துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முழுமையாக ஆளுநர்களுக்குரியதாகவும், கல்வித்துறை சார்ந்தவர்களை மட்டுமின்றி தொழிலதிபர்கள் உள்ளிட்ட வல்லுநர்களையும் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கலா என்றும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைகயை ஏற்றுக்கொள்ளாத பல்கலைக்கழகங்களில் பெறப்படுகிற பட்டங்களுக்கு அங்கீகாரமில்லை என்றும் யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளில் திருத்தம் செய்யும் வரைவு மசோதாவை மத்திய அரசு தன்னிச்சையாக முன்னெடுத்திருப்பது மாநில உரிமைகள் மீதான மற்றொரு கொடுந்தாக்குதலாக அமைந்துள்ளது.
இந்தியாவில் கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. எமர்ஜென்சி எனப்படும் நெருக்கடி நிலைக் காலத்தில் அது பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. ஒரு துறையை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றாலே அதன் பெரும்பகுதி அதிகாரம் மத்திய அரசின் கைகளுக்கு சென்றுவிடும்.
நேரடியாக மத்திய அரசின் பட்டியலில் இருப்பதும், பொதுப்பட்டியலில் இருப்பதும் ஏறத்தாழ ஒன்றுதான். எனினும், இந்தியாவில் கல்வி முறை என்பது மத்திய அரசின் பாட்டத்திட்டத்தின்கீழ் மட்டும் இருப்பதில்லை. அந்தந்த மாநிலங்களுக்கேற்ற கல்வி முறை இருக்கிறது. அதில் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சிறப்பாக உள்ளன. மத்திய அரசில் முன்பிருந்த ஆட்சியாளர்கள் அவ்வப்போது, மாநில கல்வி முறையை அவ்வப்போது சீண்டியிருந்தாலும், மாநிலக் கல்வி மீது தனிப்பட்ட தாக்குதலை நடத்தவில்லை.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் மாநிலத்தின் கல்வி உரிமைகள் முற்றிலும் பறிக்கப்படும் வகையில், புதிய கல்விக் கொள்கை எனப்படும் தேசியக் கல்விக் கொள்கை முன்னெடுக்கப்பட்டு, இதனை அனைத்து மாநிலங்களும் ஏற்றாக வேண்டும் என்ற நெருக்கடி தரப்பட்டது. குலக்கல்வி முறைக்கு ஆதரவான நடைமுறைகள் கொண்ட புதிய கல்விக்கொள்கை, விஸ்வகர்மா திட்டம் போன்றவற்றை கல்வியில் முன்னேறிய மாநிலமான தமிழ்நாடு ஏற்காத நிலையில், மேலும் சில மாநிலங்களும் இந்தப் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தான பகுதிகளை எடுத்துரைத்தன. அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி, வன்மத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது மோடி அரசு.
தேசிய அளவில் வெளியிடப்பட்ட உயர்கல்வி நிலையங்கள் குறித்த தரப்பட்டியலில் முதல் 100 கல்வி நிறுவனங்களில் 30க்கும் மேற்பட்டவை தமிழ்நாட்டில் உள்ளன. இது மத்திய அரசின் புள்ளிவிவரம்தான். உயர்கல்வியில் சேர்கிற மாணவ-மாணவியரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் சராசரி விகிதத்தைவிட, தமிழ்நாட்டில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இதுவும் மத்திய அரசு சார்ந்த புள்ளிவிவரம்தான்.
எனினும், பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற பொறுப்பில் உள்ள ஆளுநர் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களிலும், ஆளுநர் மாளிகையிலும் பிற இடங்களிலும் நடைபெறும் நிகழ்வுகளிலும் தமிழ்நாட்டின் கல்வித்தரம் குறித்து மோசமாக விமர்சிப்பதும், முனைவர் பட்ட ஆய்வுகள், முதுநிலைப் பட்டங்கள் குறித்து குறைத்து எடைபோடுவதும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்தான், இந்தியா முழுவதும் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அந்தந்த மாநில ஆளுநர்களுக்கே முழுமையாகக் கிடைப்பது போன்ற வரைவறிக்கையை யு.ஜி.சி. மூலமாக மேற்கொண்டுள்ளது மத்திய அரசு.
கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் தங்கள் சொந்த செலவில் அமைப்பவை மாநில அரசுகள்தான். மத்திய அரசின் நிதியில் அமைக்கப்படுபவை மத்திய பல்கலைக்கழகங்கள் எனத் தனியாக அடையாளப்படுத்தப்படுகின்றன. அவற்றின் எண்ணிக்கை குறைவுதான். மாநில அரசால் உருவாக்கப்படும் பல்கலைக்கழகங்களுக்கு நிதி மானிய உதவிகள் குறித்து பரிந்துரை செய்யும் அதிகாரம்தான் யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவுக்குரியது. அதற்கு மாறாக, துணைவேந்தர்களை நியமிப்பதற்கான முழு அதிகாரத்தையும் அதனிடம் அளித்து, அதைத் தூக்கி ஆளுநர்கள் கையில் ஒப்படைப்பது என்பது மோடி அரசின் உள்நோக்கத்தையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
கல்வித்துறை சார்ந்த வல்லுநர்கள் மட்டுமின்றி வேறு எவரையும்கூட துணைவேந்தராக நியமிக்கலாம் என்கிற வரைவு என்பது கல்வியை காவிமயமாக்கும் முயற்சிக்கான அகன்ற வாசலாகும். அதற்கேற்ப, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காத பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டங்கள் அங்கீகரமற்றவை என்ற திருத்தமும் முன்வைக்கப்படுகிறது.
இந்தியாவில் வேறெந்த மாநிலத்தையும்விட நூறாண்டு காலமாக கல்வி உரிமைக்கானத் தொடர் செயல்பாடுகளாலும், சமூக நீதிக் கொள்கைகளாலும் அனைத்து சமுதாயத்தினருக்குமான உயர்கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. அதனைப் பறிக்க நினைக்கிறது மத்திய அரசு.
மாநில உரிமைக்கு எதிரான யு.ஜி.சி. திருத்தத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டிலிருந்து ஒலிக்கின்ற குரல்கள், இந்திய அளவில் வலிமைப்பட வேண்டிய அவசர அவசியத் தேவை உருவாகியுள்ளது.