
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது என்றாலும் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க. இப்போது அதற்கு ஆயத்தமாகி இருக்கிறது. பூத்வாரியாக தேர்தல் பணிகளை அக்கட்சித் தொடங்கியுள்ள நிலையில், தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவைரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ‘வெல்வோம் 200-படைப்போம் வரலாறு’ என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் பெரிய கட்சிகளும் அதன் கூட்டணிகளும் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று சொல்வது வழக்கமானதுதான். கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் இதற்கு முந்தைய தேர்தல்களில் சொல்லியிருக்கிறார்கள். 1971, 1991, 1996, 2011 ஆகிய தேர்தல் களங்களில் கிட்டதட்ட 200 தொகுதிகளிலோ அல்லது 200க்கும் மேற்பட்ட தொகுதிகளிலோ கூட்டணியாக வென்று ஆட்சியை அமைத்திருக்கின்றன தி.மு.க.வும் அ.தி.மு.க.வும். எனினும் தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முழக்கம் கவனம் பெற்றிருப்பதற்கு காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு-புதுச்சேரியை உள்ளடக்கிய நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளில் வெற்றி என்று அவர் சொன்னது போலவே தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
இந்திய அளவில் இந்தியா கூட்டணி இப்படி முழுமையாக வெற்றி பெற்றது தமிழ்நாட்டில்தான் என்பதால், மு.க.ஸ்டாலின் சொன்னதை செயல்படுத்தும் வியூகமும் வலிமையும் கொண்டவர் என்கிற பார்வை அகில இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ளது. 2019ஆம் நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் தமிழ்நாட்டில் வலுவானக் கூட்டணியை அமைத்து 39 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்தார். அதே கூட்டணி 2021 தேர்தல் களத்திலும் தொடர்ந்த காரணத்தால், ஆறாவது முறையாக தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்தக் கூட்டணி தொடர்ந்து மகத்தான வெற்றி பெற்றது.
தற்போதைய தமிழக அரசியல் சூழலில் தி.மு.க.வுக்கு செல்வாக்கு உள்ளது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இன்னமும் தன் சொந்தக் குழப்பங்களிலிருந்து மீளவில்லை. பா.ஜ.க., நா.த.க., த.வெ.க போன்ற கட்சிகள் தி.மு.க.வை எதிர்க்கின்ற கட்சிகளாக இருந்தாலும் தனித்தனியாக இருக்கின்றன. அவற்றின் வாக்குபலம் தனிப்பட்ட முறையிலான வெற்றிக்கு வாய்ப்பாக இல்லை. இவை ஒருங்கிணைந்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவான நிலை ஏற்பட்டாலோ, தி.மு.க.கூட்டணியில் அண்மைக்காலமாக வெளிப்படும் சலசலப்புகள் தேர்தல் நேரத்தில் அணி மாறும் கட்டத்திற்கு வந்தாலோதான் முடிவுகளில் மாற்றம் ஏற்படக்கூடியதாக இருக்கும். தற்போதைய நிலையில், தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக்கும் களம் சாதகமாக உள்ளது.
மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம் உள்ளிட்ட தி.மு.க. அரசின் திட்டங்களுக்கு பொதுமக்களிடம் குறிப்பாக பெண் வாக்காளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக இருந்த பெண்கள் வாக்கு, தற்போது மு.க.ஸ்டாலினுக்கும் அவரது தலைமையிலான தி.மு.க.வுக்கும் ஆதரவாக உள்ளது. சிறுபான்மை வாக்கு வங்கியும் தி.மு.க.வுக்கு பலம். எனினும், தி.மு.க.வுக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கடந்த மூன்றாண்டுகளாக தங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்ற அதிருப்தியை வெளிப்படுத்துவதுடன் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் ஊதியம், நிலுவைத் தொகை ஆகியவை குறித்து முன்வைக்கும் கோரிக்கைகள், அரசுக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் நியமனம், கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியம், அரசு ஊழியர்கள் கோரும் பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்குதல் போன்றவற்றில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் நிலைமையே பல துறைகளிலும் நீடித்து வருவதாகவும், சில துறைகளில் முந்தைய ஆட்சியே பரவாயில்லை என்கிற நிலைமை நீடித்து வருவதாகவும் அரசு ஊழியர்கள் தரப்பிலிருந்து குமுறல்கள் வெளிப்படுகின்றன.
சொந்தக் கட்சியான தி.மு.க.வினரிடமிருந்தும் அதிருப்திகளுக்கும் குமுறல்களுக்கும் குறைவில்லை. ஆட்சிக்கு வந்து எந்தப் பயனும் இல்லை என்கிற கீழ்மட்டத்தில் உள்ள நிர்வாகிகளின் குமுறல், மேல்மட்ட நிர்வாகிகள் தங்களைக் கண்டுகொள்வதேயில்லை என்ற குமுறல், அரசு அலுவலகங்களுக்கு சென்றால் எந்த காரியமும் நடப்பதில்லை-அதிகாரிகள் தங்களை சுத்தமாக மதிப்பதில்லை என்ற குமுறல், டெண்டர்-காண்ட்ராக்ட் போன்றவற்றில் இன்னமும் அ.தி.மு.க.வினரே பலனடைந்து வருகிறார்கள் என்ற கோபம் இவையனைத்தும் ஒரு சேர கட்சிக்குள் வெளிப்படுகிறது.
செழித்து வளர்ந்திருக்கும் பயிர்களின் நடுவே களைகளும் மண்டியிருக்கின்றன. எடுக்க வேண்டியதை எடுத்தால்தான் செழிக்க வேண்டியது செழிக்கும். தி.மு.க. தலைவர் போடும் தேர்தல் கணக்கும் பலிக்கும்.
Your writing flow so effortlessly that I easily lose track of time while absorbing myself in your blog.
Your website is my go-to place for educational and insightful articles.