வேலை விசாக்களில் அமெரிக்காவில் வேலை பார்க்கும் லட்சோப லட்சம் இந்தியர்களின் தலையில் பேரிடியை இறக்கி இருக்கிறார் டிரம்ப். இதனால் இந்தியாவிற்கும் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
அமெரிக்க நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றிருக்கின்ற டிரம்ப், தடாலடியான பல அறிவுப்புகளை வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார். அதில் முக்கியமான ஒன்றுதான், பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக குடியுரிமை பெறும் நடைமுறையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதாகும். அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் லட்சக்கணக்காக இந்தியர்களை அதிரவைத்துள்ளது இந்த அறிவிப்பு.
இதுவரையிலும், அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் இந்தியர்கள் அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையில், பெற்றோரின் குடியுரிமையை குடியேற்ற நிலையினை கருத்தில் கொள்ளாம்ல அந்த குழந்தைகளுக்கு தானாக குடியுரிமை வழங்கும் சட்டம் அமெரிக்காவில் கடைபிடிக்கப்பட்டு வந்தது.
இந்த கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக, இனிமேல் அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் யாரும் அமெரிக்க குடியுரிமை கோர முடியாது என்று திட்டவட்டமாக டிரம்ப் அறிவிள்ளதோடு, இந்த புதிய உத்தரவு இன்னும் 30 நாட்களில் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
டிரம்பின் இந்த முடிவுக்கு எதிராக சட்டப்போராடம் தொடங்கி இருக்கிறது.
டிரம்பின் இந்த அறிவிப்பும் குறித்தும், இதனால் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்தும் கனடா வாழ் தமிழர் ’ரசனை ஸ்ரீராம்’ தெரிவித்துள்ள கருத்து இது:
’’இமிக்ரேஷன் துறையை சார்ந்தவன் என்பதால், டிரம்ப்பின் முதல்நாள் அரசாணைகளில் இது என் கவனத்தை மிகவும் ஈர்த்தது. அதாவது பெற்றோர்கள் கீழ்க்கண்ட வகைமையில் வந்தால், இனி அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பிலேயே அமெரிக்க குடியுரிமை கிடையாது.
பெற்றோர் ஒருவராவது அமெரிக்க பிரஜை அல்லது Green card holder ஆக இல்லாவிட்டால் ஏனைய H1,L1 வேலை விசாக்கள், F1 ஸ்டூடண்ட் விசா போன்ற விசாக்களில் legally இருந்தாலும், அல்லது undocumented-ஆக இருந்தாலும்.
இதில் undocumented ஆசாமிகளை விட்டுவிடுவோம். அது புரிந்துகொள்ளக்கூடியது. Documented-ஆக, குறிப்பாக ஐடி போன்ற துறைகளில் வேலை விசாக்களில் வேலை பார்க்கும் லட்சோப லட்சம் இந்தியர்களுக்கு பெரிய அடி இது.
ஏற்கனவே இந்தியர்களுக்கான Priority date ஒவ்வொரு க்ரீன்கார்ட் கேட்டகரியிலும் பத்திருபது வருடங்கள் என தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. க்ரீன்கார்டுக்காக காத்திருக்கும் மக்கள், பல்லை கடித்துக்கொண்டு இருப்பது தம் குழந்தைகளுக்காவது அமெரிக்க குடியுரிமையும், வாழ்வும் அமையட்டும் என்று தான்.
இது ஒரு Constitutional issue, அமெரிக்காவின் 14வது அமெண்ட்மெண்ட் படி அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைவருக்கும் அரசியலமைப்பு சட்டம் குடியுரிமையை உறுதி செய்கிறது என்கிறார்கள் பல சட்ட வல்லுனர்கள். ஏற்கனவே ACLU (American Civil Liberties Union) போன்ற அமைப்புகள் உடனே வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். இந்த சட்டசிக்கலுக்கு ஒரு முடிவு வர 14 மாதங்களாவது ஆகும் என்கின்றனர்.
இதற்கு இறுதி தீர்ப்பு வரும் அடுத்த ஒரு வருடம் வரை இது நடைமுறையில் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
முதலில் தீர்ப்பு வரும் வரை, இந்த Executive order (அதாவது பிறப்புரிமை கிடையாது) என்பது தான் நடைமுறையில் இருக்குமா? அப்படியெனில் ஃபெப்ரவரி 19 முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் Birth certificate தரமாட்டார்களா? (பொதுவாய் இங்கு மருத்துவமனையிலேயே பிறப்பு சான்றிதழ், அல்லது குழந்தை பிறந்த அத்தாட்சியை தந்துவிடுவார்கள். அதைக்கொண்டு, அமெரிக்க பாஸ்ப்போர்ட்டை சில வாரங்களில் குழந்தைக்கு வாங்கிவிடலாம்)
அப்படி Birth certificate தராவிடில், தங்கள் நாட்டு (home country) எம்பசியோடு பாஸ்போர்ட்டுக்காக ரெஜிஸ்டர் செய்யவேண்டுமா? அப்படி home country பாஸ்போர்ட் தரும்வரை, குழந்தைக்கான இன்ஷ்யூரன்ஸ், ஹெல்த் கவரேஜ் யார் தருவார்கள்? குழந்தைப்பிறப்பு, பிறகு Pediatrician போன்றவை இன்ஷ்யூரன்ஸ் இல்லாவிடில் அமெரிக்காவில் கிழிந்துவிடும்.
Home country பாஸ்போர்ட் வரும்வரை, அக்குழந்தைகளின் லீகல் ஸ்டேட்டஸ் என்ன? இது தாண்டி முன்னர் அமெரிக்காவில் precedence இல்லாத ஏகப்பட்ட லாஜிஸ்டிக்ஸ் சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.
இந்த சட்டச்சிக்கலுக்கு முடிவு தெரியும் வரை பிறக்கப்போகும் குழந்தை அமெரிக்கன் இல்லை என்றால், தற்போது டெலிவரிக்கு காத்திருக்கும் பல இந்தியர்கள் பொட்டியை கட்டிவிடுவார்கள். ‘போங்கடா, உங்களோட மாரடிக்கறதுக்கு இந்தியாலேயே நல்ல உதவியோட பெத்துக்கறோம்’ என கிளம்ப வாய்ப்புண்டு.
இறுதித்தீர்ப்பும் வெளிநாட்டினர், இந்தியர்களுக்கு சாதகமாய் வராவிட்டால், ’என் பசங்களும் குடியுரிமைக்கு கஷ்டப்படனும்ன்னா, அப்படி ஒண்ணும் தேவையில்ல’ என இந்தியர்களின் அமெரிக்கன் கனவு மெல்ல கரையவே செய்யும். இந்தியாவுக்கு திரும்புவர்கள் எண்ணிக்கை குறுகிய காலத்தில் அதிகரிக்கவே செய்யும்’’.