தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது. தவெகவில் என்ன நடக்கிறது என்பது பற்றியே எதுவும் தெரியாதவராக உள்ளார் விஜய். ஆனால் இவர், மக்களை காக்க வந்தது மாதிரி அவ்வப்போது மைக் பிடித்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று புலம்புகிறார் ஒரு பெண் பிரமுகர்.
கட்சியில் எல்லா முடிவுகளையும் எடுக்கும் பொறுப்பினை புஸ்ஸி ஆனந்திடமே ஒப்படைத்துவிட்டதால், அவர் சொல்லுவதைத்தான் வேத வாக்காக கேட்கிறார் விஜய். இதனால் கட்சியில் நடக்கும் நல்லது கெட்டது எதுவும் விஜய்க்கு தெரியவே இல்லை. இது எதில் போய் முடியுமோ? என்கிற ரீதியில் புலம்பியிருந்த தவெக அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் ஆடியோ அண்மையில் லீக் ஆகி தவெகவில் சலசலைப்பை ஏற்படுத்தி இருந்தது.
மாவட்ட செயலாளர், நகர செயலாளர் பதவிகளுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் வரை பேரம் பேசுகிறார்கள் என்று ஈசிஆர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகளின் மீது குற்றச்சாட்டும் அண்மையில் எழுந்தது. இதையடுத்து புஸ்ஸி ஆனந்தே நேரடியாக பண வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார் என்ற பரபரப்பும் எழுந்தது.
விஜய் மக்களை சந்திக்க ஏன் மறுக்கிறார்? பத்திரிகையாளர்களை ஏன் சந்திக்க மறுக்கிறார்? வீட்டிற்குள்ளேயே ஏன் முடங்கி கிடக்கிறார்? என்று வெளியே இருந்து பல கேள்விகள் எழும் நிலையில், தங்களையே தலைவர் விஜய் சந்திப்பது இல்லை என்று புலம்புகின்றனர் தவெக நிர்வாகிகள்.
உச்ச நடிகரின் கட்சி என்பதால் இப்போது ஒரு வரவேற்பு இருக்கிறது தவெகவுக்கு. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தவெகவில் இணைந்து காரியம் சாதித்துக்கொள்ள நினைக்கின்றனர் மாற்றுக்கட்சியினர் பலரும். இதற்காக விஜய்யை சந்தித்து தவெகவில் இணைய பலரும் முயன்று வருகின்றனர். இதற்காக விஜய்யிடம் அனுமதி கேட்டு மாதக்கணக்கில் அவர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், இது பற்றிய விபரம் எதையுமே விஜய்யிடம் தெரிவிக்காமல் உள்ளாராம் புஸ்ஸி ஆனந்த்.
மாற்றுக்கட்சியில் இருந்த வருவோரை சேர்த்துக் கொண்டால் அவர்களுக்கு பொறுப்புகள் வழங்க வேண்டியது வரும். விஜய் மன்றத்தில் இருப்பவர்களுக்கே பொறுப்புகள் வழங்க முடியாத சூழல் இருக்கிறது. இதனால் மாற்றுக்கட்சியில் இருந்து எவ்வளவு பெரிய ஆளுமை மிக்கவர்கள் வந்தாலும் அவர்கள் குறித்த விபரத்தை விஜய்யிடம் தெரிவிக்காமல் இருக்கிறாராம் புஸ்ஸி ஆனந்த்.
விஜய் மன்றத்தில் இருந்தவர்கள் அனைவருமே அரசியல் அனுபவம் இல்லாதவர்கள். மூத்த அரசியல்வாதிகளை கட்சியில் இணைத்துக்கொண்டால் அது கட்சிக்கு பலத்தைக் கொடுக்கும் என்று ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட பலர் நினைத்தாலும் அது நடக்க விடாமல் செய்கிறாராம் புஸ்ஸி.
புஸ்ஸி ஆனந்த் மூலமாக விஜய்யை சந்திக்க முடியாததால் பெண் பிரமுகர் ஒருவர் அதிரடி முடிவு எடுத்து தானாகவே நேரடியாக சென்று விஜய்யை சந்தித்து பேசிவிட்டாராம். தன்னை மீறி தலைவரை சந்தித்து விட்டார் என்பதற்காக ஆத்திரப்பட்டு அந்த பெண் பிரமுகர் தலைவரை சந்தித்து சென்ற விபரத்தை அந்த பெண் பிரமுகரின் கட்சி தலைவருக்கு தெரியும்படி தகவலை கசியவிட்டாராம் புஸ்ஸி.
தகவல் அறிந்த அந்த கட்சி தலைவர் பெண் பிரமுகரை அழைத்து கண்டித்திருக்கிறார். இதற்கு மேலும் இருந்தால் கட்சியில் மரியாதை கிடைக்காது என்று நினைத்த அந்த பெண் பிரமுகர், அதிமுகவில் சேர முயற்சிகள் எடுத்து வருகிறாராம்.
அந்த பெண் பிரமுகர் மாதிரி வேறு சிலரும் சிக்கலில் சிக்கி நட்டாற்றில் தவித்துக் கொண்டிருக்கிறார்களாம். அதில் ஒருவர் விபரமாக விஜய்க்கு கடிதம் எழுத, அந்த கடிதம் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கையில் சிக்காமல் விஜய்யிடமே கிடைக்க, விபரம் அறிந்த விஜய் பதறிப்போய், ‘’பொறுமையாக இருங்க. நல்ல முடிவைச் சொல்கிறேன்’’ என்று சொல்லி இருக்கிறாராம்.
அதிமுகவுக்கு போகும் முடிவை மாற்றிக்கொள்ளச் சொல்லுங்க. எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அந்த பெண் பிரமுகருக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறாராம் விஜய்.
p3xdpi