
இப்படி ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த கேள்வி தேவையானதுமல்ல, பொருத்தமானதுமல்ல. சமகாலத்தில் ஒரே நிலத்தில் வாழ்ந்த இரு ஆளுமைகளின் செயல்பாடுகளை அரசியல் கண்ணோட்டத்திலோ, தனிப்பட்ட பார்வையிலோ ஒப்பிடலாம். ஒருவரின் காலம் முடிந்த பிறகு இன்னொருவர் தன்னுடைய செயல்பாட்டை தொடங்கிய நிலையில், அதுவும் முன்னவர் வாழ்ந்த நிலத்திற்கு தொடர்பில்லாத மற்றொரு நாட்டில், வேறு விதமான செயல் செயல்பாட்டை தொடங்கியவருடன் ஒப்பிடுவது என்பது அறிவு நாணயமற்றது.
ஆண்களின் பாலியல் உணர்வு குறித்து பெரியார் சொன்னதாக சீமானும் அவரைச் சேர்ந்தவர்களும் ஒரு கருத்தை வெளியிட்டார்கள். பெரியார் அப்படி சொல்லவே இல்லை என்றும், பெரியார் சொன்னது என்ன என்றும் பெரியார் இயக்க கொள்கையாளர்கள் ஆதாரத்துடன் விளக்குகிறார்கள். ஆனால் சீமான், மணியரசன் உள்ளிட்டவர்கள் பெரியார் அப்படி பேசியிருக்கிறார் என்று மீண்டும் விமர்சனம் வைத்தார்கள். அவர்களுடைய விமர்சனத்திற்கு ஆதாரம் வேண்டும் என்று அரசியல் தளத்திலிருந்து பலரும் கோரிக்கை வைத்த நிலையில், பல நாட்கள் ஆகியும் சீமானால் எந்த ஆதாரத்தையும் காட்ட முடியவில்லை. ஏனென்றால் பெரியார் அப்படி பேசவில்லை. அவர் கற்பு குறித்து கடுமையாக பேசியிருக்கிறார். பெண் சுதந்திரம் குறித்து முற்போக்காக பேசியிருக்கிறார். பெண்கள் தங்கள் கர்ப்பப்பையை அகற்றி விடலாம் என்று கூட சொல்லி இருக்கிறார். ஆனால் பாலியல் சுதந்திரம் குறித்த கொச்சையான கருத்துக்களை அவர் ஒருபோதும் சொன்னதில்லை என்பதை பெரியார் இயக்க தொண்டர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.
பெரியார் பற்றி சீமான் சொன்னதற்கு ஆதாரம் எதுவும் காட்டாததால், அவர் மீது காவல்துறையிலும் நீதிமன்றத்திலும் புகார்களை பதிவு செய்த நிலையில், பெரியாரிய இயக்கத்தை சேர்ந்த பலரும் அவருடைய வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தினர். போராட்டக்காரர்களை முறைப்படி காவல்துறை கைது செய்தது. அதே நேரத்தில் சீமான் வீட்டுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் அவரது கட்சியை சேர்ந்த பெண்கள் உருட்டுக் கட்டைகளுடன் அணி திரண்டு நின்றனர். இங்குதான் பெரியார் பற்றி சீமானுக்கோ அவரது கட்சியினருக்கோ எந்த புரிதலும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமானது.
பெண்களின் கைகளில் கரண்டியை கொடுத்து, காலம் காலமாக சமையல் கட்டில் அவர்களை முடக்கிப் போட்டு இருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்றால் கரண்டியை பறித்து விட்டு புத்தகத்தை கொடுங்கள் என்று சொன்னவர் பெரியார். கல்வியும், பொது அறிவும் பெண்களை தன்னம்பிக்கையுடன் வாழச் செய்யும் என்பதே அவரது கருத்து. புத்தகத்தை கொடுக்க வேண்டிய கையில் உருட்டுக்கட்டையை கொடுத்திருப்பவர் ஒரு கட்சியின் தலைவர் என்பதை நினைக்கும் பொழுது இவர்களின் அரசியல் வழி எப்படிப்பட்டது என்ற கேள்வி பொது மக்களுக்கு எழவே செய்யும்.
பெரியார் மீது வைத்த விமர்சனத்திற்கு ஆதாரம் காட்ட முடியாத இயலாமையில் தன்னுடைய கருத்துக்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்கக் கூடிய அரசியல் நேர்மையும் இல்லாத நிலையில் தான் சீமான் திசை திருப்பும் திரிபு வாதத்தின் அடிப்படையில் பெரியாரா பிரபாகரனா என்று விவாதிக்கலாமா எனக் கேட்கிறார்.
பெரியாரின் போராட்டம் என்பது சமூக விடுதலைக்கானது. அதில் தனிநாடு கோரிக்கையும் அடங்கும். எனினும் அதற்காக அவர் ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டவர் அல்ல. எந்த போராட்டத்திலும் வன்முறை இருக்கக் கூடாது என்பதை அவர் தன் தொண்டர்களுக்கு கட்டுப்பாட்டுடன் விளக்கியவர். இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டமாக இருந்தாலும், அரசியல் சட்ட எரிப்பு போராட்டமாக இருந்தாலும் அரசாங்கத்தின் நடைமுறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், கைது செய்யப்படும் பொழுது நீதிமன்றத்தில் தங்களுடைய நியாயத்தை எடுத்துச் சொல்லி வாக்குமூலம் கொடுத்து, தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, வழக்காட கூடாது என்பதை வலியுறுத்தி அதன்படி ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சிறை புகுந்தவர் பெரியார். 95 வயது வரையிலான அவருடைய பொது வாழ்க்கையில் தொடர்ச்சியாக மேற்கொண்ட பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களால் தன்னுடைய கருத்துகள் தன் கண்முன்னாலேயே சட்ட வடிவமானதை கண்ட உலகின் முதல் சீர்திருத்தவாதி அவரே.
பிரபாகரனின் வழி வேறு. இலங்கையில் இனவாதம் தலைதூக்கி தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் கொடும் தாக்குதல் நடத்திய போது அதனை எதிர்கொள்ள ஆயுதத்தை ஏந்தியது பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பு. அவர்களைப் போலவே மேலும் பல போராளி குழுக்களும் தமிழர்களின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் தனித் தமிழீழம் என்ற கோரிக்கையுடன் ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டனர். இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய போது தமிழ்நாட்டில் பெரியார் உயிருடன் இல்லை. எனினும் பெரியார் இயக்கத்தினர் விடுதலைப் புலிகளையும் மற்ற போராளி குழுக்களையும் முழுமையாக ஆதரித்து அவர்களின் முயற்சிக்கு துணை நின்றவர்கள். அறவழி போராட்டங்களை தமிழ்நாட்டில் நடத்தியவர்கள். அதற்காக சிறை சென்றவர்கள். இதற்கான சான்றுகள் பிரபாகரனுடன் பெரியார் இயக்கத் தலைவர்கள் உடன் இருக்கும் ‘ஒரிஜினல் போட்டோக்கள்’ மூலமாகவே உறுதி செய்யப்படுகின்றன. ஒரு கட்டத்தில் இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் இலங்கை ராணுவத்தால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. பிரபாகரனும் போர்க்களத்தில் உயிரிழக்க நேரிடுகிறது. தமிழீழம் என்கின்ற தனிநாடு கோரிக்கையும் தற்போதைய நிலையில் முன்னெடுக்க வாய்ப்பு இல்லாத சூழலில் உள்ளது.
பெரியாரும் பிரபாகரனும் உயிருடன் இல்லாத நிலையில் இவரா அவரா என்ற வாதத்தை முன் வைப்பது நிழலுடன் போடுகின்ற கத்திச் சண்டையாகவே அமையும். குழப்பத்திற்கும் மோதலுக்கும் வழி வகுக்கின்ற உடல் மொழியுடன், மிரட்டுகின்ற தொனியிலான சொற்களுடன் சீமான் தொடர்ந்து பேசி வருவது அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டுவதற்கு அவருக்கு யாரோ கொடுத்த அசைன்மென்ட்டை நிறைவேற்றுகிறாரோ என்ற சந்தேகமே எழுகிறது.
பிரபாகரன் இறந்த பிறகு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எந்த ஒரு துரும்பையும் நகர்த்தாத சீமான் போன்றவர்கள் திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் பாய்ச்சல் நடத்திக் கொண்டிருப்பது அவர்கள் பிரபாகரனுக்கும் சேர்த்தே துரோகம் செய்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகிறது. இறுதிவரை போர் நடத்தி சிங்கள ராணுவத்தை எதிர்கொண்ட போராளி அமைப்பின் தலைவரை முனியாண்டி விலாஸ் பரோட்டா மாஸ்டர் போல சீமான் தொடர்ந்து சித்தரித்து வருவது அவருக்கு இருக்கும் உளவியல் சிக்கலை காட்டுகிறது.
நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக தனித்து தேர்தலில் நின்று, தன்னுடைய வாக்கு சதவீதத்தை அதிகரித்து மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கும் நிலையில் சீமானின் இந்த போக்கு அவருடைய கட்சி நிர்வாகிகளிடமே அதிருப்தியை உண்டாக்கி இருப்பதை கட்சியிலிருந்து வெளியேறுகிறவர்களின் கணக்கு காட்டுகிறது அதுமட்டுமின்றி நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் இளைஞர்களின் ஈர்ப்பாக இருக்கின்ற காரணத்தினால் அந்தக் கட்சியினால் முதலில் பாதிக்கப்படும் நிலையில் இருப்பது நாம் தமிழர் கட்சி தான் என்பது சீமானுக்கு புரிகிறது. எல்லா விரக்தியும் சேர்ந்து அவரை குழப்பி, அவர் மனதில் வன்மத்தை அதிகரித்து, அதையே வார்த்தைகளாக வெளிப்படுத்த செய்கிறது.
தமிழ்நாட்டு அரசியலில் தலைவர்களுக்கிடையே எத்தனையோ மோதல்கள் இருந்திருக்கின்றன. கருத்து ரீதியான அந்த மோதல்கள் எல்லை தாண்டியும் கூட சென்று இருக்கின்றன. ஆனாலும் அவை தனிப்பட்ட வன்மமாகவோ, வன்முறையாகவோ மாறியதில்லை. தமிழ்நாட்டின் இந்தத் தொடர்ச்சியான அரசியல் கண்ணியத்தை சிதைக்க நினைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் சீமான். இது இத்தனை காலம் அவர் பேசிய கருத்துகள் மீது முழுமையான சந்தேகத்தை எழுப்பக் கூடியதாக உள்ளது.