பசுவின் சிறுநீரைக் கோமியம் என்பது சனாதன மரபு. அது சர்வநோய்க்குமான நிவாரணி என்பதை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பிரமுகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பா.ஜ.க.வின் முதலமைச்சர்களே பசுமாட்டின் பின்புறம் நின்று, குழாயில் தண்ணீர் குடிப்பதுபோல கோமியத்தைக் குடிக்கும் காட்சிகள் இணையத்தில் கிடைக்கின்றன. தற்போது சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி, சிறுநீர் நல்ல மருந்து என்றும், தங்கள் பண்டிகைகளில் கோமியம் உள்ளிட்ட பஞ்ச கவ்யத்தை சாப்பிடுகிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே ஐ.ஐ.டி. கரக்பூர் இயக்குநரும் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
ஐ.ஐ.டி. என்பது அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நிறுவனமாகும். இந்தியாவில் அறிவியல் ஆய்வுகளை மேம்படுத்தும் இளைய தலைமுறை உருவாக வேண்டும் என முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு சென்னை உள்ளிட்ட இடங்களில் ஐ.ஐ.டி. நிறுவனங்களைத் தொடங்கினார். அத்தகைய அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குநர்களே கோமியத்தின் மகாமித்யம் குறித்து தெரிவிக்கும்போது, மக்களிடம் அது குறித்த ஆர்வம் ஏற்படும். இதுதான் மூன்று முறை ஆட்சி செய்யும் பா.ஜ.க.வின் அரசியல் தந்திரம். இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கியதன் விளைவாகத்தான் காமகோடி போன்றவர்கள் உயர்பொறுப்புகளில் இருந்தபடி கோமியம் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார்கள்.
பசுவின் பால், தயிர், நெய், சாணம், சிறுநீர் ஆகிய ஐந்தும் சேர்ந்த கலவைக்கு பஞ்சகவ்யம் என்று பெயர். இது புனிதமானதாகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும் தொடர்ந்து வலியுறுத்தப்படுவதுடன் சில பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
நவீன அறிவியல் சார்ந்த மருத்துவம் பஞ்ச கவ்யம் மற்றும் கோமியத்தின் மருத்துவ பலன்கள் குறித்து சந்தேகக் கேள்விகளை எழுப்புகிறது. இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் போன்றவை கோமியத்தை சர்வநோய்க்கான நிவாரணமாகக் கருத முடியாது என்கிறது.
பஞ்சகவ்யம்-கோமியம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் வடஇந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் வேறுபாடு உண்டு. வடஇந்தியாவில் பலர் கோமியத்தைக் குடித்து, சாணத்தை உடம்பில் பூசிக்கொள்வார்கள். தமிழ்நாட்டில் கோமியம் குடிக்கின்ற பழக்கம் கிடையாது. பசுவின் பாலைத்தான் குடிப்பார்கள். கேரளாவில் அதிகளவில் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள்.
பசுமாட்டின் சாணத்தை உடலில் பூசிக்கொள்பவர்களும் கிடையாது. வீட்டின் மண் தரையை மெழுகுவதற்கு தமிழ்நாட்டுப் பெண்கள் பசுமாட்டின் சாணத்தைப் பயன்படுத்துவார்கள். இயற்கையையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து தேவைக்கேற்ப பயன்படுத்துகிறது தமிழ்நாடு.
மண்தரை வீடுகள் அதிகம் இருந்த காலத்தில், அதில் பூச்சிகள் வராமல் இருப்பதற்கு கிருமிநாசினியாகப் பயன்படுத்தினார்கள் தமிழ்நாட்டு. கால மாற்றத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தில் வீடு கட்டும் முறைகள் மாறியதாலும், புதிய கிருமிநாசினிகள் கண்டுபிடிக்கப்பட்டதாலும், தரையை பசுமாட்டின் சாணத்தைக் கொண்டு மெழுகும் பழக்கமும் குறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக அதே நிறத்தில் ஒரு பெயிண்ட்டை சிமெண்ட் தரை போடப்பட்ட வீட்டு வாசலில் பூசுவதை மேற்கு மாவட்டங்களில் காணலாம். கிரானைட் தரைகளில் அதுவும் கிடையாது. இதுதான் தமிழ்நாடு.
யாகங்கள், பூசைகள் செய்யும்போது மந்திரம் சொல்கிறவர் மா இலையில் கோமியத்தைத் தெளிப்பது வழக்கமாக உள்ளது. மா இலை ஆக்சிஜனை அதிகளவில் வெளியிடும் என்றும், கோமியம் கிருமி நாசினியாகவும் சர்வ நோய் நிவாரணியாகவும் இருக்கிறது என்றும் யாகத்தை நடத்துபவர்களும் அதன் மீது நம்பிக்கைக் கொண்டவர்களும் தெரிவிக்கிறார்கள்.
வீட்டைச் சுற்றி மரங்களுடன் வாழ்ந்த காலத்தில் மாமரத்தின் ஆக்சிஜன், யாகம் போன்ற புகைமூட்ட நேரத்தில் தேவையானதாக இருந்திருக்கும். இன்றைய நகரமய வாழ்க்கை, அபார்ட்மெண்ட் வாழ்க்கை ஆகியவற்றில் காற்றோட்டத்திற்கான வசதிகள் வேறுவிதமாகிவிட்டன. பெயருக்கு நான்கு மா இலைகளில் தோரணம் கட்டுவது ஆக்சிஜனைத் தரும் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.
ஒவ்வொரு காலத்திலும் மனித சமுதாயத்தின் நடைமுறைகள் மாறுகின்றன. தேவைக்கேற்ற கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. அத்தகையக் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த வேண்டிய கல்வியை வழங்க வேண்டிய ஐ.ஐ.டி. நிறுவனத்தின் இயக்குநர் கோமியத்தின் பெருமை பேசுவதும், அதைத் தங்கள் வீட்டுப் பண்டிகைகளின் சிறப்பாகக் குறிப்பிடுவதும், அதற்கு மருத்துவம் படித்த டாக்டர் தமிழிசை போன்ற தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர்கள் வக்காலத்து வாங்குவதும், இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்துகின்ற அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானதாகும்.
மெத்த அறிவு படைத்தவர் போல நினைத்துக்கொண்டு தமிழிசை, “தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள்.கோமியம் குடிக்க மாட்டார்கள்” என்று சொல்லியிருக்கிறார். இதுபோல கோமியத்தை புனிதமாகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும் கருதுபவர்கள் ஏன் மாட்டுக்கறியைத் தவிர்ப்பதுடன், அதை சாப்பிடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்” என்றும் பதில் கேள்வி கேட்க முடியும்.
அறிவியல் மனப்பான்மையுடன் சிந்திக்கும் எவரும், கோமியம் எந்தவகையில் நல்லது, என்னென்ன மருத்துவ குணம் கொண்டது, எல்லா பசுமாடுகளின் சிறுநீரும் சர்வநோய்க்கான நிவாரணமா என்பதை ஆராய்வதே சரியாக இருக்க முடியும். சமூக மருத்துவ டாக்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோமியம் குறித்த ஐ.ஐ.டீ. இயக்குநர் காமகோடியின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது. பல மோசமாக விளைவுகளை உருவாக்கக்கூடியது. பஞ்சகவ்யம்-கோமியம் மூலம் பல்வேறு நுண்ணுயிரித் தொற்றுகள் ஏற்படலாம். எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படலாம்” என்று எச்சரித்திருப்பது கவனத்திற்குரியது.
தமிழ்நாட்டு மக்களின் மனநிலைக்கும் நடைமுறைக்கும் எதிராகவே செயல்படும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் கருத்துகள் ஊடகங்கள் வாயிலாக அதிகளவில் முன்னிலைப்படுத்தப்படும் நிலையில், தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை இந்தக் கோமியம் விவகாரம் குறித்து, மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியக் கடமையாகும்.