பிரபாகரனுடன் சீமான் எடுத்துக்கொண்ட படம் என்று நான்கு படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. ’’இந்த படம் உண்மையில்லை. பிரபாகரன் தனது இயக்க உடையில் யாருடனும் அவ்வளவு எளிதில் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாட்டார். சீமானுடன் அவர் போட்டோவே எடுத்துக்கொள்ளவில்லை’’ என்று சொல்லி இருந்தார் வைகோ.
பலரும் இதையே சொல்லி வந்த நிலையில், தற்போது இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், 2007ஆம் ஆண்டில் மக்கள் தொலைக்காட்சியில் தான் வேலை செய்துகொண்டிருந்த சமயத்தில் சீமானின் ஆதரவாளர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனித்தனியாக இருந்த பிரபாகரன் – சீமான் படத்தை இணைத்து எடிட் செய்துகொடுத்தேன். அந்த படத்தில் சீமானுக்கு பின்னால் மட்டும் நிழல் விழுந்திருக்கும். ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட படத்தில் ஒருவரின் பின்னால் மட்டும் எப்படி நிழல் விழும்? இதுவே எடிட் வேலை என்பதற்கு சாட்சி என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதை நாம் தமிழர் கட்சியினர் மறுத்தனர். 2008இல்தான் சீமான் பிரபாகரனை சந்தித்தார். அப்படி இருக்கும்போது 2007ம் ஆண்டில் படத்தை எடிட் செய்து கொடுத்ததாக ராஜ்குமார் சொல்லுவது அபத்தம் என்கிறார்கள். ஒரு படத்தைதான் எடிட் செய்து கொடுத்ததாக சொல்கிறார் ராஜ்குமார். ஆனால் இதுவரையிலும் நான்கு படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. தவிர, இன்னும் 3 படங்கள் சீமான் வசம் உள்ளன. அந்தப்படங்களை அவர் பகிராமலே உள்ளார் என்கிறார்கள்.
மேலும், சீமான் நிழல் மட்டும் விழவில்லை. பிரபாகரனின் நிழலும் விழுகிறது. அவரின் தொப்பி, துப்பாக்கியின் நிழலும் விழுகிறது. இதிலிருந்தே தெரிகிறது. இந்த போட்டோ ஒட்டுவேலை என்று சொல்லுவது எல்லாம் ஏமாற்று வேலை என்கிறார்கள் நாம் தமிழர்.
வைகோ, ராஜ்குமார் உள்ளிட்டோர் சொல்லுவது பொய் என்றால், நாம் தமிழர் சொல்லுவதுதான் உண்மையா? இதற்கு சீமான் தான் விளக்கம் தர வேண்டும். ஆனால், சீமான் இந்த விவகாரத்தில் விளக்கம் தராமல் நழுவியேச் செல்கிறார். எந்த ஒன்றுக்கும் மணிக்கணக்கில் விளக்கம் சொல்லும் சீமான் இதற்கு மட்டும் விளக்கம் சொல்லாமல் நழுவும் மர்மம் என்ன? என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
விழுப்புரத்தில் நடந்த கள் விடுதலை மாநாட்டில் பங்கேற்ற சீமானிடம் இது குறித்து எழுப்பட்ட கேள்விக்கு, ‘’அதை விடுங்க’’ என்று சொல்லி நழுவியது ஏன் என்று தெரியவில்லை.