முதல் மாநாட்டில் திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய், அதிமுகவை விமர்சிக்காமல் போனதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டன.
2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து துணை முதல்வர் ஆகிவிடும் கனவில் இருக்கிறார் விஜய். அதனால்தான் அவர் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்ற பேச்சு எழுந்தது.
எடப்பாடி பழனிசாமியின் மகன் விஜய்யிடம் நேரிடையாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவ்வப்போது தகவல்கள் பரவுகின்றன.
அதற்கேற்றார் போல் நிர்வாகிகள் கூட்டத்திலும், விஜய்யை விமர்சிக்க கூடாதுஎன்று பழனிசாமி உத்தரவிட்டதாகவும் தகவல் வெளிவந்தது.
இது ஒருபுறமிருக்க, துணை முதல்வர் கனவில் விஜய் இல்லை. அவர் முதல்வர் நாற்காலியைத்தான் குறி வைத்திருக்கிறார் என்றும், அதிமுகவின் வாக்குகளை தன் வசப்படுத்தும் நோக்கில்தான் அவர் அதிமுகவை பற்றி விமர்சிக்கவில்லை. அதே நேரம் மாநாட்டில் எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசினார் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் அவருக்கு விஜய் அஞ்சலி செலுத்தாமல் போனது, இன்னொரு கட்சி நிறுவன தலைவர் அவர். அதனால் அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்று பலரும் சொல்லி வந்த நிலையில், எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில், வணக்கம் செலுத்தி இருக்கிறார் விஜய்.
‘’அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின்
அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்.’’ என்று தெரிவித்து, இன்னொரு கட்சி தலைவர் என்ற பாகுபாட்டை உடைத்தார் விஜய்.
அதிமுகவுடன் கூட்டணி கணக்குதான் விஜய்யின் இந்த நிலைப்பாடு என்று இப்போதும் ஒரு விமர்சனம் இருக்கையில், ‘’விஜய்யுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று பழனிசாமி கணக்கு போடுகிறார். ஆனால், அவரின் ஓட்டை படகில் விஜய் ஏறமாட்டார். அதிமுக வாக்குகளை தன் வசப்படுத்த தனித்துப் போட்டியிடத்தான் விஜய் விரும்புவார்’’ என்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.
விஜய் எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதெல்லாம் அதிமுகவின் வாக்குகளை தன் வசப்படுத்தும் நோக்கிலா? என்பது போகப்போகத் தெரியவரும்.