இந்திய குடும்ப அமைப்பில் பெண்கள் உரிமையற்றவர்களாகவே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டு இருந்தார்கள். சமுதாய புரட்சியாளர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் உரிமைக்காக போராடி இருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் அரசியல் சட்டம் வழியாக பெண்களின் உரிமைகளும் பாதுகாப்பும் நிலை நிறுத்தப்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இன்றளவும் அவர்களுக்கான பாதுகாப்பு முழுமையாக இருக்கிறதா என்ற கேள்விக்கு நியாயமான பதில் என்பது இல்லை என்பதே.
பெண்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாடு தனித்துவமானது. பெரியாரின் சிந்தனை வழி இயக்கங்களின் பங்களிப்பு குடும்ப அமைப்பிலும் ஆன்மீகத் துறையிலும் மற்ற தளங்களிலும் பெண்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவதில் முக்கிய பங்காற்றி உள்ளனர். குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம உரிமை அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, மகளிர் சுய உதவி குழுக்கள், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை இதற்கான சில எடுத்துக்காட்டுகளாக உள்ளன. ஆனாலும் முழுமையான அளவில் பெண்களுக்கான பாதுகாப்பு தமிழ்நாட்டில் இருக்கிறதா என்ற கேள்விக்கு அச்சம் நிறைந்த பதிலை கொடுக்கிறது அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்திருக்கின்ற கொடூரம்.
தற்சார்புடன் முன்னேறும் பெண்களை, உயர்கல்வி பயிலும் மாணவிகளை பாலியல் கண்ணோட்டத்துடன் அணுகும் ஆண்களின் பார்வை இன்னும் அப்படியே தான் இருக்கிறது என்பது அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் உறுதிப்படுத்துகிறது. தனது நண்பருடன் அல்லது காதலனுடன் தனிமையில் இருக்கும் இளம் பெண்களை, நடுத்தர வயது பெண்களை நோட்டமிட்டு அவர்களிடம் பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்தப்படுவது இந்தியாவின் பல மாநிலங்களிலும் நிகழ்வது போலவே தமிழ்நாட்டிலும் தொடர்கிறது. அது பல்கலைக்கழக வளாகத்தில் நடந்திருப்பது என்பது அங்குள்ள பாதுகாப்பு நிலமை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
அண்மைக்காலமாகவே தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பிற்போக்குத்தனமான கருத்துக்கள், அதற்கான நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற பொறுப்பில் ஆளுநர் இருப்பதால் மாநில அரசின் கல்வித் திட்டம் சார்ந்த எதையும் அங்கீகரிக்காமல் வேதாந்தம், சனாதனம், ரிஷிகள், முனிவர்கள் என்று பேசிக்கொண்டு, அதுதான் இந்தியா அல்ல… அதுதான் பாரதம், அதன் பெருமை என்று ஆளுநர் ஒவ்வொரு கருத்தரங்கிலும் முன்வைக்கின்ற கருத்துகள் இந்தியாவில் முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டை பின்னோக்கி தள்ளுகின்ற ஒரு முயற்சியாகும். இந்த சிந்தனைப் போக்கு தொடர்ந்தால் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கும். அத்துடன் தமிழ்நாட்டில் நூறாண்டு காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட பகுத்தறிவு போக்கு சிந்தனைகள் மழுங்கடிக்கப்படும். இதற்கு எதிரான ஒரு கருத்தியல் போரை நடத்த வேண்டிய கட்டாயம் தமிழ்நாட்டை ஆளும் திராவிட மாடல அரசுக்கு இருக்கிறது. அதைவிட முக்கியமாகவும் அவசரமாகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்பது அண்ணா பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் நுழையக்கூடியவர்கள் களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யார்? எந்த அடிப்படையில் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பனவற்றை முழுமையாக கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் பொள்ளாச்சியில் இளம்பெண்களுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் என்பது தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியா முழுவதுமே அதிர்ச்சி அடைய செய்தது. அது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டும் இன்று வரை முறையான தண்டனை, சட்டரீதியான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. ஐடி துறையில் பணியாற்றும் பெண்கள் இரவு நேர பணிக்கு செல்லும் பெண்கள், பூங்காக்கள், பொது இடங்களில் தனிமையில் இருக்கும் பெண்கள் இவர்கள் தொடர்ந்து இலக்காகி வருவது தமிழ்நாடு அரசின் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பலவீனமாகவும் அக்கறையற்றதாகவும் நீடிப்பதையே காட்டுகிறது.
ஆணவப் படுகொலைகள் உள்ளிட்ட பெண்களை உடைமையாக கருதி நடத்தப்படும் பயங்கரங்கள் நீடிக்கும் நிலையில் பல்கலைக்கழக வளாகமும் பாதுகாப்பு அற்றதாக இருக்கும் என்றால், இத்தனை ஆண்டு காலம் போராடி வாய்ப்புகளை உருவாக்கி பெண்களை படிக்க வைத்த மாநிலத்தில், அதற்கு நேர் எதிரான சிந்தனைகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.
டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரமும் அவருடைய மரணமும் அதன் பிறகான இந்தியா முழுவதுமான பெண்களின் பாதுகாப்பு குறித்த சட்டங்களும் இன்னும் முழுமை பெறவில்லை என்பதை தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வுகள் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. நிருபையா கொடூர மரணத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்காக நிறைவேற்றப்படுவதாக சொன்ன சட்டங்களை அன்றைய அரசே கடைபிடிக்கவில்லை. இன்றைய சூழலுக்கு ஏற்ப புதிய வலிமையான சட்டங்களை உருவாக்கி பெண்களை பாதுகாக்க வேண்டிய அவர்களின் சுதந்திரத்தை பேணி காக்க வேண்டிய கடமை ஆட்சி செய்பவர்களுக்கு இருக்கிறது.
மகளிர் நலன் கருதி பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் மாநிலத்தில் மாணவியின் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலை இனியும் தொடராதபடி செய்து, குற்றவாளி யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுத்து, தற்போது உள்ள சூழ்நிலையை மாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளே உரிய பலனைத் தரும்.
அருமையான ஆழமான கட்டுரை! மிகச் சிறப்பு!