்ப நடத்தப்படுகின்றன. இதையும் ஒரே நாடு-ஒரே தேர்தல் கணக்கில் சேர்த்தால் அடிப்படைக் கட்டமைப்பு தகர்ந்துவிடும்.
ஒரே தேர்தல் என்பது தேவையற்றது. உடனடித் தேவை என்பது வெளிப்படையானத் தேர்தல். வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பது நீக்குவது இவற்றில் பா.ஜ.க.வினரின் கை ஓங்கியிருப்பதையும், தங்களுக்கு வேண்டியவர்களை சேர்ப்பதும், எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் ஆயிரக்கணக்கானவர்களை ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதும் அம்பலமாகி வருகிறது. வாக்கு சதவீதத்தை திடீரென அதிகரிக்கச் செய்வது, வாக்குச்சாவடிக்குள் புகுந்து முறைகேடு செய்வது, பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்படும் வாக்குகளுக்குமான வித்தியாசம் எனத் தொடரும் குற்றச்சாட்டுகளையும் அது தொடர்பான வழக்குகளையும் விசாரித்த பஞ்சாய்-ஹரியானா உச்சநீதிமன்றம் ஹரியான சட்டமன்ற தேர்தல் தொடர்பான வாக்குப்பதிவு சி.சி.டி.வி. காட்சிகளை பகிர உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஒன்றிய பா.ஜ.க. அரசு வாக்குப்பதிவு மையங்களில் உள்ள வீடியோ பதிவு காட்சிகளை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து சட்டத் திருத்தம் செய்திருப்பது, வெளிப்படையானத் தேர்தல் முறைக்கு எதிராக இருப்பதுடன், தேர்தல் ஆணையத்தைத் தன் கைப்பாவையாகக் கருதுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதன் உள்நோக்கம், ஒரு தேர்தலும் இல்லாமல் செய்வதுதானோ!
88zxw6