வெங்கட்ராமன் அய்யர் மற்றும் புஸ்ஸி ஆனந்த் இருவரின் வருகைக்கு பின்னர்தான் தாய், தந்தையை விட்டுப் பிரிந்தார் விஜய் என்று சொல்கிறது பனையூர் வட்டாரம். அது மட்டுமல்லாமல் இவர்களின் வருகைக்கு பின்னர் விஜய் முழுவதுமாக மாறிப்போனார். நாளைய தீர்ப்பு படம் முதல் தன்னிடம் 27 வருடங்கள் மக்கள் தொடர்பாளராக இருந்த பி.டி.செல்வகுமாரையும் வெளியேற்றினார் விஜய். தன்னிடம் பல காலமாக இருந்த ஆர்.ரவிராஜா, ஏ.சி.ராஜா உள்ளிட்ட மன்றத்தினர் பலரையும் வரிசையாக வெளியேற்றினார் விஜய்.
’பழையன கழிதல் புதியன புகுதல்’ என்ற கணக்குப் போட்டு விஜய் இப்படிச்செய்தாலும் அனுபவசாலிகள்தான் கை கொடுப்பார்கள், அனுபவம் இல்லாதவர்கள் காலை வாரித்தான் விடுவார்கள் என்பதை தாமதமாக விஜய் புரிந்து கொண்டிருக்கிறார் என்கிறது பனையூர் வட்டாரம்.
விஜய்யின் மக்கள் மன்றத்தை கட்சியாக மாற்றிய எஸ்.ஏ.சந்திரசேகரை கண்டித்த விஜய், அவரையும் அவருடன் இருந்த பி.டி.செல்வகுமார் உள்ளிட்டோரையும் நீதிமன்றத்திற்கும் இழுத்தார். புஸ்ஸி ஆனந்த், வெங்கட்ராமன் அய்யர் சொல்லுக்கு கட்டுப்படுத்தான் பெற்ற தந்தையையே இந்த அளவிற்கு எதிர்த்தார் விஜய் என்று சொல்லும் பனையூர் வட்டாரம், அனுபவசாலிகளை எல்லாம், தன் வளர்ச்சியில் பாடுபட்டவர்களை எல்லாம் வெளியே தள்ளிவிட்டு வெங்கட்ராமன் அய்யர், புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் ஐ.ஆர்.எஸ்., ஜான் ஆரோக்கியசாமி, ஜெகதீஸ் போன்றோரை முழுவதுமாக நம்பியே விஜய் கட்சி தொடங்கினார் என்கிறது.
தவெக கட்சி அறிமுக கூட்டத்திற்கு அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் வந்திருந்தார். தவெக முதல் மாநில மாநாட்டிற்கு சந்திரசேகரும், ஷோபா சந்திரசேகரும் வந்திருந்தனர். விஜய்யின் அழைப்பின் பேரில் இவர்கள் வரவில்லை. பெற்றோரையே ஒதுக்கி வைத்திருக்கும் விஜய், மக்களிடம் எப்படி விசுவாசமாக இருப்பார் என்ற சலசலப்புகள் எழுந்ததால், அந்த சலசலப்புகளை சரி செய்யவே, தன் மகன் அழைக்காவிட்டாலும் கூட, மகனுக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களாகவே வந்து மாநாட்டின் முன் வரிசையில் அமர்ந்து கொண்டார்கள் என்கிறது பனையூர் வட்டாரம்.
புஸ்ஸி ஆனந்தின் தொடர் உளறல் பேச்சுக்கள் எல்லாமே தவெகவுக்கு எதிராகவே அமைகிறது. முதல்வர் நாற்காலியை பிடிக்கும் கனவில் விஜய் இருந்து வரும்போது, 2% வாக்குகள் கூட தவெக வாங்காது என்று உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார் தவெகவுக்கு அரசியல் ஆலோசகராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமி. ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக ஆடியோ வெளியானதில் இருந்து விஜய்யின் பெற்றோர் கடும் வேதனையில் உள்ளனர்.
தங்களை தள்ளி வைத்தாலும் பரவாயில்லை. மகன் நன்றாக இருந்தால் போதும் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் இப்போது தன் மகனுக்கும் கட்சிக்கும் ஆபத்து என்று வந்ததும் துடித்துப் போயிருக்கிறார்களாம்.
பரபரப்பாக விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டு நடந்து முடிந்தது. ஆனால் அதற்கடுத்ததாக கட்சியில் எந்த பரபரப்பும் இல்லை. பெயரளவில் ஒரு செயற்குழு கூட்டம் நடந்ததே தவிர சொல்லும்படியாக கட்சி நிகழ்ச்சிகள் எதுவும் அதன் பின்னர் நடைபெறவில்லை. தன் வளர்ச்சியில் பெரும் பங்கெடுத்தவர் என்றும் கூட நினைத்துப் பார்க்காமல் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவஞ்சலி கூட செலுத்த போகவில்லை விஜய். பனையூரில் இருந்தபடியே அறிக்கைகள் விட்டுக்கொண்டு வொர்க் பிரம் ஹோம் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் விஜய் என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கட்சிக்குள் ஜான் ஆரோக்கிய சாமி, புஸ்ஸி ஆனந்த் ஒரு கோஷ்டியாகவும், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் இன்னொரு கோஷ்டியாகவும் செயல்படுவதாகவும் சொல்லும் பனையூர் வட்டாரம், இந்த கோஷ்டி மோதலில் வெளியிலிருந்து யாரும் தவெகவில் இணைவதை புஸ்ஸி ஆனந்த் விரும்பவில்லை, கட்சித்தலைவரை மற்றவர்கள் சந்திப்பதற்கும் விடுவதில்லை, எந்த முடிவையும் விஜய் சுயமாக எடுக்கவிடாமல் செய்கிறார்கள். இது தவெகவின் ஆலோசகர்களாக இணையும் முடிவில் இருந்த மூத்த அரசியல்வாதிகள், கட்சியின் நிர்வாகிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மாவட்ட, மாநில நிர்வாகிகள் நியமனத்தில் புஸ்ஸி ஆனந்துக்கு கள நிலவரம் தெரியவில்லை, இஷ்டத்துக்கு முடிவெடுக்கிறார் என்கிற விமர்சனமும் முணுமுணுப்பும் கட்சிக்குள் இருந்த நிலையில் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமியே புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக திரும்பியதாக ஒரு ஆடியோ வெளியானது கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனை விமர்சனங்களுக்கு பிறகும் கூட விஜய் தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. இதற்கெல்லாம் காரணம் நல்ல சகவாசம் இல்லை எனச் சொல்லும் பனையூர் வட்டாரம், இதற்கு மேலும், அதாவது கட்சியின் தலைமை ஆலோசகரே கட்சி தேறாது. 2% வாக்குகள் கூட வாங்காது என்று பேசுகிறார் என்றால் அவர் இந்த மன நிலையில் எப்படி கட்சியை முன்னுக்கு கொண்டு செல்வார்? இப்படி ஒரு எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு கட்சிக்கு எப்படி நல்ல வழி சொல்லுவார்? என்று கொதித்தெழுந்துள்ளனர் விஜய்யின் பெற்றோர்.
இதற்கு மேலும் பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றுதான் சந்திரசேகரே விஜய்யை தொடர்புகொண்டு ஆவேசமாக சத்தம் போட்டிருக்கிறார் என்கிறது.
தொடங்கிய வேகத்திலேயே கட்சி மூடுவிழா காணும் நிலை இருப்பதால், ஒதுங்கி இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யை தொடர்புகொண்டு, ”நான் ஏற்கனவே எச்சரித்தேன். நீ கேட்கவில்லை. நீ என்னை ஒதுக்கினாய், இப்பொழுது நான் சொன்னது எல்லாம் உண்மையாகி வருகிறது. நீ நியமித்த ஆளே உண்மையை போட்டு உடைத்துவிட்டார். ரசிகர்மன்ற பொதுச் செயலாளரை எங்கே நிறுத்த வேண்டுமோ அங்கேயே நிறுத்தணும், குடும்பம் என்பது வேறு கட்சி அரசியல் என்பது வேறு. இதை புரிந்துகொண்டு இப்போதாவது நீ உரிய முடிவு எடுக்காவிட்டால் கட்சி அதள பாதாளத்துக்கு போய்விடும். இப்படியே போனால் கட்சி உருப்படாது” என அவர் எச்சரித்ததாக சொல்கிறது பனையூர் வட்டாரம்.
போனில் எச்சரித்ததோடு நின்றுவிடாமல், விரைவில் சந்திரசேகரும், ஷோபா சந்திரசேகரும் விஜய்யை சந்திக்க உள்ளதாகவும் அதன் பின்னர், இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட சந்திரசேகர் பழைய மாதிரி களத்தில் இறங்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறது பனையூர் வட்டாரம்.